தனந்த தானனத் தனதன ...... தனதான
தரங்க வார்குழற் றநுநுதல் ...... விழியாலம்
தகைந்த மாமுலைத் துடியிடை ...... மடமாதர்
பரந்த மாலிருட் படுகுழி ...... வசமாகிப்
பயந்து காலனுக் குயிர்கொடு ...... தவியாமல்
வரந்த ராவிடிற் பிறரெவர் ...... தருவாரே
மகிழ்ந்து தோகையிற் புவிவலம் ...... வருவோனே
குரும்பை மாமுலைக் குறமகள் ...... மணவாளா
குளந்தை மாநகர்த் தளியுறை ...... பெருமாளே.
- தரங்க(ம்) வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா
முலைத் துடி இடை மட மாதர்
அலைபோலப் புரளுகின்ற நீண்ட கூந்தல், வில்லைப் போன்ற நெற்றி, ஆலகால விஷத்தைப் போன்ற கண்கள், காண்போர் மனத்தைக் கவரும் பெரிய மார்பகங்கள், உடுக்கை போன்ற சுருங்கிய இடுப்பு இவைகளைக் கொண்ட அழகிய விலைமாதர்கள் மீதுள்ள - பரந்த மால் இருள் படு குழி வசமாகிப் பயந்து காலனுக்கு
உயிர் கொடு தவியாமல்
நிரம்பிய மோகம் என்னும் இருள் நிறைந்த பெரிய குழியில் அகப்பட்டு, யமனுக்கு அஞ்சி உயிர் நடுங்க நான் தவிக்காதபடிச் செய்வாய். - வரம் தராவிடில் பிறர் எவர் தருவாரே
நீ எனக்கு வரம் தராவிட்டால் வேறு எவர் தான் கொடுப்பார்கள்? - மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே
மனம் மகிழ்ந்து மயிலின் மீது ஏறி பூமியை வலமாகச் சுற்றி வந்தவனே, - குரும்பை மா முலைக் குற மகள் மணவாளா
தென்னங் குரும்பை போன்ற சிறந்த மார்பகங்களைக் கொண்ட குறக் குலத்துப் பெண் வள்ளியின் கணவனே, - குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே.
குளந்தை என்று விளங்கும் பெரியகுளத்தில்* உள்ள கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளே.