தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த ...... கமரேசா
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த ...... குருநாதா
தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே
வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு ...... மறியாத
மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
மாமயில் நடத்து ...... முருகோனே
தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி
சேரமரு வுற்ற ...... திரள்தோளா
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல்கொடு தணித்த ...... பெருமாளே.
- ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
யானைமுக விநாயகனுக்கு நேராகப் பின்தோன்றிய அன்பனே, - ஆறுமுக வித்தக அமரேசா
ஆறு திருமுகங்களை உடைய ஞான வித்தகனே, தேவர்களின் கடவுளே, - ஆதியரனுக்கும் வேதமுதல்வற்கும்
ஆதிதேவன் சிவபிரானுக்கும் வேத முதல்வன் பிரமனுக்கும் - ஆரணமுரைத்த குருநாதா
வேத மந்திரத்தை உபதேசித்த குருநாதனே, - தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
அசுரர் குலத்தையே வாளினால் வெட்டி வீழ்த்திய - சால்சதுர் மிகுத்த திறல்வீரா
நிறைந்த சாமர்த்தியம் மிகுந்த பராக்கிரமசாலியே, - தாளிணைகள் உற்று மேவிய பதத்தில்
உன் இரு திருவடிகளிலும் வீழ்ந்து பொருந்தும் பதவியில் - வாழ்வொடு சிறக்க அருள்வாயே
நல்வாழ்வோடு நான் சிறந்து விளங்க அருள் புரிவாயாக. - வானெழு புவிக்கு மாலும் அயனுக்கும்
மேல் ஏழு உலகங்களுக்கும்* திருமாலுக்கும், பிரம்மனுக்கும் - யாவரொருவர்க்கும் அறியாத
வேறு யாருக்குமே அறியமுடியாத - மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
சிறந்த மதுரைத் தலத்து சொக்கேசர் சிவனும், பார்வதியும் மகிழ - மாமயில் நடத்து முருகோனே
அழகிய மயிலின் மீதேறி அதனைச் செலுத்தும் முருகனே, - தேனெழு புனத்தில்
தேன் மிகுந்த வள்ளிமலைத் தினைப்புனத்தில் - மான்விழி குறத்தி சேர
மான் ஒத்த கண்ணாள் குறத்தி வள்ளி உன்னைச் சேரும்படியாக - மருவுற்ற திரள்தோளா
அவளை அணைத்திட்ட திரண்ட புயங்களை உடையவனே, - தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
தேவர்களது மனத்தில் சூரனைப் பற்றித் தோன்றிய அச்சத்தை - வேல்கொடு தணித்த பெருமாளே.
உன் வேலாயுதத்தால் போக்கிய பெருமாளே.