தான தனந்த தான தனந்த
தனா தனந்த ...... தனதான
மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை யநங்கன் ...... மலராலும்
வாடை யெழுந்து வாடை செறிந்து
வாடை யெறிந்த ...... அனலாலுங்
கோல மழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி ...... தளராமுன்
கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவு மின்று ...... வரவேணும்
கால னடுங்க வேலது கொண்டு
கானில் நடந்த ...... முருகோனே
கான மடந்தை நாண மொழிந்து
காத லிரங்கு ...... குமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்து
சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே
சூரிய னஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற ...... பெருமாளே.
- மாலையில் வந்து மாலை வழங்கு
அந்திப் பொழுதில் வந்து காம இச்சையைத் தருகின்ற - மாலை அனங்கன் மலராலும்
(மகிழம் பூ) மாலையை அணிந்த மன்மதன் எய்கின்ற மலர்ப் பாணங்களாலும், - வாடை எழுந்து வாடை செறிந்து
வாடைக் காற்று கிளம்பி, (அதனுடன் கலந்து வரும் மலர்களின்) வாசனைகள் மிகுந்து - வாடை எறிந்த அனலாலும்
வடவா முகாக்கினி போல வீசி எறியும் நெருப்பாலும், - கோலம் அழிந்து சால மெலிந்து
தனது அழகு எல்லாம் அழிந்து, மிகவும் மெலிந்து, - கோமள வஞ்சி தளரா முன்
அந்த இளமை வாய்ந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் சோர்வு அடைவதற்கு முன்பு, - கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவும் இன்று வரவேணும்
இளமை கூடிய மார்பு அன்பு மிக்கு விம்மும் படியாகவும் நீ இன்று வந்து அருள வேண்டும். - காலன் நடுங்க வேல் அது கொண்டு
யமன் நடுங்கவும், கையிலே வேலாயுதத்தைக் கொண்டு, - கானில் நடந்த முருகோனே
(பொய்யாமொழிப் புலவர் வரும்) காட்டில் (வேடனாய்) நடந்த முருகனே,* - கான மடந்தை நாண மொழிந்து
வள்ளி மலைக் காட்டில் இருந்த பெண்ணாகிய வள்ளி நாணும்படியாக அவளிடம் பேசி, - காதல் இரங்கு குமரேசா
அவள்மீது உனக்கிருந்த காதலை வெளிப்படுத்திய குமரேசனே, - சோலை வளைந்து சாலி விளைந்து சூழும் இலஞ்சி
மகிழ்வோனே
சோலைகள் சுற்றியும் உள்ள, நெற்பயிர் உள்ள வயல்கள் விளைந்து சூழ்ந்துள்ள, இலஞ்சி** என்னும் நகரில் (வீற்றிருந்து) மகிழ்ச்சி கொண்டவனே, - சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே.
சூரியன் தான் உதிப்பது எப்படி என்று பயப்படும்படியாக, கடலில் நின்று கொண்டிருந்த (மாமரமாகிய) சூரனை வென்ற பெருமாளே.