திருப்புகழ் 989 மின்னார் பயந்த (முள்வாய்)

தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்த
தன்னா தனந்த தந்த ...... தனதான
மின்னார்  பயந்த  மைந்தர்  தன்னா  டினங்கு  விந்து 
வெவ்வே  றுழன்று  ழன்று  ......  மொழிகூற 
விண்மேல்  நமன்க  ரந்து  மண்மே  லுடம்பொ  ருங்க 
மென்னா  ளறிந்த  டைந்து  ......  உயிர்போமுன் 
பொன்னார்  சதங்கை  தண்டை  முந்நூல்  கடம்ப  ணிந்து 
பொய்யார்  மனங்கள்  தங்கு  ......  மதுபோலப் 
பொல்லே  னிறைஞ்சி  ரந்த  சொன்னீ  தெரிந்த  ழுங்கு 
புன்னா  யுளுங்க  வின்று  ......  புகுவாயே 
பன்னா  ளிறைஞ்சு  மன்பர்  பொன்னா  டுறங்கை  தந்து 
பன்னா  கணைந்து  சங்க  ......  முறவாயிற் 
பன்னூல்  முழங்க  லென்று  விண்ணோர்  மயங்க  நின்று 
பண்ணூ  துகின்ற  கொண்டல்  ......  மருகோனே 
முன்னாய்  மதன்க  ரும்பு  வின்னேர்  தடந்தெ  ரிந்து 
முன்னோர்  பொருங்கை  யென்று  ......  முனையாட 
மொய்வார்  நிமிர்ந்த  கொங்கை  மெய்ம்மா  தர்வந்தி  றைஞ்சு 
முள்வாய்  விளங்க  நின்ற  ......  பெருமாளே. 
  • மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்று உழன்று மொழி கூற
    (வீட்டில் உள்ள) பெண்டிர், பெற்ற மக்கள், தான் பிறந்த நாடு, சுற்றத்தினர் யாவரும் கும்பலாகக் கூடியும், தனியாகவும் அங்கும் இங்கும் சென்று சென்று (என்னைப் பற்றிப்) பேச்சுக்கள் பேசி,
  • விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அம் மெல் நாள் அறிந்து அடைந்து உயிர் போ முன்
    ஆகாயத்தில் யமன் (கண்ணுக்குத்) தெரியாமல் மறைவாக இருந்து, மண் மேல் உள்ள இந்த உடம்பினின்று உயிர் அடஙகும் அந்த மெலிவு நாளைத் தெரிந்து வர, என் உயிர் போவதற்கு முன்பாக,
  • பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல
    பொன்னாலாகிய சதங்கை, தண்டை (ஆகியவற்றைக் கழலிலும்), முப்புரி நூல், கடப்ப மாலை (இவைகளைத் தோள்களிலும்) அணிந்துகொண்டு, மெய்ம்மையாளர்களின் மனங்களில் நீ வாசம் செய்து அவர்களுக்கு உதவுவது போல,
  • பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழுங்கு புல் நாய் உ(ள்)ளும் கவின்று புகுவாயே
    இந்தப் பொல்லாதவனாகிய நான் வணங்கி உன்னை வேண்டுகின்ற சொல்லை நீ பொருட்படுத்தித் தெரிந்து கொண்டு, மனம் வருந்தும் இந்த இழிந்த நாயேனாகிய அடியேன் உள்ளத்திலும் அழகுறப் புகுந்து அருளுவாயாக.
  • பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை தந்து
    பல நாட்களாக வணங்கி வரும் அடியார்களாகிய தேவர்கள் தங்கள் பொன்னுலகத்தை அடைய அவர்களுக்கு உனது மேலான அழகிய கை கொடுத்து உதவி செய்தவனே,
  • பன்னாக(ம்) அணைந்து சங்கம் உற வாயில் பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே
    பாம்பணையில் படுக்கை கொண்டு, (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கை திருவாயில் வைத்து, பல சாஸ்திரங்களும் இச் சங்கத் தொனியில் முழங்குகின்றது என்னும்படி தேவர்களும் மயங்கி நின்று கேட்க, பலவித பண்களையும் ஊதிய மேகவண்ணனாகிய திருமாலின் மருகனே,
  • முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொரு(ங்)கை என்று
    மன்மதன் முன்னதாக நின்று (தனது) கரும்பு வில்லை எய்ய வேண்டிய இடத்தை அறிந்து முன்னதாகவே ஒரு போர் செய்யும் தொழிலை மேற்கொண்டது போல
  • முனை ஆட மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம் மாதர் வந்து இறைஞ்சு
    போர் புரிய நெருங்கி கச்சு நிமிர்ந்துள்ள மார்பினை உடையவர்களும், உண்மைக் குணம் கொண்டவர்களுமான மாதர்கள் வந்து வணங்குகின்ற
  • முள்வாய் விளங்க நின்ற பெருமாளே.
    முள்வாய்* என்னும் தலத்தில் விளக்கமுற நிற்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com