திருப்புகழ் · 102வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்)

தந்தா தந்தா தந்தா தந்தா
தந்தா தந்தத் ...... தனதான

Yaazh Music

வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் ...... படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் ...... கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் ...... பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் ...... கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற் ...... பெருமாளே.

பத உரை

  • வெங்கா ளம்பாணஞ்சேல் கண்
    கொடிய நஞ்சு, அம்பு, சேல் மீன் - இவற்றை ஒத்த கண்கள்,
  • பால் மென்பாகு அஞ்சொற் குயில்
    பால், மென்மையான வெல்லப்பாகு போன்ற இனிமையான, குயிலை நிகர்க்கும் சொற்கள்,
  • மாலை மென் கேசந்தா னென்றே கொண்டார்
    இருளை ஒத்த மெல்லிய கூந்தல்தான் என்று இவ்வகையாகக் கொண்டுள்ள பொது மாதர்களின்
  • மென்றோள் ஒன்றப் பொருள்தேடி
    மென்மையான தோள்களைத் தழுவுவதற்காகப் பொருள் தேட வேண்டி,
  • வங்காளஞ் சோனஞ் சீனம்போய்
    வங்காள நாடு, சோனக நாடு*, சீனா முதலிய தூரமான இடங்களுக்குப் போய்
  • வன்பே துன்பப் படலாமோ
    வம்பிலே கொடிய துன்பத்தைப் படலாமோ?
  • மைந்து ஆருந்தோள் மைந்தா அந்தா
    வலிமை மிகுந்த தோள்களைக் கொண்ட குமரனே, அழகனே,
  • வந்தே யிந்தப் பொழுதாள்வாய்
    வந்து இந்த நொடியிலேயே என்னை ஆண்டருள்வாயாக.
  • கொங்கார் பைந்தேனுண்டே வண்டார்
    வாசனை மிக்க பசுந்தேனை உண்டே வண்டுகள் நிரம்பும்
  • குன்றாள் கொங்கைக் கினியோனே
    வள்ளிமலையில் வசிக்கும் வள்ளியின் மார்பை இனிமையாக அணைவோனே,
  • குன்றோடுஞ் சூழ் அம்பேழுஞ் சூரும்
    சூரனுக்கு அரணாக விளங்கிய ஏழு மலைகளும், ஏழு கடல்களும், அந்தச் சூரனும்,
  • போய் மங்கப் பொருகோபா
    பட்டு அழியும்படியாக போர் செய்த சினத்தை உடையவனே,
  • கங்காளஞ்சேர் மொய்ம்பார் அன்பார் கன்றே
    எலும்புகளும் கபாலமும் சேர்ந்த மாலையை அணிந்த தோளை உடைய சிவனாரின் அன்பு நிறைந்த குழந்தாய்,
  • உம்பர்க் கொருநாதா
    தேவர்களின் ஒப்பற்ற தலைவனே,
  • கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய்
    சங்குகள் தவழும் கடலின் தெற்குக்கரையில் இருக்க வந்தவனே,
  • கந்தா செந்திற் பெருமாளே.
    கந்தனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * சோனகம் 56 தேசங்கள் சேர்ந்த பாரத நாட்டில் ஒரு தேசம்.
  • * ChOnakam is one of the 56 countries that constituted India in olden times.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout