திருப்புகழ் · 970வேனின் மதன் ஐந்து (ஸ்ரீ புருஷமங்கை)

தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த ...... தனதான

CHITRA NAGRAJ --Music Is Soul

வேனின்மத னைந்து பாணம்விட நொந்து
வீதிதொறு நின்ற ...... மடவார்பால்
வேளையென வந்து தாளினில்வி ழுந்து
வேடைகெட நண்பு ...... பலபேசித்
தேனினும ணந்த வாயமுத முண்டு
சீதளத னங்க ...... ளினின்மூழ்கித்
தேடியத னங்கள் பாழ்படமு யன்று
சேர்கதிய தின்றி ...... யுழல்வேனோ
ஆனிரைது ரந்து மாநிலம ளந்தொ
ராலிலையி லன்று ...... துயில்மாயன்
ஆயர்மனை சென்று பால்தயிர ளைந்த
ஆரணமு குந்தன் ...... மருகோனே
வானவர்பு கழ்ந்த கானவர்ப யந்த
மானொடுவி ளங்கு ...... மணிமார்பா
மாமறைமு ழங்கு ஸ்ரீபுருட மங்கை
மாநகர மர்ந்த ...... பெருமாளே.

பத உரை

  • வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து
    வேனில் பருவத்துக்கு உரிய மன்மதன் தனது ஐந்து மலர் அம்புகளைச் செலுத்த, மனம் வேதனை அடைந்து,
  • வீதி தோறும் நின்ற மடவார் பால் வேளை என வந்து தாளினில் விழுந்து
    தெரு மூலைகள் தோறும் நின்றுள்ள மாதர்களிடத்தே இதுவே சமயம் என்று வந்து அவர்கள் காலில் விழுந்து,
  • வேடை கெட நண்பு பல பேசித் தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு
    ஆசை தீர நட்பான பல பேச்சுக்களைப் பேசி, தேனைக் காட்டிலும் அதிக நறு மணம் கொண்ட வாயிதழ் ஊறலை உண்டு,
  • சீதள தனங்களினில் மூழ்கித் தேடிய தனங்கள் பாழ் பட முயன்று
    (அம்மாதர்களின்) குளிர்ந்த மார்பகங்களில் முழுகி, தேடி வைத்திருந்த செல்வம் எல்லாம் அழிக்க முயற்சி செய்து,
  • சேர் கதி அது இன்றி உழல்வேனோ
    அடைய வேண்டிய கதியை (வீட்டுப் பேற்றை) அடைதல் இல்லாமல் அலைந்து திரிவேனோ?
  • ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன்
    பசுக் கூட்டங்களை மேய்த்து ஓட்டிச் செலுத்தியும், பெரிய பூமியை (ஓர் திருவடி கொண்டு) அளந்தும், ஓர் ஆலிலையில் ஊழி அன்று துயில் கொண்ட மாயன்,
  • ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த ஆரண முகுந்தன் மருகோனே
    இடையர் வீடுகளில் போய் பாலையும், தயிரையும் கலந்து உவகையுடன் பருகியவனும், வேதம் போற்றும் முகுந்தனுமாகிய திருமாலின் மருகனே,
  • வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி மார்பா
    தேவர்கள் புகழ்ந்து போற்றிய தேவயானையுடனும், வேடர்கள் மகளாகிய மான் போன்ற வள்ளியுடனும் விளங்கும் அழகிய மார்பனே,
  • மா மறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மா நகர் அமர்ந்த பெருமாளே.
    பெருமை வாய்ந்த வேதங்கள் ஒலிக்கின்ற ஸ்ரீபுருட மங்கை (நாங்குநேரி) என்னும் பெரிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 24 மைலில் உள்ளது.
  • * Sri Purushamangai is now known as NAngunEri, situated 24 miles from Tirunelveli on the route to NAgarkOvil.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout