தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான
அலகில வுணரைக் கொன்ற தோளென
மலைதொளை யுருவச் சென்ற வேலென
அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டரீக
அடியென முடியிற் கொண்ட கூதள
மெனவன சரியைக் கொண்ட மார்பென
அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ
கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்
இலகுக டலைகற் கண்டு தேனொடு
மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்
இனிமையி னுகருற் றெம்பி ரானொரு ...... கொம்பினாலே
எழுதென மொழியப் பண்டு பாரதம்
வடகன சிகரச் செம்பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ
வலம்வரு மளவிற் சண்ட மாருத
விசையினும் விசையுற் றெண்டி சாமுக
மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு
மரகத கலபச் செம்புள் வாகன
மிசைவரு முருகச் சிம்பு ளேயென
மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே.
- அலகு இல் அவுணரை கொன்ற தோள் என
கணக்கற்ற அசுரர்களைக் கொன்று அழித்த உனது தோளைப் புகழ்ந்தும், - மலை தொளை உருவச் சென்ற வேல் என
கிரெளஞ்ச மலையைத் தொளை படும்படி ஊடுருவிச் சென்ற உனது வேலைப் புகழ்ந்தும், - அழகிய கனகத் தண்டை சூழ்வன புண்டரீக அடி என
அழகிய பொன்னாலாகிய தண்டைகள் சூழ்ந்துள்ள தாமரைபோன்ற உனது திருவடியைப் புகழ்ந்தும், - முடியில் கொண்ட கூதளம் என
வெண்தாளியினது தண்மையான பூவை அணிந்த உனது திருமுடியைப் புகழ்ந்தும், - வனசரியைக் கொண்ட மார்பு என
வேட்டுவச்சியான வள்ளியை அணைந்த மார்பு என்று உனது மார்பைப் புகழ்ந்தும், - அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக அன்பு உறாதோ
ஆறுமுகம் என்று உனது ஆறு திருமுகங்களைப் புகழ்ந்தும், உள்ளம் நெகிழ்ந்து என்னுடைய எலும்புகள் எல்லாம் உருகும்படியான அன்பு எனக்குக் கிட்டாதோ? - கல கல கல எனக் கண்ட பேரொடு சிலுகிடு சமயப் பங்க
வாதிகள்
கலகலகலவென்று பேரொலியுடன் கண்ட பேர்களுடன் கூச்சலிட்டு சமயக் குற்றங்களை எடுத்துப் பேசி வாதம் செய்வோர்கள் - கதறிய வெகு சொல் பங்கம் ஆகிய பொங்கு அளாவும்
உரக்கக் கத்தும் பல தவறுகள் மிகுந்த, கொதிக்கும் கோபம் நிறைந்த, சொற்களால் ஆகிய - கலைகளும் ஒழியப் பஞ்ச பூதமும் ஒழி உற
பொய்ச் சாத்திர நூல்கள் ஒழிந்து, என் மீது ஐந்து பூதங்களின் செயல்களும் அடங்கி நீங்க, - மொழியின் துஞ்சு உறாதன கரணமும் ஒழிய
சொல்லப் போனால், ஓய்தல் இல்லாத அந்தக்கரணமாகிய மனம் ஒடுங்கி ஒழிய, - தந்த ஞானம் இருந்தவாறு என்
நீ எனக்கு உபதேசித்து அருளிய ஞானத்துக்கு உள்ள பெருமைதான் எத்தனை ஆச்சரியமாய் உள்ளது. - இலகு கடலை கற்கண்டு தேனொடும்
நல்ல விளக்கமுடைய கடலை, கற்கண்டு, தேன் இவைகளுடன் - இரதம் உறு தினைப் பிண்டி பாகுடன்
ருசிகரமான தினை மாவு, வெல்லப் பாகு இவற்றைக் கலந்து - இனிமையில் நுகர் உற்ற எம்பிரான் ஒரு கொம்பினாலே
மகிழ்ச்சியுடன் உண்ணும் விநாயகர் ஒற்றைக் கொம்பால் - எழுது என மொழியப் பண்டு பாரதம்
வியாச முனிவர் எழுதும்படி வேண்ட, முன்பு, பாரதக் கதையை - வட கன சிகரச் செம் பொன் மேருவில்
வடக்கே உள்ளதும் கனத்த உச்சிகளை உடையதுமான செம்பொன் மயமான மேரு மலையில், - எழுதிய பவளக் குன்று தாதையை அன்று சூழ வலம் வரும்
அளவில்
எழுதிய பவள மலையைப்போன்ற கணபதி, அன்று தந்தையாகிய சிவபெருமானைச் சுற்றி வந்து வலம் வரும் நேரத்துக்குள், - சண்ட மாருத விசையினும் விசையுற்று எண் திசா முக
மகிதலம் அடையக் கண்டு
சூறாவளியின் வேகத்திலும் வேகமாக எட்டு திசையிடங்களைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்த்து, - மாசுணம் உண்டு உலாவு மரகத கலபச் செம் புள் வாகன
மிசை வரு முருக
பாம்பை உண்டு உலாவுகின்றதும், பச்சைத் தோகையைக் கொண்டதும், வலிமையான பக்ஷியுமாகிய மயில் வாகனத்தின் மீது வந்த முருகனே, - சிம்புளே என மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு
தம்பிரானே.
சிங்கத்தை அடக்கவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள்ளே (சரபப் பக்ஷியே*) என்று புகழ்ந்து, மதுரைத் தலத்தில் வழிபட்டு தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே.