திருப்புகழ் 978 வாட்படச் சேனை (ஆய்க்குடி)

தாத்தனத் தானதன தாத்தனத் தானதன
தாத்தனத் தானதன ...... தனதான
வாட்படச்  சேனைபட  வோட்டியொட்  டாரையிறு 
மாப்புடைத்  தாளரசர்  ......  பெருவாழ்வும் 
மாத்திரைப்  போதிலிடு  காட்டினிற்  போமெனஇல் 
வாழ்க்கைவிட்  டேறுமடி  ......  யவர்போலக் 
கோட்படப்  பாதமலர்  பார்த்திளைப்  பாறவினை 
கோத்தமெய்க்  கோலமுடன்  ......  வெகுரூபக் 
கோப்புடைத்  தாகியல  மாப்பினிற்  பாரிவரு 
கூத்தினிப்  பூரையிட  ......  அமையாதோ 
தாட்படக்  கோபவிஷ  பாப்பினிற்  பாலன்மிசை 
சாய்த்தொடுப்  பாரவுநிள்  ......  கழல்தாவிச் 
சாற்றுமக்  கோரவுரு  கூற்றுதைத்  தார்மவுலி 
தாழ்க்கவஜ்  ராயுதனு  ......  மிமையோரும் 
ஆட்படச்  சாமபர  மேட்டியைக்  காவலிடு 
மாய்க்குடிக்  காவலவு  ......  ததிமீதே 
ஆர்க்குமத்  தானவரை  வேற்  கரத்  தால்வரையை 
ஆர்ப்பெழச்  சாடவல  ......  பெருமாளே. 
  • வாட்படச் சேனைபட ஓட்டி ஒட்டாரை
    வாள் வீச்சுப் படுவதால் சேனைகள் யாவையும் அழியும்படி பகைவர்களை விரட்டியடிக்கும்
  • இறுமாப்புடைத்து ஆள் அரசர் பெருவாழ்வும்
    செருக்குடன் அரசாட்சி புரியும் மன்னர்களது பெருவாழ்வும்
  • மாத்திரைப் போதில் இடு காட்டினிற் போமென
    இறுதியில் ஒரே கணப்பொழுதில் சுடுகாட்டில் அழிந்து போகக் கடவதுதான் என்ற நிலையாமையை உணர்ந்து
  • இல் வாழ்க்கைவிட்டு ஏறும் அடியவர்போல
    இல்லறத்தை விட்டுக் கரையேறும் உன் அடியார்கள் போல,
  • கோட்படப் பாதமலர் பார்த்து இளைப்பாற
    ஒரு குறிக்கோளுடன் வாழவும், உன் திருவடி மலரினைப் பார்த்து யான் இளைப்பாறவும்,
  • வினை கோத்தமெய்க் கோலமுடன்
    வினைவசமாகி உழலும் இந்த உடம்பாகிய உருவத்தை
  • வெகுரூபக் கோப்புடைத் தாகி
    பலவித அலங்காரங்களைச் செய்து
  • அல மாப்பினிற் பாரிவரு கூத்து
    துன்பங்களில் சிக்குண்டு வரும் இந்த வாழ்க்கை என்னும் விளையாட்டு
  • இனிப் பூரையிட அமையாதோ
    இனிமேல் முடிவு பெறவே முடியாதோ?
  • தாட்படக் கோபவிஷ பாப்பினில்
    கால் பட்டாலே கோபத்துடன் சீறி எழும் விஷப் பாம்பைப் போல
  • பாலன்மிசை சாய்த்தொடுப் பாரவு
    பாலன் மார்க்கண்டேயனிடம் (யமன்) குறிவைத்துத் தொடரவும்,
  • நிள் கழல்தாவி
    தமது நீண்ட திருவடியை நீட்டி
  • சாற்றும் அக் கோரவுரு கூற்று உதைத்தார்
    பாலகனை விடேன் என்று பேசிய அந்தக் கொடிய உருக்கொண்ட யமனை உதைத்த பரமசிவனார்
  • மவுலி தாழ்க்க
    (உன்னிடம் வேத மந்திர உபதேசம் பெறுவதற்காக) தமது முடியைத் தாழ்த்தி வணங்க,
  • வஜ்ராயுதனும் இமையோரும் ஆட்பட
    வஜ்ராயுதனாம் இந்திரனும், தேவர்களும் உனக்கு ஆட்பட்டு நிற்க,
  • சாமபர மேட்டியைக் காவலிடும்
    பொன்னிறமான பிரம்மனை சிறையிலிட்ட
  • ஆய்க்குடிக் காவல
    ஆய்க்குடி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அரசனே,
  • உததிமீதே ஆர்க்கும் அத் தானவரை
    கடலிலே போர் புரிந்த அந்தச் சூரன் முதலிய அசுரர்களையும்,
  • வேற் கரத் தால்வரையை
    திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தால் அந்த கிரெளஞ்சகிரியையும்
  • ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே.
    பேரொலி உண்டாகும்படி அழிக்கவல்ல பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com