தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன ...... தனதான
வேலை தோற்க விழித்துக் காதினில்
ஓலை காட்டி நகைத்துப் போதொரு
வீடு காட்டி யுடுத்தப் போர்வையை ...... நெகிழ்வாகி
மேனி காட்டி வளைத்துப் போர்முலை
யானை காட்டி மறைத்துத் தோதக
வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர் ...... வருவார்மேல்
கால மேற்க வுழப்பிக் கூறிய
காசு கேட்ட துகைப்பற் றாஇடை
காதி யோட்டி வருத்தப் பாடுடன் ...... வருவார்போல்
காதல் போற்று மலர்ப்பொற் பாயலின்
மீத ணாப்பு மசட்டுச் சூளைகள்
காம நோய்ப்ப டுசித்தத் தீவினை ...... யொழியேனோ
ஆல கோட்டு மிடற்றுச் சோதிக
பாலி பார்ப்ப திபக்ஷத் தால்நட
மாடி தாத்தி ரிபட்சித் தாவென ...... வுமிழ்வாளி
ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக
னோடை பூத்த தளக்கட் சானவி
யாறு தேக்கி ய கற்றைச் சேகர ...... சடதாரி
சீல மாப்ப திமத்தப் பாரிட
சேனை போற்றி டுமப்பர்க் கோதிய
சேத னார்த்த ப்ரசித்திக் கேவரு ...... முருகோனே
சேல றாக்க யல்தத்தச் சூழ்வய
லூர வேற்க ரவிப்ரர்க் காதர
தீர தீர்த்த திருப்புத் தூருறை ...... பெருமாளே.
- வேலை தோற்க விழித்துக் காதினில் ஓலை காட்டி நகைத்துப்
போத ஒரு வீடு காட்டி உடுத்தப் போர்வையை நெகிழ்வாகி
வேலாயுதமும் தோற்றுப் போகும்படியான கண்களால் பார்த்து, காதில் உள்ள ஓலையைக் காட்டிச் சிரித்து, போக வேண்டிய ஒரு வீட்டையும் காட்டி, அணிந்த மேலாடையை நெகிழும்படி விட்டு, - மேனி காட்டி வளைத்துப் போர் முலை யானை காட்டி
மறைத்துத் தோதக வீறு காட்டி எதிர்த்துப் போர் எதிர்
வருவார் மேல்
உடலைக் காட்டி ஆடவர்களின் மனத்தைக் கவர்ந்து, போருக்கு எழுந்தது போன்ற மார்பகமாகிய யானையைக் காட்டியும் (பின்) மறைத்தும், வஞ்சகத்தின் முழு சக்தியையும் காட்டி எதிர்த்துச் சண்டையிட்டு எதிரே வருபவர்களிடத்தே, - காலம் ஏற்க உழப்பிக் கூறிய காசு கேட்டு அது கை பற்றா
இடை காதி ஓட்டி வருத்தப் பாடுடன் வருவார் போல்
சமயத்துக்குத் தக்கபடி பேசும் வார்த்தைகளை மழுப்பி, தாம் சொன்ன காசைக் கேட்டு, அதைக் கைப்பற்றிய பின்னர், மத்தியில் மனம் வேறுபட்டுப் பிரிந்து (அவர்களை விரட்டி), (பின்னும் அவர் பொருள் தந்தால்) வருந்துதலுடன் வரவேற்கவந்தவர்கள் போல நடித்து, - காதல் போற்று மலர்ப் பொன் பாயலின் மீது அணாப்பும்
அசட்டுச் சூளைகள் காம நோய்ப் படு சித்தத் தீ வினை
ஒழியேனோ
தமது அன்பைக் காட்டும் மலர் விரித்த அழகிய படுக்கையில் ஏமாற்றுகின்ற அசட்டு வேசிகள் மீது காம இச்சை என்னும் நோய் வாய்ப்படும் மனத்தால் ஏற்படும் தீ வினையினின்றும் நீங்கிப் பிழையேனோ? - ஆல கோட்டு மிடற்றுச் சோதி கபாலி பார்ப்பதி பக்ஷத்தால்
நடமாடி
ஆலகால விஷத்தின் அடையாளத்தைக் காட்டும் கழுத்தை உடைய ஜோதிப் பெருமான், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவன், பார்வதி அன்பு வைத்து மகிழ நடனம் ஆடுபவன், - தாத்திரி பட்சித்தா வென உமிழ் வாளி ஆடல் கோத்த சிலைக்
கைச் சேவகன் ஓடை பூத்த தளக் கள் சானவி ஆறு தேக்கிய
கற்றைச் சேகர சடதாரி
பூமியை உண்டு மீண்டும் கொடு என்று கேட்க உமிழ்ந்து (கண்ணனாக) விளையாடிய திருமாலை அம்பாக (திரிபுரம் அழித்த போது) போரில் அமைத்துக் கொண்ட வில்லைக் கையில் கொண்ட வலிமையாளன், நீர் நிலைகளில் பூத்த பூ இதழ்களின் தேன் கலந்த கங்கை ஆறு நிறைந்து தோன்றும் திரண்ட முடியாகிய சடையைத் தரித்துள்ளவன், - சீல(ம்) மாப் பதி மத்தப் பாரிட சேனை போற்றிடும்
அப்பர்க்கு ஓதிய சேதன அர்த்த(ம்) ப்ரசித்திக்கே வரு
முருகோனே
பரிசுத்தமான சிறந்த கடவுள், களிப்பு நிறைந்த பூதப் படைகள் போற்றிட நிற்கும் அப்பர் ஆகிய சிவபெருமானுக்கு (பிரணவமாகிய) ஞானப் பொருளை உபதேசித்த புகழையே மிகக் கொண்டுள்ள முருகனே, - சேல் அறாக் கயல் தத்தச் சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு
ஆதர தீர தீர்த்த திருபுத்தூர் உறை பெருமாளே.
சேல் மீன்களும், நீங்காத கயல் மீன்களும் குதிக்கும் சுனைகள் சூழ்ந்துள்ள வயலூரில் வீற்றிருப்பவனே, வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே, அந்தணர்க்கு பற்றுக் கோடாக உள்ளவனே, தீரனே, பரிசுத்தனே, திருப்புத்தூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.