தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன ...... தனதான
ஆடல்மத னம்பின் மங்கைய
ராலவிழி யின்பி றங்கொளி
யாரமத லம்பு கொங்கையின் ...... மயலாகி
ஆதிகுரு வின்ப தங்களை
நீதியுட னன்பு டன்பணி
யாமல்மன நைந்து நொந்துட ...... லழியாதே
வேடரென நின்ற ஐம்புல
னாலுகர ணங்க ளின்தொழில்
வேறுபட நின்று ணர்ந்தருள் ...... பெறுமாறென்
வேடைகெட வந்து சிந்தனை
மாயையற வென்று துன்றிய
வேதமுடி வின்ப ரம்பொரு ...... ளருள்வாயே
தாடகையு ரங்க டிந்தொளிர்
மாமுனிம கஞ்சி றந்தொரு
தாழ்வறந டந்து திண்சிலை ...... முறியாவொண்
ஜாநகித னங்க லந்தபின்
ஊரில்மகு டங்க டந்தொரு
தாயர்வ சனஞ்சி றந்தவன் ...... மருகோனே
சேடன்முடி யுங்க லங்கிட
வாடைமுழு தும்ப ரந்தெழ
தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட ...... நடமாடுஞ்
சீர்மயில மஞ்சு துஞ்சிய
சோலைவளர் செம்பொ னுந்திய
ஸ்ரீபுருட மங்கை தங்கிய ...... பெருமாளே.
- ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின்
போருக்கு எழுந்த மன்மதன் வீசும் மலர்ப் பாணங்களாலும், விலைமாதர்களின் ஆலகால விஷம் போன்ற கண்களில், - பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி
ஒளி கொண்டு விளங்குவதும், முத்து மாலை அசைவதுமான மார்பகங்களில் மயக்கம் கொண்டு, - ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல்
ஆதியாகிய சிவபெருமானுக்கும் குருவாகிய உனது திருவடிகளை உண்மையுடனும் அன்புடனும் பணிந்து வழிபடாமல், - மனம் நைந்து நொந்து உடல் அழியாதே
மனம் சோர்வடைந்து, வருந்தி என் உடல் அழிவுறாமல், - வேடர் என நின்ற ஐம்புலன்
வேடர்கள் போல் நிற்கும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து புலன்களின் செயல்களும், - நாலு கரணங்களின் தொழில்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நாலு அந்தக்கரணங்களின் செயல்களும், - வேறு பட நின்று உணர்ந்து அருள் பெறுமாறு
என்னைத் தாக்காத வகையில் நான் வேறுபட்டு நின்று உன்னை உணர்ந்து உன் அருளைப் பெறும்படி, - என்வேடை கெட வந்து சிந்தனைமாயை அற வென்று
என்னுடைய ஆசைகள் அழிய நீ என் எண்ணத்தில் வந்து கலந்து, மாயா சக்திகள் ஒடுங்கும்படி வெற்றி கொண்டு, - துன்றிய வேத முடிவின் பரம் பொருள் அருள்வாயே
சிறந்த வேதங்களின் முடிவில் விளங்கும் மேலான பொருளை உபதேசிப்பாயாக. - தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து
தாடகை என்னும் அரக்கியின் வலிமையை அழித்து, விளங்குகின்ற பெருமை வாய்ந்த விசுவாமித்ர முனிவரின் யாகத்தைச் சிறப்புற நடத்திக் கொடுத்து, - ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா
ஒப்பற்ற (அகலிகையின்) சாபம் நீங்குமாறு (கால் துகள் படும்படி) நடந்து, (ஜனக ராஜன் முன்னிலையில்) வலிமையான சிவதனுசை முறித்து, - ஒண் ஜாநகி தனம் கலந்த பின்
இயற்கை அழகு பெற்ற சீதையை மணம் புரிந்து மார்புற அணைந்த திருமணத்துக்குப் பிறகு, - ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன்
மருகோனே
அயோத்தியில் தன் பட்டத்தைத் துறந்து, ஒப்பற்ற (மாற்றாந்) தாயாகிய கைகேயியின் சொற்படி நடந்த சிறப்பைக்கொண்டவனாகிய இராமனின் மருகனே, - சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ
ஆதிசேஷனின் முடிகளும் கலக்கம் கொள்ள, காற்று எங்கும் பரவி வீச, - தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும் சீர் மயில
தேவர்கள் களிப்பு மிகுந்து மேற்கிளர்ந்து எழ, நடனத்தைச் செய்யும் அழகிய பெருமை வாய்ந்த மயிலை வாகனமாகக் கொண்டவனே, - மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம் பொன் உந்திய
மேகம் படிந்துள்ள சோலைகள் விளங்குவதும், செவ்விய செல்வம் பெருகி நிற்பதுவுமான - ஸ்ரீபுருட மங்கை தங்கிய பெருமாளே.
ஸ்ரீபுருஷமங்கை (நாங்குநேரி)* என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.