தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான
விதிபோலு முந்த விழியாலு மிந்து
நுதலாலு மொன்றி ...... யிளைஞோர்தம்
விரிவான சிந்தை யுருவாகி நொந்து
விறல்வேறு சிந்தை ...... வினையாலே
இதமாகி யின்ப மதுபோத வுண்டு
இனிதாளு மென்று ...... மொழிமாதர்
இருளாய துன்ப மருள்மாயை வந்து
எனையீர்வ தென்றும் ...... ஒழியாதோ
மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி
வருமால முண்டு ...... விடையேறி
மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்
வருதேவ சம்பு ...... தருபாலா
அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற
அயில்வேல்கொ டன்று ...... பொரும்வீரா
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே.
- விதி போலும் உந்து அவ் விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி
இளைஞோர் தம்
விதி போல முற்பட்டு வினைப்படும் அந்தக் கண்களாலும், பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியாலும் ஈடுபட்ட இளைஞர்களுடைய - விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை
வினையாலே
விரிந்த சிந்தையில் உருவெளித் தோற்றமாய் நின்று நோவும்படி செய்து, அந்த இளைஞர்களின் வன்மையும் மனமும் மாறுபடச் செய்யும் செயல்களால், - இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று
மொழி மாதர்
அன்பு பூண்டு இன்பத் தேனை நிரம்ப உண்டு எங்களை இனிது அனுபவியுங்கள் என்று சொல்லுகின்ற மாதர்களால் வரும் - இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும்
ஒழியாதோ
இருளான துன்பமும், மருட்சி தரும் மாயையும் வந்து என் நெஞ்சைப் பிளவு செய்தல் எக்காலத்தும் தொலையாதோ? - மதி சூடி அண்டர் பதி வாழ மண்டி வரும் ஆலம் உண்டு
விடை ஏறி
பிறையைச் சூடியவரும், தேவர்கள் ஊர் வாழும்படி, நெருங்கி வந்த ஆலகால விஷத்தை உண்டு, நந்தியாகிய ரிஷப வாகனத்தில் ஏறி வருபவரும், - மறவாத சிந்தை அடியார்கள் பங்கில் வரு தேவ சம்பு தரு
பாலா
மறவாத மனத்தை உடைய அடியார்கள் பங்கில் வருகின்றவரும் ஆகிய தேவருமான சிவ பெருமான் பெற்ற பாலனே, - அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல்
கொ(ண்)டு அன்று பொரும் வீரா
அதிக மாயைகளைச் செய்து வந்த சூரர் அழிய, கூரிய வேலைக் கொண்டு அன்று போர் செய்த வீரனே, - அழகான செம் பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய்
உகந்த பெருமாளே.
அழகிய செம்பொன் மயிலின் மேல் அமர்ந்து, திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே.