தந்த தானன தானன தந்த தானன தானன
தந்த தானன தானன ...... தனதான
வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு
வின்ப சாகர மோவடு ...... வகிரோமுன்
வெந்து போனபு ராதன சம்ப ராரிபு ராரியை
வென்ற சாயக மோகரு ...... விளையோகண்
தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத
சங்க மாதர்ப யோதர ...... மதில்மூழ்கு
சங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு
தண்டை சேர்கழ லீவது ...... மொருநாளே
பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர்
பண்டு போலம ராவதி ...... குடியேறப்
பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை
பங்க நீறெழ வேல்விடு ...... மிளையோனே
செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி
திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே
செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு
செந்தில் மாநகர் மேவிய ...... பெருமாளே.
- வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப
சாகரமோ வடு வகிரோ
விரும்பத் தக்க தாமரை மலரோ, கொடிய விஷமோ, கயல் மீனோ, பெரிய இன்பக் கடலோ, மாவடுவின் பிளவோ, - முன் வெந்து போன புராதன சம்பராரி* புராரியை** வென்ற
சாயகமோ கரு விளையோ கண்
முன்பு வெந்து போன பழைய மன்மதன் சிவபெருமான் மீது செலுத்தி வென்ற அம்போ, கரு விளை மலரோ அந்தக் கண்கள்? - தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர்
பயோதரம் அதில் மூழ்கு சங்கை ஓவ
யாவரும் அடைக்கலம் புகும் இடமோ, யம தூதர்களுடைய மனமோ என்று சொல்லக் கூடிய, மோக வெறி பிடித்த சேர்க்கையையே நாடும் விலைமாதர்களுடைய மார்பகங்களில் மூழ்குகின்ற எண்ணம் அழிய, - இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல்
ஈவதும் ஒரு நாளே
உனது இரண்டு, கூதள மலர்களின் நறு மணமுள்ள மாலை தோய்ந்துள்ள, தண்டைகள் விளங்கும் திருவடிகளை நீ அளிப்பதாகிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? - பஞ்ச பாதக தாருக தண்டன் நீறு எழ
ஐந்து பெரிய பாதகங்களையும்*** செய்யும் தாருகன் என்னும் யமனை ஒத்த அசுரன் பொடியாகும்படியும், - வானவர் பண்டு போல் அமராவதி குடி ஏற
தேவர்கள் முன்பு இருந்தபடியே பொன்னுலகத்தில் குடி ஏறவும், - பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு
எழ வேல் விடும் இளையோனே
தாமரையில் வீற்றிருக்கும் பிரமனையும், திருமாலையும் பயப்படாதீர்கள் என்று கூறி, மாயையில் வல்ல (கிரவுஞ்ச) மலை கேடு அடைந்து பொடியாகவும் வேலைச் செலுத்திய இளையவனே. - செம் சடை அடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள்
சூடிய நாயகர் பெரு வாழ்வே
சிவந்த சடைக்காட்டின் மேலே, கங்கை, குருக்கத்தி, ஆத்தி, சந்திரன் இவைகளைச் சூடிய தலைவராகிய சிவ பெருமான் அளித்த பெரிய செல்வமே, - செண்பக அடவி நீடிய துங்க மா மதிள் சூழ் தரு
செண்பக வனங்கள் நிறைந்துள்ளதும், உயர்ந்ததும், பெரிய மதில்கள் சூழ்ந்ததுமான - செந்தில் மா நகர் மேவிய பெருமாளே.
திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.