தனதன தாத்தன தனதன தாத்தன
தனதன தாத்தன ...... தந்ததான
விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல்
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
விழைவுகு ராப்புனை ...... யுங்குமார
முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி
மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
முழுதும லாப்பொருள் தந்திடாயோ
பரகதி காட்டிய விரகசி லோச்சய
பரமப ராக்ரம ...... சம்பராரி
படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே.
- விரகற நோக்கியும்
தந்திரம் ஏதும் இல்லாத நேரான பார்வையோடு உன்னை நோக்கிக் கருதியும், - உருகியும் வாழ்த்தியும்
உன்னை நினைந்து மனம் உருகியும், உன்னைத் துதித்து வாழ்த்தியும், - விழிபுனல் தேக்கிட
கண்களில் நீர் நிறைந்து வழிய, - அன்புமேன்மேல் மிகவும்
பக்தி மேலும் மேலும் பெருகவும், - இராப்பகல் பிறிது பராக்கற
இரவும் பகலும் மற்ற விஷயங்களில் சிந்தனை அற்றுப்போக, - விழைவு குராப் புனையுங் குமார
விருப்பமுடன் குராமலரை அணியும் குமரனே, - முருக ஷடாக்ஷர சரவண
முருகனே, ஆறெழுத்து அண்ணலே, சரவணபவனே, - கார்த்திகை முலைநுகர் பார்த்திப
கார்த்திகைப் பெண்களின் முலைப்பால் அருந்தி அருளிய அரசனே, - என்றுபாடி
என்றெல்லாம் பாடி, - மொழிகுழறாத் தொழுது
மொழிகள் குழறும்படி உன்னைத் தொழுது, - அழுதழுது ஆட்பட
ஓயாமல் அழுது யான் உன்னால் ஆட்கொள்ளப்பட, - முழுதும் அலாப்பொருள்
உலகப் பொருட்கள் யாவற்றையும் கடந்த ஞானப் பொருளை - தந்திடாயோ
அடியேனுக்குத் தரமாட்டாயா? - பரகதி காட்டிய விரக
உபதேச* மூலமாக மோக்ஷ வீட்டைக் காட்டிய சாமர்த்தியசாலியே, - சிலோச்சய
மலை அரசனே, - பரம பராக்ரம
மிக்க பராக்கிரமசாலியே, - சம்பராரி படவிழியாற்பொரு
மன்மதன் சாம்பலாய் அழிய நெற்றிக்கண் கொண்டு அவனை எரித்த - பசுபதி போற்றிய பகவதி
பசுபதி சிவபிரான் போற்றிய பகவதியாகிய - பார்ப்பதி தந்தவாழ்வே
பார்வதி பெற்றளித்த பெருவாழ்வே, - இரைகடல் தீப்பட
அலை ஓசை ஒலிக்கும் கடல் எரிபடவும், - நிசிசரர் கூப்பிட
அசுரர்கள் அலறி கூப்பாடு போடவும், - எழுகிரி யார்ப்பெழ
கிரெளஞ்சமலைக் கூட்டங்களான ஏழு மலைகளும் அதிர்ந்து ஆர்ப்பரிக்கவும், - வென்றவேலா
வெற்றி கொண்ட வேலனே, - இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
தேவர்களின் உலகில் யாவரையும் நிறைவாகக் குடியேற்றிய - எழுகரை நாட்டவர் தம்பிரானே.
எழுகரைநாடு** என்ற தலத்தவர் தம்பிரானே.