தனதான தானத் தனதான
தனதான தானத் ...... தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ...... குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் ...... பெருமாளே.
- கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி
சகல கலைகளையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள ஞான ஒளியாகிய கடலிலே திளைத்துக் குளித்து, - ஆசைக் கடலேறி
மண், பெண், பொன் என்ற மூவாசைகளாம் கடல்களை நீந்திக் கடந்து, - பலமாய வாதிற் பிறழாதே
பலத்ததான, உரத்த சப்தத்துடன் கூடிய சமய வாதங்களில் நான் மாறுபட்டுக் கிடக்காமல், - பதிஞான வாழ்வைத் தருவாயே
இறைவனைப் பற்றிய சிவ ஞான வாழ்வைத் தந்தருள்வாயாக. - மலைமேவு மாயக் குறமாதின்
வள்ளிமலையிலே வாழ்ந்த, ஆச்சரியத் தோற்றம் கொண்ட, குறப்பெண்ணாம் வள்ளியின் - மனமேவு வாலக் குமரேசா
மனத்திலே வீற்றிருக்கும் இளைஞனாம் குமரேசனே, - சிலைவேட
வள்ளிக்காக வில்லைக் கையில் ஏந்திய வேடன் உருவில் வந்தவனே, - சேவற் கொடியோனே
சேவற் கொடியை கரத்தில் கொண்டவனே, - திருவாணி கூடற் பெருமாளே.
லக்ஷ்மியும் சரஸ்வதியும் (செல்வமும், கல்வியும்) ஒருங்கே கூடும் கூடற்பதியாகிய பவானியில் வாழும் பெருமாளே.