திருப்புகழ் 987 வழக்குச் சொற்பயில் (ஒடுக்கத்துச் செறிவாய்)

தனத்தத் தத்தன தாத்த தத்தன
தனத்தத் தத்தன தாத்த தத்தன
தனத்தத் தத்தன தாத்த தத்தன ...... தனதான
வழக்குச்  சொற்பயில்  வாற்ச  ளப்படு 
மருத்துப்  பச்சிலை  தீற்று  மட்டைகள் 
வளைத்துச்  சித்தச  சாத்தி  ரக்கள  ......  வதனாலே 
மனத்துக்  கற்களை  நீற்று  ருக்கிகள் 
சுகித்துத்  தெட்டிக  ளூர்த்து  திப்பரை 
மருட்டிக்  குத்திர  வார்த்தை  செப்பிகள்  ......  மதியாதே 
கழுத்தைக்  கட்டிய  ணாப்பி  நட்பொடு 
சிரித்துப்  பற்கறை  காட்டி  கைப்பொருள் 
கழற்றிக்  கற்புகர்  மாற்று  ரைப்பது  ......  கரிசாணி 
கணக்கிட்  டுப்பொழு  தேற்றி  வைத்தொரு 
பிணக்கிட்  டுச்சிலு  காக்கு  பட்டிகள் 
கலைக்குட்  புக்கிடு  பாழ்த்த  புத்தியை  ......  யொழியேனோ 
அழற்கட்  டப்பறை  மோட்ட  ரக்கரை 
நெருக்கிப்  பொட்டெழ  நூக்கி  யக்கணம் 
அழித்திட்  டுக்குற  வாட்டி  பொற்றன  ......  கிரிதோய்வாய் 
அகப்பட்  டுத்தமிழ்  தேர்த்த  வித்தகர் 
சமத்துக்  கட்டியி  லாத்த  முற்றவன் 
அலைக்குட்  கட்செவி  மேற்ப  டுக்கையி  ......  லுறைமாயன் 
உழைக்கட்  பொற்கொடி  மாக்கு  லக்குயில் 
விருப்புற்  றுப்புணர்  தோட்க்ரு  பைக்கடல் 
உறிக்குட்  கைத்தல  நீட்டு  மச்சுதன்  ......  மருகோனே 
உரைக்கச்  செட்டிய  னாய்ப்பன்  முத்தமிழ் 
மதித்திட்  டுச்செறி  நாற்க  விப்பணர் 
ஒடுக்கத்  துச்செறி  வாய்த்த  லத்துறை  ......  பெருமாளே. 
  • வழக்குச் சொல் பயில்வால் சளப்படு மருத்துப் பச்சிலை தீற்றும் மட்டைகள்
    வழக்காடும் சொற்களில் பயின்றுள்ளதால் வஞ்சனைக்கு இடமான மருந்துகளையும் பச்சிலைகளையும் ஊட்டுகின்ற பயலினிகள்.
  • வளைத்துச் சித்தச சாத்திரக் களவு அதனாலே மனத்துக் கற்களை நீற்று உருக்கிகள்
    (ஆண்களைத் தம் பால்) வளைத்து இழுத்து, மன்மதனுடைய காம நூலில் கூறியுள்ள வஞ்சக வழிகளால் (தம்மிடம் வந்தவர்களின்) கல் போன்ற மனத்தையும் பொடிபடுத்தி உருக்க வல்லவர்கள்.
  • சுகித்துத் தெட்டிகள் ஊர்த் துதிப்பரை மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள்
    சுகத்தை அடைந்து வஞ்சிப்பவர்கள். ஊரில் தம்மைத் துதிப்பவர்களை மயக்கி சூது நிறைந்த வார்த்தைகளைப் பேசுபவர்கள்.
  • மதியாதே கழுத்தைக் கட்டி அணாப்பி நட்பொடு சிரித்துப் பல் கறை காட்டி
    மதிப்பு வைக்காமலே கழுத்தைக் கட்டி, ஏமாற்றி, நட்பு காட்டிச் சிரித்து, பல்லில் (வெற்றிலை உண்ட) கறையைக் காட்டி,
  • கைப்பொருள் கழற்றிக் கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு ஆணி கணக்கிட்டுப் பொழுது ஏற்றி வைத்து
    கையில் உண்டான பொருளைப் பிடுங்கி, அது ரத்தினக் கல்லானால் (அதன்) நிறம் முதலியனவற்றையும், (தங்கம் கிடைத்தால்) அதன் மாற்றறிய உரைத்துப் பார்க்க, குற்றம் இவைகளை அறிய உரைகல்லால் உரசி, கணக்குப் பார்த்து, காலம் கடத்தி,
  • ஒரு பிணக்கு இட்டுச் சிலுகு ஆக்கு பட்டிகள்
    ஒரு சண்டை இட்டு, குழப்பம் உண்டு பண்ணும் விபசாரிகள்.
  • கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ
    இந்த வேசிகளுடன் ஒருங்கே இணைந்து புக்கிருக்கும் பாழான புத்தியை நான் விலக்க மாட்டேனோ?
  • அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி
    நெருப்பு போன்ற கண்ணையும் பொய்யையும் சூதையும் கொண்ட, மடமை நிறைந்த அசுரர்களை நசுக்கிப் பொடியாகும்படி முறித்துத் தள்ளி,
  • அக்கணம் அழித்திட்டுக் குறவாட்டி பொன் தன கிரி தோய்வாய்
    அந்தக் கணத்திலேயே அவர்களை அழித்து, குறப் பெண் வள்ளியின் அழகிய மார்பாகிய மலையைத் தழுவுவனே,
  • அகப்பட்டுத் தமிழ் தேர்த்த வித்தகர் சமத்துக் கட்டியில் ஆத்தம் உற்றவன்
    தமிழில் வல்ல அறிஞர்களிடத்தில் வசப்பட்டு* 1 சாமர்த்தியமான கவியின் ஈற்றடியிலுள்ள இறுதிப் பொருளில் விருப்பம் கொண்டவனும்,
  • அலைக்குள் கண் செவி மேல் படுக்கையில் உறை மாயன்
    கடலில் (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும் மாயனுமாகிய திருமாலுக்கு (முனிவர் உருவில் வந்தபோது)
  • உழைக் கண் பொன் கொடி மாக் குலக் குயில் விருப்பு உற்று புணர் தோள் க்ருபைக் கடல்
    (லக்ஷ்மியாகிய) மானின் இடத்தே பிறந்த அழகிய கொடி போன்ற சிறந்த குயில் அனைய வள்ளியின் மீது காதல் கொண்டு அவளை அணைந்த தோளை உடைய கருணைக் கடலே,
  • உறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன் மருகோனே
    உறிக்குள்ளே கையை நீட்டிய (வெண்ணெய் திருடிய) கண்ணனின் மருகனே,
  • உரைக்கச் செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு
    உண்மைப் பொருளைத் தெரிவிக்க (ருத்திர சன்மன் என்னும்) செட்டியாக* 2 பல சங்கப் புலவர்கள் கூறிய தமிழ்ப் பொருள்களை ஆராய்ந்து மதித்து,
  • செறி நால் கவிப்பணர் ஒடுக்கத்துச் செறிவாய்த் தலத்து உறை பெருமாளே.
    நிறைந்த நால்வகைக் கவிகளிலும்* 3 வல்ல கவிகளுடன் சேர்ந்து, ஒடுக்கத்து செறிவாய்* 4 என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com