தனதன தத்தந் தான தானன
தனதன தத்தந் தான தானன
தனதன தத்தந் தான தானன ...... தனதான
மனநினை சுத்தஞ் சூது காரிகள்
அமளிவி ளைக்குங் கூளி மூளிகள்
மதபல நித்தம் பாரி நாரிக ...... ளழகாக
வளைகுழை முத்தும் பூணும் வீணிகள்
விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள்
வரமிகு வெட்கம் போல வோடிகள் ...... தெருவூடே
குனகிகள் பக்ஷம் போல பேசிகள்
தனகிக ளிச்சம் பேசி கூசிகள்
குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் ...... பொருளாசைக்
கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்பட
அருளமு தத்தின் சேரு மோர்வழி
குறிதனி லுய்த்துன் பாத மேறிட ...... அருள்தாராய்
தனதன தத்தந் தான தானன
டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி
தவில்முர சத்தந் தாரை பூரிகை
வளைதுடி பொற்கொம் பார சூரரை
சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா
தினைவன நித்தங் காவ லாளியள்
நகைமுறை முத்தின் பாவை மான்மகள்
திகழ்பெற நித்தங் கூடி யாடிய ...... முருகோனே
திரிபுர நக்கன் பாதி மாதுறை
யழகிய சொக்கன் காதி லோர்பொருள்
செலவரு ளித்தென் கூடல்மேவிய ...... பெருமாளே.
- மன(ம்) நினை சுத்தம் சூதுகாரிகள்
மனத்தில் நினைக்கின்ற முற்றிய சூதான எண்ணங்களையே கொண்டவர்கள், - அமளி விளைக்கும் கூளி மூளிகள்
அமர்க்களங்களைச் செய்யும் பேய் போன்ற விகாரம் படைத்தவர்கள், - மதபலம் நித்தம் பாரி நாரிகள் அழகாக வளை குழை முத்தும்
பூணும் வீணிகள்
ஆணவ பலத்தை நாள் தோறும் வலியக் காட்டுகின்ற மாதர்கள், அழகாக (கையில்) வளையல், (காதில்) குழைகள், (மார்பில்) முத்து மாலை இவைகளை அணிந்துள்ள வீண் பொழுது போக்கிகள், - விழலிகள் மெச்சுண்டு ஆடி பாடிகள்
பயனற்றவர்கள், பிறரால் மெச்சப்படுதலில் ஆசை கொண்டு ஆடிப் பாடுபவர்கள், - வர மிகு வெட்கம் போல ஓடிகள் தெருவூடே குனகிகள்
பக்ஷம் போல பேசிகள்
வருவதற்கு மிக்க வெட்கம் கொண்டவர்கள் போல ஓடுபவர்கள், தெருவிலே கொஞ்சிப் பேசுபவர்கள், அன்பு கொண்டவர்கள் போலப் பேசுபவர்கள், - தனகிகள் இச்சம் பேசி கூசிகள் குசலிகள் வ(ரு)க்கம்
சூறைகாரிகள்
சரசம் செய்பவர்கள், தங்கள் விருப்பத்தைப் பேசி நாணம் கொள்ளுபவர்கள், தந்திரம் உள்ளவர்கள், பிசாசு அனையவர்கள், கொள்ளைக்காரிகள், - பொருள் ஆசைக் கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட
பொருளாசை கொண்டவர்கள், (இத்தகைய வேசியர் மீது) எனக்கு உள்ள மோகம் சிதறுண்டு விழுந்து ஒழிய, - அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி குறி தனில் உய்த்து உன்
பாதம் ஏறிட அருள் தாராய்
உனது திருவருளாகிய அமுதத்தைச் சேர்வதற்கு ஒரு வழியைக் காட்டும் அடையாளத்தில் என்னைச் சேர்ப்பித்து உன்னுடைய திருவடியைக் கூடுதற்கு அருள் புரிக. - தனதன தத்தந் தான தானன
டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி
(இத்தகைய ஒலிகளுடன்) பறைகள், - தவில் முரசு சத்தம் தாரை பூரிகை வளை துடி பொன் கொம்பு
ஆர
மேளம், போர்முரசுகள் ஒலி செய்யவும், நீண்ட ஊதுங் குழல், வளைந்த குழல், சங்கு, உடுக்கை, பொலிவுள்ள ஊது கொம்பு முதலியவை நிறைந்து ஒலி செய்யவும், - சூரரை சமர் தனில் முற்றும் பாறி நூறிட விடும் வேலா
அசுரர்களை போரில் யாவரும் சிதறுண்டு அழிந்து பொடிபட வேலைச் செலுத்தியவனே. - தினை வன(ம்) நித்தம் காவலாளியள் நகை முறை முத்தின்
பாவை மான் மகள்
தினைப் புனத்தை நாள்தோறும் காவல் செய்து கொண்டிருந்தவள், பற்களின் வரிசை முத்துப் போல உள்ள பதுமை போன்ற அழகி, மான் வயிற்றில் பிறந்த அழகியாகிய வள்ளி, - திகழ் பெற நித்தம் கூடி ஆடிய முருகோனே
மகிழ்ச்சியில் விளக்கம் பெற தினமும் கூடி விளையாடிய முருகனே, - திரி புர நக்கன் பாதி மாது உறை அழகிய சொக்கன் காதில்
ஓர் பொருள் செல அருளி
முப்புரங்களைச் சிரித்தே எரித்தவனும், இடது பாதியில் பார்வதி உறையும் அழகிய சொக்கநாதனாகிய சிவபெருமான் காதில் ஒப்பற்ற பிரணவப் பொருள் புகும்படி ஓதி அருளி, - தென் கூடல் மேவிய பெருமாளே.
தென் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.