திருப்புகழ் 963 ஏலப் பனி நீர் (மதுரை)

தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன ...... தனதான
ஏலப்பனி  நீரணி  மாதர்கள் 
கானத்தினு  மேயுற  வாடிடு 
மீரத்தினு  மேவளை  சேர்கர  ......  மதனாலும் 
ஏமக்கிரி  மீதினி  லேகரு 
நீலக்கய  மேறிய  னேரென 
ஏதுற்றிடு  மாதன  மீதினு  ......  மயலாகிச் 
சோலைக்குயில்  போல்மொழி  யாலுமெ 
தூசுற்றிடு  நூலிடை  யாலுமெ 
தோமிற்கத  லீநிக  ராகிய  ......  தொடையாலும் 
சோமப்ரபை  வீசிய  மாமுக 
சாலத்திலு  மாகடு  வேல்விழி 
சூதத்தினு  நானவ  மேதின  ......  முழல்வேனோ 
ஆலப்பணி  மீதினில்  மாசறு 
மாழிக்கிடை  யேதுயில்  மாதவ 
னானைக்கினி  தாயுத  வீயருள்  ......  நெடுமாயன் 
ஆதித்திரு  நேமியன்  வாமன 
னீலப்புயல்  நேர்தரு  மேனியன் 
ஆரத்துள  வார்திரு  மார்பினன்  ......  மருகோனே 
கோலக்கய  மாவுரி  போர்வையர் 
ஆலக்கடு  வார்கள  நாயகர் 
கோவிற்பொறி  யால்வரு  மாசுத  ......  குமரேசா 
கூர்முத்தமிழ்  வாணர்கள்  வீறிய 
சீரற்புத  மாநக  ராகிய 
கூடற்பதி  மீதினில்  மேவிய  ......  பெருமாளே. 
  • ஏலப் பனி நீர் அணி மாதர்கள் கானத்தினுமே உறவு ஆடிடும் ஈரத்தினுமே வளை சேர் கரம் அதனாலும்
    வாசனைத் தைலமும், பன்னீரும் பூசும் (கூந்தலை உடைய) விலைமாதர்களின் இசைப் பாடல் மீதும், உறவாடிப் பேசும் அன்பு மொழிகள் மீதும், வளையல் அணிந்த கரங்களின் மீதும்,
  • ஏமக் கிரி மீதினிலே கரு நீலக் கயம் ஏறிய நேர் என ஏதுற்றிடு மா தன மீதினும் மயலாகி
    பொன்மலையின் மீது கரிய யானை ஏறியது போன்று பொருந்தினவாய் விளங்கும் பெரிய மார்பகங்களின் மீதும் காம இச்சை கொண்டு,
  • சோலைக் குயில் போல் மொழியாலுமெ தூசு உற்றிடு நூல் இடையாலுமெ
    சோலையில் உள்ள குயிலின் குரல் போன்ற பேச்சுக்களாலும், ஆடை சுற்றியுள்ள நூல் போன்ற இடையாலும்,
  • தோம் இல் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும்
    குற்றம் இல்லாத வாழைத் தண்டுக்கு ஒப்பான தொடையாலும், நிலவொளி வீசிடும் அழகிய முகத்தின் மினுக்கு நடிப்பாலும்,
  • மா கடு வேல் விழி சூது அ(த்)தினும் நான் அவமே தினம் உழல்வேனோ
    மிக்க விஷம் கொண்ட வேல் போன்ற கூரிய கண்களின் சூதிலும் அகப்பட்டு, நான் வீணாக நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ?
  • ஆலப் பணி மீதினில் மாசு அறும் ஆழிக்கு இடையே துயில் மாதவன்
    விஷம் கொண்ட பாம்பாகிய ஆதிசேஷன் மேல் குற்றம் இல்லாத பாற்கடலிடையே அறிதுயில் கொண்டுள்ள பெரியோன்,
  • ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் நெடுமாயன்
    யானையாம் கஜேந்திரனுக்கு அன்புடனே உதவி செய்தருளிய பெரிய மாயவன்,
  • ஆதித் திரு நேமியன் வாமனன் நீலப் புயல் நேர் தரு மேனியன்
    ஆதி மூர்த்தியாய் விளங்கும் அழகிய சக்ராயுதன், வாமன அவதாரம் (குறள் வடிவம்) எடுத்தவன், நீல மேகம் போன்ற கரிய நிறம் கொண்டவன்,
  • ஆரத் துளவார் திரு மார்பினன் மருகோனே
    மாலையாக துளசியை நிரம்பக் கொண்ட அழகிய மார்பை உடையவன் ஆகிய திருமாலின் மருகனே,
  • கோலக் கய மா உரி போர்வையர் ஆலக் கடு ஆர் கள(ர்) நாயகர்
    அழகிய யானையின் பெரிய உரித்தோலை போர்வையாகக் கொண்டவர், ஆலகால விஷம் நிறைந்த கழுத்தைக் கொண்ட தலைவராகிய சிவபெருமானின்
  • கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா
    கண்களினின்று எழுந்த தீப்பொறியால் வெளிவந்த சிறந்த பிள்ளையான குமரேசனே,
  • கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய
    சிறந்த முத்தமிழ்ப் புலவர்கள் விளங்கிய சிறப்பைக் கொண்ட அற்புதமான பெருநகரமாகிய
  • கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே.
    நான்மாடற்கூடலாம் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com