தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த ...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே.
- விறல்மாரன்
வீரனாம் மன்மதன் - ஐந்து மலர்வாளி சிந்த
ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,* - வானி லிந்து மிக வெயில் காய
ஆகாயத்தில் நிலவு அதிகமாக வெயில் போலக் காய, - மிதவாடை வந்து
நிதானமான தென்றல் காற்று வந்து - தழல்போல வொன்ற
தீப்போல வீசிப் பொருந்த, - வினைமாதர் தந்தம் வசைகூற
வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூற, - குறவாணர் குன்றி லுறை
குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும் - பேதை கொண்ட
(வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய நான் அடைந்த - கொடிதான துன்ப மயல்தீர
கொடிய துன்ப விரக மயக்கம் தீர, - குளிர்மாலை யின்க ண்
குளிர்ந்த மாலைப் பொழுதினிலே - அணிமாலை தந்து
நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து - குறைதீர வந்து குறுகாயோ
என் குறையைத் தீர்க்க வந்து அணுகமாட்டாயா? - மறிமா னுகந்த இறையோன்
இள மானை உகந்து ஏந்தும் இறைவன் சிவபிரான் - மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா
(உன் உபதேசம் பெற்று) மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே, - மலைமாவு சிந்த
கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வீழ்ந்து படவும், - அலைவேலை யஞ்ச
அலைகடல் கொந்தளித்து அஞ்சவும், - வடிவே லெறிந்த அதிதீரா
கூரிய வேலை வீசிய அதி தீரனே, - அறிவால் அறிந்து
அறிவு கொண்டு உன்னை அறிந்து, - உன்னிருதாள் இறைஞ்சும்
உனது இரு தாள்களையும் வணங்கும் - அடியார் இடைஞ்சல் களைவோனே
அடியார்களின் துயரைக் களைபவனே, - அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து - அலைவா யுகந்த பெருமாளே.
திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும் பெருமாளே.