தந்தன தான தந்தன தான
தந்தன தான ...... தனதான
விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி ...... யினிமேலோ
விண்டுவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல ...... அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான ...... வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத ...... மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு ...... தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி ...... லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் ...... பெருமாளே.
- விந்ததி னூறி வந்தது காயம்
சுக்கிலத்திலிருந்து ஊறி வந்தது இந்த உடம்பு. - வெந்தது கோடி
நெருப்பில் வீழ்ந்து வெந்த உடம்போ கோடிக்கணக்கானவை. - இனிமேலோ விண்டுவி டாமல்
இனியாவது உன்னை விட்டு நீங்காதிருக்கும் பொருட்டு, - உன்பத மேவு விஞ்சையர் போல
உன் திருவடிகளை விரும்பும் அறிஞர்களைப் போல - அடியேனும் வந்து விநாச முன்கலி தீர
யானும் நன்னெறிக்கு வந்து, பேரழிவாகிய முன்வினைக் கேடு நீங்க, - வண்சிவ ஞானவடிவாகி
வளமையான சிவஞானத்தின் வடிவை அடைந்து, - வன்பதம் ஏறி யென்களை யாற
வலிமையான முக்திப்பதத்தைப் பெற்று, என் பிறவிக் களைப்பு தீருமாறு - வந்தருள் பாத மலர்தாராய்
என் முன் வந்து அருள்மயமான உன் திருப்பதங்களெனும் மலரினைத் தருவாயாக. - எந்தனு ளேக செஞ்சுட ராகி
எனது உள்ளத்தில் ஒப்பற்ற செழும் ஜோதியாக விளங்கி, - யென்கணி லாடு தழல்வேணி
என் கண்களில் நடனம் ஆடுகின்ற, நெருப்பு நிறமான ஜடாமுடியுடைய - எந்தையர் தேடும் அன்பர்சகாயர்
எனது தந்தையாரும், அன்பினால் தேடும் அடியார்க்கு உதவுகின்றவரும், - எங்கள் சுவாமி யருள்பாலா
எங்கள் இறைவனுமாகிய சிவபெருமான் அருளிய குமரனே, - சுந்தர ஞான மென்குற மாதுதன்
அழகும், ஞான அறிவும், மென்மையும் நிறைந்த குறப்பெண் வள்ளியின் - திரு மார்பில் அணைவோனே
திருமார்பினைத் தழுவுபவனே, - சுந்தர மான செந்திலில் மேவு
அழகு மிகுந்த திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள - கந்தசு ரேசர் பெருமாளே.
கந்தனே, தேவர் தலைவர்களின் பெருமாளே.