திருப்புகழ் 979 கருப்புச் சாப (திருப்புத்தூர்)

தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன ...... தனதான
கருப்புச்  சாப  னனைய  இளைஞர்கள் 
ப்ரமிக்கக்  காத  லுலவு  நெடுகிய 
கடைக்கட்  பார்வை  யினிய  வனிதையர்  ......  தனபாரங் 
களிற்றுக்  கோடு  கலச  மலிநவ 
மணிச்செப்  போடை  வனச  நறுமலர் 
கனத்துப்  பாளை  முறிய  வருநிக  ......  ரிளநீர்போற் 
பொருப்பைச்  சாடும்  வலியை  யுடையன 
அறச்சற்  றான  இடையை  நலிவன 
புதுக்கச்  சார  வடமொ  டடர்வன  ......  எனநாளும் 
புகழ்ச்சிப்  பாட  லடிமை  யவரவர் 
ப்ரியப்பட்  டாள  வுரைசெ  யிழிதொழில் 
பொகட்டெப்  போது  சரியை  கிரியைசெய்  ......  துயிர்வாழ்வேன் 
இருட்டுப்  பாரில்  மறலி  தனதுடல் 
பதைக்கக்  கால்கொ  டுதைசெய்  தவன்விழ 
எயிற்றுப்  போவி  யமர  ருடலவர்  ......  தலைமாலை 
எலுப்புக்  கோவை  யணியு  மவர்மிக 
அதிர்த்துக்  காளி  வெருவ  நொடியினில் 
எதிர்த்திட்  டாடும்  வயிர  பயிரவர்  ......  நவநீத 
திருட்டுப்  பாணி  யிடப  முதுகிடை 
சமுக்கிட்  டேறி  யதிர  வருபவர் 
செலுத்துப்  பூத  மலகை  யிலகிய  ......  படையாளி 
செடைக்குட்  பூளை  மதிய  மிதழிவெ 
ளெருக்குச்  சூடி  குமர  வயலியல் 
திருப்புத்  தூரில்  மருவி  யுறைதரு  ......  பெருமாளே. 
  • கருப்புச் சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்கக் காதல் உலவு நெடுகிய கடைக் கண் பார்வை இனிய வனிதையர் தன பாரம்
    கரும்பு வில்லை உடைய மன்மதன் போன்ற இளைஞர்கள் வியந்து மயங்கும்படி, காம இச்சை உலவுகின்றதும் நீண்டதுமான கடைக்கண் பார்வையைக் கொண்ட இனிய விலைமாதர்களின் தனபாரங்கள்
  • களிற்றுக் கோடு கலச(ம்) மலி நவ மணிச் செப்பு ஓடை வனச நறு மலர் கனத்துப் பாளை முறிய வரு நிகர் இள நீர் போல்
    யானையின் தந்தம், குடம், நிறைந்த நவரத்தினச் சிமிழ், நீரோடையில் தாமரையின் நறுமண மலர், பாரத்துடன் தென்னம் பாளையும் முறியும்படி எழுந்துள்ள ஒளியுள்ள இள நீரைப் போல,
  • பொருப்பைச் சாடும் வலியை உடையன அறச் சற்றான இடையை நலிவன புதுக் கச்சு ஆர வடம் ஒடு அடர்வன என
    மலையையும் மோதி வெல்லக்கூடிய வலிமையைக் கொண்டவை, மிகவும் இளைத்துள்ள இடையை மெலியும்படி செய்பவை, புதிய கச்சுடனும் முத்து மாலையுடனும் நெருங்குபவை என்றெல்லாம்
  • நாளும் புகழ்ச்சிப் பாடல் அடிமை அவர் அவர் ப்ரியப்பட்டு ஆள உரை செய் இழி தொழில் பொகட்டு எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன்
    நாள் தோறும் அம்மாதர்களுக்குப் புகழ்ச்சிப் பாடல்களை அடிமைப்பட்ட அந்த அந்தக் காதலர்கள் ஆசையுடன் எடுத்தாண்டு பேசுகின்ற இழிவான தொழிலைப் போகவிட்டு, நான் எப்பொழுது சரியை, கிரியை ஆகிய மார்க்கங்களில்* நின்று உழைத்து உயிர் வாழ்வேன்?
  • இருட்டுப் பாரில் மறலி தனது உடல் பதைக்கக் கால் கொடு உதை செய்து அவன் விழ எயில் துப்பு ஓவி அமரர் உடல் அவர் தலை மாலை எலுப்புக் கோவை அணியும் அவர்
    அஞ்ஞானம் என்ற இருட்டு நிறைந்த இப் பூமியில், யமனுடைய உடல் பதைக்கும்படி, காலால் அவன் விழும்படி உதைத்தவர், திரிபுரங்களின் வலிமையை ஒழித்தவர், தேவர்களின் உடல் அவர்களின் தலைகள் மாலை ஆகிய எலும்பு வடத்தை மாலையாக அணிந்தவர்,
  • மிக அதிர்த்துக் காளி வெருவ நொடியினில் எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர்
    மிகவும் நடுங்கச் செய்து, காளி அஞ்சும்படி ஒரு நொடிப் பொழுதில் எதிர்த்து நடனம் புரிந்த வயிரவ, பயிரவ மூர்த்தி,
  • நவநீத திருட்டுப் பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர்
    வெண்ணெயைத் திருடிய கைகளை உடைய திருமாலாகிய ரிஷபத்தின் முதுகின் மேல் சேணம் போட்டு ஏறி முழக்கத்துடன் வருபவர்,
  • செலுத்துப் பூதம் அலகை இலகிய படையாளி செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்குச் சூடி குமர
    செலுத்தப்படும் பூதம் பேய்க் கணம் ஆகியவை விளங்குகின்ற படையைக் கொண்டவர், சடையில் பூளை மலர், சந்திரன், கொன்றை, வெள்ளெருக்கு இவைகளைச் சூடியுள்ளவராகிய சிவ பெருமானின் குமரனே.
  • வயலியல் திருப்புத்தூரில் மருவி உறைதரு பெருமாளே.
    வயல்கள் பொருந்திய திருப்புத்தூரில்** பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com