திருப்புகழ் 98 வரியார் கருங்கண் (திருச்செந்தூர்)

தனனா தனந்த ...... தனதான
வரியார்  கருங்கண்  ......  மடமாதர் 
மகவா  சைதொந்த  ......  மதுவாகி 
இருபோ  துநைந்து  ......  மெலியாதே 
இருதா  ளினன்பு  ......  தருவாயே 
பரிபா  லனஞ்செய்  ......  தருள்வோனே 
பரமே  சுரன்ற  ......  னருள்பாலா 
அரிகே  சவன்றன்  ......  மருகோனே 
அலைவா  யமர்ந்த  ......  பெருமாளே. 
  • வரியார் கருங்கண் மடமாதர்
    வரிகள் (ரேகைகள்) உள்ள கரிய கண்களை உடைய இளம்பெண்கள்,
  • மகவாசை தொந்தம் அதுவாகி
    குழந்தைகள் என்கிற ஆசையாகிய பந்தத்திலே அகப்பட்டு,
  • இருபோது நைந்து மெலியாதே
    பகலும் இரவும் மனம் நைந்துபோய் மெலிவு அடையாமல்,
  • இருதாளின்அன்பு தருவாயே
    உன் இரு திருவடிகளின்மீது அன்பைத் தந்தருள்வாயாக.
  • பரிபாலனஞ் செய்து அருள்வோனே
    காத்து ரட்சித்து அருள் செய்பவனே,
  • பரமேசுரன்தன் அருள்பாலா
    பரமசிவன் தந்தருளிய குழந்தையே,
  • அரி கேசவன்தன் மருகோனே
    ஹரி கேசவனாம் திருமாலின் மருமகனே,
  • அலைவாய் அமர்ந்த பெருமாளே.
    திருச்சீரலைவாயாம் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com