திருப்புகழ் 973 சுரும்பு அணி (இலஞ்சி)

தனந்தன தந்த தனந்தன தந்த
தனந்தன தந்த ...... தனதானா
சுரும்பணி  கொண்டல்  நெடுங்குழல்  கண்டு 
துரந்தெறி  கின்ற  ......  விழிவேலால் 
சுழன்றுசு  ழன்று  துவண்டுது  வண்டு 
சுருண்டும  யங்கி  ......  மடவார்தோள் 
விரும்பிவ  ரம்பு  கடந்துந  டந்து 
மெலிந்துத  ளர்ந்து  ......  மடியாதே 
விளங்குக  டம்பு  விழைந்தணி  தண்டை 
விதங்கொள்ச  தங்கை  ......  யடிதாராய் 
பொருந்தல  மைந்து  சிதம்பெற  நின்ற 
பொலங்கிரி  யொன்றை  ......  யெறிவோனே 
புகழ்ந்தும  கிழ்ந்து  வணங்குகு  ணங்கொள் 
புரந்தரன்  வஞ்சி  ......  மணவாளா 
இரும்புன  மங்கை  பெரும்புள  கஞ்செய் 
குரும்பைம  ணந்த  ......  மணிமார்பா 
இலஞ்சியில்  வந்த  இலஞ்சிய  மென்று 
இலஞ்சிய  மர்ந்த  ......  பெருமாளே. 
  • சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு
    அணிந்துள்ள மலரின் மேல் வண்டுகள் திகழும் கரு மேகம் போன்ற நீண்ட கூந்தலைப் பார்த்தும்,
  • துரந்து எறிகின்ற விழி வேலால்
    வேகமாக செலுத்தி வீசப்பட்ட வேல் போன்ற கண்ணைப் பார்த்தும்,
  • சுழன்று சுழன்று துவண்டு துவண்டு சுருண்டு மயங்கி
    (என் மனம்) சுழற்சி அடைந்து, மிகவும் வாட்டமுற்று, சோர்வுற்று, மயக்கம் உற்று,
  • மடவார் தோள் விரும்பி வரம்பு கடந்து நடந்து
    விலைமாதர்களின் தோள்களை விருப்பம் கொண்டு அளவு கடந்து நடந்தும்,
  • மெலிந்து தளர்ந்து மடியாதே
    மெலிந்தும் தளர்ந்தும் (நான்) இறந்து போகாமல்,
  • விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய்
    விளங்குகின்ற உனது கடப்ப மாலையை விரும்பி, அழகிய தண்டையையும், பல இன்னிசை வகைகளை ஒலிக்கும் கிண்கிணியையும் அணிந்த திருவடிகளைத் தருவாயாக.
  • பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி ஒன்றை எறிவோனே
    நன்றாகப் பொருந்தி அமைந்து, மேன்மை பெற நின்ற பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழித்தவனே.
  • புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா
    உன்னைப் புகழ்ந்தும், (உனது ஆற்றலைக்) கண்டு மகிழ்ந்தும், வணங்கியும் வழிபட்ட குணத்தைக் கொண்ட இந்திரனுடைய வஞ்சிக் கொடி போன்ற நங்கையாகிய தேவயானையின் கணவனே,
  • இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணி மார்பா
    தினைப் புனத்தைக் காத்த மங்கையாகிய வள்ளியின் நிரம்பப் புளகாங்கிதம் கொண்ட தென்னங் குரும்பை போன்ற மார்பை அணைந்து கலந்த அழகிய மார்பனே,
  • இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே.
    (சரவணக்) குளத்தில் வந்த காரணத்தால் குளவன் (குளத்தில் உற்பவித்தவன்) என்று திருப் பெயர் கொண்டு, இலஞ்சி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com