தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன ...... தனதான
வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற் காண வொணாதது
வீசத்திற் றூர மிலாதது ...... கதியாளர்
வீதித்துத் தேடரி தானது
ஆதித்தற் காய வொணாதது
வேகத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம்
வாதத்துக் கேயவி யாதது
காதத்திற் பூவிய லானது
வாசத்திற் பேரொளி யானது ...... மதமூறு
மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத் தூரம தாகிய
வாழ்வைச்சற் காரம தாஇனி ...... யருள்வாயே
காதத்திற் காயம தாகும
தீதித்தித் தீதிது தீதென
காதற்பட் டோதியு மேவிடு ...... கதிகாணார்
காணப்பட் டேகொடு நோய்கொடு
வாதைப்பட் டேமதி தீதக
லாமற்கெட் டேதடு மாறிட ...... அடுவோனே
கோதைப்பித் தாயொரு வேடுவ
ரூபைப்பெற் றேவன வேடுவர்
கூடத்துக் கேகுடி யாய்வரு ...... முருகோனே
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.
- வேதத்திற் கேள்வி யிலாதது
வேதங்களினால் ஆராயப் படாதது அது. - போதத்திற் காண வொணாதது
அறிவு கொண்டு காண முடியாதது அது. - வீசத்தில் தூர மிலாதது
ஒரு மாகாணி அளவு கூட (பதினாறில் ஒரு பங்கு அங்குலம்) நம்மிடத்தினின்று தூரம் இல்லாதது அது. - கதியாளர் வீதித்துத் தேட அரிதானது
நற்கதியை வேண்டுவோர் பகுத்தறிவோடு தேட அரிதானது அது. - ஆதித்தற் காய வொணாதது
சூரியனால் சுட்டுப் பொசுக்க இயலாதது அது. - வேகத்துத் தீயில் வெகாதது சுடர்கானம்
காட்டுத்தீயின் கடுமை கொண்ட நெருப்பிலும் வேகாதது அது. - வாதத்துக்கே அவியாதது
கடுங்காற்றினாலும் தன் ஒளி குன்றாதது அது. - காதத்திற் பூ இயலானது வாசத்தில்
காத தூரம் (10 மைல் அளவு ) சென்றாலும் நறுமணம் வீசும் மலரின் தன்மையானது அது. - பேரொளி யானது
பெரிய ஜோதியாக விளங்குவது அது. - மதமூறு மாயத்திற் காய மதாசல தீதர்க்குத் தூரமது
ஆணவ மதம் ஊறுகின்ற மாயம் பொருந்திய உடலில் அகந்தை என்ற மதநீர் உள்ள தீயவர்களுக்கு எட்ட முடியாத தூரத்தில் உள்ளது அது. - ஆகிய வாழ்வை
(இத்தனைச் சிறப்புப் பெற்ற) அத்தகைய பெருவாழ்வை (முக்தி நிலையை) - சற் காரமதாஇனி யருள்வாயே
என்னை ஒரு பொருட்டாக மதித்து இனி அருள்வாயாக. - காதத்திற் காயமதாகும்
கொலைத்தொழிலில் மிகவும் ஈடுபட்ட - மதீ தித்தித் தீதிது தீதென
மதியைத் திருத்தி, இது தீய செயல், இது தீய செயல் என்று - காதற்பட் டோதியு மேவிடு கதிகாணார்
அன்பு மேலிட்டுப் பலமுறை நீ ஓதியும் நற்கதியை அடையும் வழியைக் காணாதவர்களை (அசுரர்களை) - காணப்பட் டேகொடு நோய்கொடு வாதைப்பட்டே
கண்ணெதிரிலேயே தெரியும் பொல்லா நோயால் அவர்கள் வேதனைப்பட்டும் கூட - மதி தீதகலாமற்கெட்டேதடுமாறிட அடுவோனே
கெட்ட புத்தி நீங்காமல் கேடுற்று அந்த அசுரர்கள் தடுமாற, பின்னர் அவர்களை அழிப்போனே, - கோதைப்பித்தாய் ஒரு வேடுவ ரூபைப்பெற்றே
வள்ளி என்ற பெண்மேல் காதல் பித்து மேலிட ஒரு வேடனின் உருவத்தைத் தாங்கி, - வன வேடுவர் கூடத்துக்கே குடி யாய்வரு முருகோனே
காட்டு வேடுவர்களின் வீட்டுக்கே குடியாகவந்த முருகனே, - கோதிற்பத்தாரொடு மாதவ சீலச்சித்தாதியர் சூழ்தரு
குற்றமற்ற பக்தர்களுடன், சிறந்த தவ ஒழுக்கம் வாய்ந்த சித்தர் முதலானோர் வந்து வலம்வரும் - கோலக்குற் றாலம் உலாவிய பெருமாளே.
அழகிய திருக்குற்றாலத் தலத்தில்* உலாவும் பெருமாளே.