திருப்புகழ் 952 ஈர மோடு சிரித்து (கீரனூர்)

தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஈர  மோடுசி  ரித்துவ  ருத்தவும் 
நாத  கீதந  டிப்பிலு  ருக்கவும் 
ஏவ  ராயினு  மெத்திய  ழைக்கவு  ......  மதராஜன் 
ஏவின்  மோதுக  ணிட்டும  ருட்டவும் 
வீதி  மீதுத  லைக்கடை  நிற்கவும் 
ஏறு  மாறும  னத்தினி  னைக்கவும்  ......  விலைகூறி 
ஆர  பாரத  னத்தைய  சைக்கவு 
மாலை  யோதிகு  லைத்துமு  டிக்கவும் 
ஆடை  சோரஅ  விழ்த்தரை  சுற்றவும்  ......  அதிமோக 
ஆசை  போல்மன  இஷ்டமு  ரைக்கவு 
மேல்வி  ழாவெகு  துக்கம்வி  ளைக்கவும் 
ஆன  தோதக  வித்தைகள்  கற்பவ  ......  ருறவாமோ 
பார  மேருப  ருப்பத  மத்தென 
நேரி  தாகஎ  டுத்துட  னட்டுமை 
பாக  ராரப  டப்பணி  சுற்றிடு  ......  கயிறாகப் 
பாதி  வாலிபி  டித்திட  மற்றொரு 
பாதி  தேவர்பி  டித்திட  லக்ஷுமி 
பாரி  சாதமு  தற்பல  சித்திகள்  ......  வருமாறு 
கீர  வாரிதி  யைக்கடை  வித்ததி 
காரி  யாயமு  தத்தைய  ளித்தக்ரு 
பாளு  வாகிய  பச்சுரு  வச்சுதன்  ......  மருகோனே 
கேடி  லாவள  கைப்பதி  யிற்பல 
மாட  கூடம  லர்ப்பொழில்  சுற்றிய 
கீர  னுருறை  சத்தித  ரித்தருள்  ......  பெருமாளே. 
  • ஈரமோடு சிரித்து வருத்தவும் நாத கீத நடிப்பில் உருக்கவும்
    கருணை நிறைந்த முகத்துடன் சிரித்து வரவழைப்பதற்கும், ஒலி நிறைந்த இசையாலும், நடனத்தாலும் மனத்தை உருக்குதற்கும்,
  • ஏவராயினும் எத்தி அழைக்கவும் மத ராஜன் ஏவின் மோது கண் இட்டு மருட்டவும்
    யாராயிருந்த போதிலும் வஞ்சித்து அழைப்பதற்கும், காமனுடைய அம்பு போல தாக்குகின்ற கண்களைக் கொண்டு (வந்தவரை) மயக்குதற்கும்,
  • வீதி மீது தலைக் கடை நிற்கவும் ஏறு மாறு மனத்தினில் நினைக்கவும் விலை கூறி ஆர பார தனத்தை அசைக்கவும்
    தெருப் பக்கத்தில் தலை வாசல் படியில் நிற்பதற்கும், தாறுமாறான எண்ணங்களை மனதில் நினைப்பதற்கும், விலை பேசி முடித்து, முத்து மாலை அணிந்ததும் கனத்ததுமான மார்பை அசைப்பதற்கும்,
  • மாலை ஓதி குலைத்து முடிக்கவும் ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும்
    பூ மாலை அணிந்துள்ள கூந்தலை அவிழ்த்து முடிப்பதற்கும், ஆடை நெகிழும்படி வேண்டுமென்றே அவிழ்த்து இடுப்பில் சுற்றுதற்கும்,
  • அதி மோக ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும் மேல் விழா வெகு துக்கம் விளைக்கவும் ஆன தோதக வித்தைகள் கற்பவர் உறவாமோ
    அதிக மோகம் கொண்ட ஆசை உள்ளவர்கள் போல தங்கள் மனத்தில் உள்ள விருப்பத்தை எடுத்துச் சொல்லுவதற்கும், மேலே விழுந்து மிக்க துக்கத்தை உண்டு பண்ணுதற்கும் வேண்டியதான வஞ்சனை வித்தைகளைக் கற்றுள்ளவர்களாகிய விலைமாதர்களின் சம்பந்தம் நல்லதாகுமா?
  • பார மேரு பருப்பத(ம்) மத்து என நேரிதாக எடுத்து உடன் நட்டு உமை பாகர் ஆரப் படம் பணி சுற்றிடு கயிறாக
    கனத்த மேரு மலையை மத்தாகத் தேர்ந்து எடுத்து, உடனே அதை (பாற்கடலில்) நாட்டி, உமையைப் பாகத்தில் உடைய சிவபெருமானது மாலையாக விளங்குவதும், படங்களைக் கொண்டதுமான (வாசுகி என்ற) பாம்பை (அந்த மத்துக்குச்) சுற்ற வேண்டிய கயிறாகப் பூட்டி,
  • பாதி வாலி பிடித்திட மற்றொரு பாதி தேவர் பிடித்திட லக்ஷுமி பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு
    ஒரு பாதியை வாலி பிடிக்க, மற்றொரு பாதியைத் தேவர்கள் பிடித்திட, லக்ஷ்மி, பாரிஜாதம் முதலான பல சித்திகளும், அரும் பொருட்களும் (பாற்கடலில் இருந்து) வெளிவரும்படி,
  • கீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை அளித்த க்ருபாளு ஆகிய பச்சு உரு அச்சுதன் மருகோனே
    பாற்கடலைக் கடைவித்த தலைவனாய், அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தருளிய கிருபா மூர்த்தியாகிய, பச்சை நிறம் கொண்ட திருமாலின் மருகனே,
  • கேடிலா அளகை பதியில் பல மாட கூட மலர் பொழில் சுற்றிய கீரனூர் உறை சத்தி தரித்து அருள் பெருமாளே.
    அழிவு இல்லாத குபேரன் நகராகிய அளகாபுரி போல, பல மாடக் கூடங்களும் மலர்ச் சோலைகளும் நிறைந்த கீரனூரில்* வீற்றிருந்து, வேல் ஏந்தி அனைவருக்கும் திருவருள் புரியும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com