திருப்புகழ் · 981ஊனாரும் உட்பிணியும் (திருவாடானை)

தானான தத்ததன தானான தத்ததன
தானான தத்ததன ...... தனதான

Nangalappa Sharanam

ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட
லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால்
ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி
ஓயா முழக்கமெழ ...... அழுதோய
நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது
நாறா தெடுத்தடவி ...... யெரியூடே
நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி
நாடா தெனக்குனருள் ...... புரிவாயே
மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு
மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே
வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
வானோரு மட்டகுல ...... கிரியாவும்
ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு
மாலால முற்றவமு ...... தயில்வோன்முன்
ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்
ஆடானை நித்தமுறை ...... பெருமாளே.

பத உரை

  • ஊனாரு முட்பிணியு மானா கவித்தவுடல்
    மாமிசமும், உள்ளே நிறைந்திருக்கும் நோய்களும் வைத்து மூடப்பட்ட இந்த உடல்
  • ஊதாரி பட்டொழிய வுயிர்போனால்
    கேடுற்று அழியும்படி உயிர் போய்விட்டால்,
  • ஊரார் குவித்துவர
    ஊரார்கள் கூட்டமாக வந்து
  • ஆவா வெனக்குறுகி
    ஐயோ ஐயோ என்று அவர்கள் அலறி அருகில் நெருங்கி
  • ஓயா முழக்கமெழ அழுதோய
    ஓய்வில்லாத கூச்சல் உண்டாகும்படி அழுது, பின் ஓய்ந்து,
  • நானா விதச்சிவிகை மேலே கிடத்தி
    பலவிதமான பல்லக்கின் மேலே பிணத்தைக் கிடத்தி,
  • அது நாறாது எடுத்து அடவி யெரியூடே
    அப்பிணம் துர்நாற்றம் வீசுமுன்பு அதை எடுத்துக்கொண்டுபோய் சுடுகாட்டில் நெருப்பின் மத்தியிலே
  • நாணாமல் வைத்துவிட நீறாமென
    கூசாமல் வைத்து விட்டுவிட அவ்வுடல் சாம்பலாகும் என்ற நியதி உள்ள
  • இப்பிறவி நாடா தெனக்கு
    இந்தப் பிறவியை நான் விரும்பாதபடி எனக்கு
  • உனருள் புரிவாயே
    உன் திருவருளைத் தந்தருள்வாயாக.
  • மா நாக துத்திமுடி மீதே நிருத்தமிடு மாயோனும்
    பெரிய நாகமாகிய காளிங்கனின் புள்ளிகள் உள்ள படமுடியின்மேல் நடனம் செய்த மாயவன் திருமாலும்,
  • மட்டொழுகு மலர்மீதே வாழ்வாயிருக்குமொரு வேதாவும்
    தேன் ஒழுகும் தாமரை மலர்மீது வாழ்வு கொண்டிருக்கும் ஒப்பற்ற பிரமனும்,
  • எட்டிசையும் வானோரும் அட்டகுல கிரியாவும்
    அஷ்டதிக் பாலகர்களும், தேவர்களும், சிறந்த அஷ்டகிரிகளில் உள்ளவர்களும்,
  • ஆனா வரக்கருடன் வானார் பிழைக்க
    நீங்காத அரக்கர்களுடன், வானிலுள்ள கணங்கள் யாவும் பிழைக்கும்படியாக,
  • வரும் ஆலால முற்ற அமுதயில்வோன்
    பாற்கடலில் எழுந்த ஆலகாலவிஷம் அத்தனையும் அமுதமாக உண்டருளிய சிவபெருமான்
  • முன் ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தையருள்
    முன்னொருநாள் ஆசாரத்துடனும், பக்தியுடனும் கேட்க, அவருக்கு சாத்திரப்படி வேதாகமங்களின் ஞானப் பொருளை உபதேசித்து அருளியவனும்,
  • ஆடானை நித்தம் உறை பெருமாளே.
    திருவாடானை* என்ற தலத்தில் நாள்தோறும் வீற்றிருப்பவனுமான பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * திருவாடானை மானாமதுரையில் இருந்து சிவகங்கை வழியில் 44 மைலில் உள்ளது.
  • * ThiruvAdAnai is situated 44 miles east of MAnAmadhurai on the route to Sivaganga.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout