திருப்புகழ் 988 ஆகத்தே தப்பாமல் (காமத்தூர்)

தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் ...... தனதானா
ஆகத்  தேதப்  பாமற்  சேரிக் 
கார்கைத்  தேறற்  ......  கணையாலே 
ஆலப்  பாலைப்  போலக்  கோலத் 
தாயக்  காயப்  ......  பிறையாலே 
போகத்  தேசற்  றேதற்  பாயற் 
பூவிற்  றீயிற்  ......  கருகாதே 
போதக்  காதற்  போகத்  தாளைப் 
பூரித்  தாரப்  ......  புணராயே 
தோகைக்  கேயுற்  றேறித்  தோயச் 
சூர்கெட்  டோடப்  ......  பொரும்வேலா 
சோதிக்  காலைப்  போதக்  கூவத் 
தூவற்  சேவற்  ......  கொடியோனே 
பாகொத்  தேசொற்  பாகத்  தாளைப் 
பாரித்  தார்நற்  ......  குமரேசா 
பாரிற்  காமத்  தூரிற்  சீலப் 
பாலத்  தேவப்  ......  பெருமாளே. 
  • ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு ஆர்கை தேறல் கணையாலே
    உடலிலே வந்து குறி தப்பாமல் தைக்கின்ற (மன்மதனுடைய) கையில் உள்ள கரும்பு வில்லினின்று புறப்படும் மது நிறைந்த மலர்ப் பாணங்களாலும்,
  • ஆலப் பாலைப் போலக் கோலத்து ஆயக் காயப் பிறையாலே
    விஷம் கொண்டதாய், பால் போலும் வெண்மையானஅழகு வாய்ந்த வடிவம் உடைய நிலவாலும்,
  • போகத்து ஏசற்றே தன் பாயல் பூவில் தீயில் கருகாதே
    புணர்ச்சி இன்பத்தில் ஆசைப்பட்டு, தன் படுக்கையில் நெருப்புப்பட்ட பூவைப்போலக் கருகிப் போகாமல்,
  • போதக் காதல் போகத் தாளைப் பூரித்து ஆரப் புணராயே
    அவள் பிழைத்துப் போகும்படி, ஆசை வைத்துள்ள இன்பத்துக்கு இடமான (உனது) திருவடியில் (என் மகள்) மகிழ்ச்சி அடைய, நன்கு அவளைச் சேர்ந்து அருள மாட்டாயா?
  • தோகைக்கே உற்று ஏறித் தோயம் சூர் கெட்டு ஓடப் பொரும் வேலா
    (இந்திரனாகிய) மயில் மேல் பொருந்தி ஏறி, கடல் நீரில் நின்ற சூரன் அழிந்து ஓடும்படி போர் செய்த வேலனே,
  • சோதிக் காலைப் போதக் கூவு அத் தூவல் சேவல் கொடியோனே
    சூரியன் காலையில் உதிக்கும்படிக் கூவுகின்ற, அந்த இறகு உடைய கோழிக் கொடியை உடையவனே,
  • பாகு ஒத்தே சொல் பாகத்தாளைப் பாரித்து ஆர் நல் குமரேசா
    சர்க்கரைப் பாகுக்கு ஒத்த இனிமையான சொற்களின் பக்குவம் உடைய வள்ளியை விரும்பி உள்ளம் மகிழும் நல்ல குமரேசனே,
  • பாரில் காமத்தூரில் சீலப் பாலத் தேவப் பெருமாளே.
    இந்த உலகத்தில் காமத்தூர் என்னும் தலத்தில் தூய்மை கொண்ட குழந்தையாக அமர்ந்த தெய்வப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com