தத்தான தனத்த தத்தன
தத்தான தனத்த தத்தன
தத்தான தனத்த தத்தன ...... தனதான
முத்தோலை தனைக்கி ழித்தயி
லைப்போரி கலிச்சி வத்துமு
கத்தாம ரையிற்செ ருக்கிடும் ...... விழிமானார்
முற்றாதி ளகிப்ப ணைத்தணி
கச்சார மறுத்த நித்தில
முத்தார மழுத்து கிர்க்குறி ...... யதனாலே
வித்தார கவித்தி றத்தினர்
பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு
வெற்பான தனத்தில் நித்தலு ...... முழல்வேனோ
மெய்த்தேவர் துதித்தி டத்தரு
பொற்பார்க மலப்ப தத்தினை
மெய்ப்பாக வழுத்தி டக்ருபை ...... புரிவாயே
பத்தான முடித்த லைக்குவ
டிற்றாட வரக்க ருக்கிறை
பட்டாவி விடச்செ யித்தவன் ...... மருகோனே
பற்பாசன் மிகைச்சி ரத்தைய
றுத்தாத வனைச்சி னத்துறு
பற்போக வுடைத்த தற்பரன் ...... மகிழ்வோனே
கொத்தார்க தலிப்ப ழக்குலை
வித்தார வருக்கை யிற்சுளை
கொத்தோடு திரக்க தித்தெழு ...... கயலாரங்
கொட்டாசு ழியிற்கொ ழித்தெறி
சிற்றாறு தனிற்க ளித்திடு
குற்றால ரிடத்தி லுற்றருள் ...... பெருமாளே.
- முத்து ஓலை தனைக் கிழித்து அயிலைப் போர் இகலிச்
சிவத்து முகத் தாமரையில் செருக்கிடும் விழி மானார்
முத்தால் ஆகிய கம்மலைத் தாக்கி, வேலாயுதத்தைப் போரில் மாறுபட்டுப் பகைத்து, செந்நிறம் கொண்டு, முகமாகிய தாமரை மலரில் கர்வித்து நிற்கும் கண்களை உடைய மாதர்களின் - முற்றாது இளகிப் பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த
நித்தில முத்து ஆரம் அழுத்து உகிர்க் குறி அதனாலே
முற்றாமல் நெகிழ்ந்து பெருத்துள்ளதாய், அழகிய கச்சு மேலுள்ள மாலையை அற்றுப் போகும்படி செய்த, நல்ல முத்து மாலை அழுத்துவதால் உண்டாகும் நகக் குறியைக் கொண்டதும், - வித்தார கவித் திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து
எழு வெற்பான தனத்தில் நித்தலும் உழல்வேனோ
வித்தார* வகையைச் சேர்ந்த கவிகளைப் பாட வல்ல புலவர்களின் ஓலை நூல்களுக்கு ஒப்பானதாய் இணைந்துள்ளதாய் எழுந்துள்ள மலை போன்ற மார்பகத்தில் தினந்தோறும் அலைச்சல் உறுவேனோ? - மெய்த் தேவர் துதித்திடத் தரு பொற்பு ஆர் கமலப் பதத்தினை
மெய்ப்பாக வழுத்திட க்ருபை புரிவாயே
உண்மைத் தேவர்கள் போற்ற அவர்களுக்கு உதவும் அழகு நிறந்த தாமரைத் திருவடிகளை நானும் மெய்யான பக்தியுடன் வாழ்த்த அருள் புரிவாயாக. - பத்தான முடித் தலைக் குவடு இற்று ஆட அரக்கருக்கு இறை
பட்டு ஆவி விடச் செயித்தவன் மருகோனே
பத்துத் தலைகளான மலைகள் அறுபட்டு அசைந்து விழ, அசுரர்களுக்குத் தலைவனாகிய ராவணன் (போரில்) அழிந்து உயிர் விடும்படி வெற்றி கொண்டவனாகிய திருமாலின் மருகனே, - பற்பாசன் மிகைச் சிரத்தை அறுத்து ஆதவனைச் சினத்து
உறு பல் போக உடைத்த தற்பரன் மகிழ்வோனே
பத்ம பீடத்தில் இருக்கும் பிரமனுடைய அதிகமாயிருந்த ஐந்தாவது தலையை அறுத்துத் தள்ளி, சூரியனைக் கோபித்து பற்கள் உதிரும்படி (தக்ஷயாகத்தில்) உடைத்தெறிந்த பரம்பொருளாகிய சிவ பெருமான் மகிழ்ச்சி கொள்ளும் பெருமானே, - கொத்து ஆர் கதலிப் பழக் குலை வித்தார வருக்கையின்
சுளை கொத்தோடு உதிரக் கதித்து எழு கயல் ஆரம் கொட்டா
சுழியில் கொழித்து எறி
கொத்தாயுள்ள வாழைப் பழக் குலைகளும் விரிந்துள்ள பலாப்பழங்களின் குலைகளும் கொத்தாஉறு பல் போக உடைத்தக அப்படியே உதிரும்படி குதித்துத் தாவுகின்ற கயல் மீன்கள் முத்துக்களைக் கொட்டி நீர்ச் சுழிகளில் தள்ளி ஒதுக்கி, - சிற்றாறு தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள்
பெருமாளே.
சிறிய ஆற்றில் மகிழும் குற்றாலத்துச்** சிவபெருமான் அருகே வீற்றிருந்து அருளுகின்ற பெருமாளே.