திருப்புகழ் 969 கார் குழல் குலைந்து (ஸ்ரீ புருஷமங்கை)

தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
தானதன தந்த தந்த ...... தனதானா
கார்குழல்கு  லைந்த  லைந்து  வார்குழையி  சைந்த  சைந்து 
காதலுறு  சிந்தை  யுந்து  ......  மடமானார் 
காமுகர  கங்க  லங்க  போர்மருவ  முந்தி  வந்த 
காழ்கடிய  கும்ப  தம்ப  ......  இருகோடார் 
பேர்மருவு  மந்தி  தந்தி  வாரணஅ  னங்க  னங்க 
பேதையர்கள்  தங்கள்  கண்கள்  ......  வலையாலே 
பேரறிவு  குந்து  நொந்து  காதலில  லைந்த  சிந்தை 
பீடையற  வந்து  நின்ற  ......  னருள்தாராய் 
ஏர்மருவு  தண்டை  கொண்ட  தாளசைய  வந்த  கந்த 
ஏகமயி  லங்க  துங்க  ......  வடிவேலா 
ஏமனுமை  மைந்த  சந்தி  சேவலணி  கொண்டு  அண்டர் 
ஈடெறஇ  ருந்த  செந்தில்  ......  நகர்வாழ்வே 
தேருகள்மி  குந்த  சந்தி  வீதிகள  ணிந்த  கெந்த 
சீரலர்கு  ளுந்து  யர்ந்த  ......  பொழிலோடே 
சேரவெயி  லங்கு  துங்க  வாவிக  ளிசைந்தி  ருந்த 
ஸ்ரீபுருட  மங்கை  தங்கு  ......  பெருமாளே. 
  • கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து அசைந்து
    மேகம் போன்ற கூந்தல் கலைந்து அலை பாய்வதாலும், நீண்ட குண்டலங்கள் அதற்கு ஒக்க அசைவுறுதலாலும்,
  • காதல் உறு சிந்தை உந்து மடமானார் காமுகர் அகம் கலங்க
    காம இச்சை கொண்ட எண்ணத்தை மேலெழுப்பும் இளம் பெண்கள் காமுகராகிய ஆடவர் உள்ளம் கலங்கும்படி செய்து,
  • போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப(ம்) தம்ப(ம்) இரு கோடார்
    சண்டையிடுவதற்கு முந்தி வந்தது போல முன்னே எதிர்ப்பட்டு வருவதும், வைரம் போல உறுதியும் கடினமும் கொண்ட, குடம் போலவும், யானைத் தந்தம் போலவும் உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களை உடையவர்களின்
  • பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம் பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே
    பேரைச் சொல்லவந்தால் (அவர்களுடைய சேட்டையால்) பெண் குரங்கு, (அவர்களுடைய விஷத்தன்மையால்) பாம்பு, (அவர்களின் ஆணவத்தால்) யானை என்று சொல்லத் தக்கவர்கள், மன்மதனுக்கு உறுப்பாக அமைந்த விலைமாதர்கள் தங்கள் கண்கள் என்னும் வலையாலே,
  • பேர் அறிவு (உ)குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள் தாராய்
    சிறந்த (என்) அறிவு சிதறிப் போய், மனம் நொந்து காம இச்சையால் அலைபாயும் மனத்தின் துன்பம் அற்றுப் போக, நீ வந்து உன்னுடைய திருவருளைத் தருவாயாக.
  • ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த ஏக மயில் அங்க துங்க வடிவேலா
    அழகு பொருந்திய தண்டையை அணிந்த திருவடி அசைய வருகின்ற கந்தனே, ஒப்பற்ற (சூரனாகிய) மயிலை* அங்க அடையாளமாகக் கொண்டவனே, கூரிய வேலை ஏந்தியவனே,
  • ஏ மன் உமை மைந்த சந்தி சேவல் அணி கொண்டு அண்டர் ஈடு எ(ஏ)ற இருந்த செந்தில் நகர் வாழ்வே
    பெருமை பொருந்திய உமா தேவியின் மகனே, (சூரனுடைய இரு கூறில் ஒன்றாய் உன்னைச்) சந்தித்த* கோழியைக் கொடியாகக் கொண்டு, தேவர்கள் உய்யும் பொருட்டு வீற்றிருந்த திருச்செந்தூரின் செல்வனே,
  • தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர் குளுந்து உயர்ந்த பொழிலூடே
    தேர்கள் நிரம்பிய நாற்சந்திகள் கொண்ட வீதிகளை உடையதும், நறு மணம் வீசும் சிறந்த மலர்கள் குளிர்ச்சியுடன் மேம்பட்டு விளங்கும் சோலைகளுடன்
  • சேரவெ இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு(ம்) பெருமாளே.
    ஒன்று சேரவே விளங்கும் பரிசுத்தமான தடாகங்கள் பொருந்தியுள்ள ஸ்ரீபுருஷமங்கையில் (நாங்குநேரியில்**) வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com