தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்
தனதனனந் தத்தத் ...... தனதான
கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
கடனபயம் பட்டுக் ...... கசடாகுங்
கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
கலகலெனுங் கொட்புற் ...... றுடன்மோதும்
அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
றரவியிடந் தப்பிக் ...... குறியாத
அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்
றருள்வசனங் கிட்டப் ...... பெறலாமோ
கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
கொடிமருவுஞ் செச்சைப் ...... புயமார்பா
கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
குரைகடல்செம் பச்சக் ...... கரவாளச்
சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினுந் தத்தச் ...... செகமேழுந்
திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்
திறல கொடும் பைக்குட் ...... பெருமாளே.
- கலைஞர் எ(ண்)ணும் கற்பு கலி யுக பந்தத்துக் கடன் அபயம்
பட்டு
கலை வல்லோர் மதிக்கும் கல்வியிலும், கலியுக சம்பந்தமான தளைகளில் ஏற்படும் கடமைகளிலும் அடைக்கலம் புகுந்தது போல, - கசடு ஆகும் கரும சடங்கம் சட் சமயிகள் பங்கிட்டுக் கலகல
எனும் கொட்பு உற்று உடன் மோதும்
பயனற்ற செயல்களாகிய சடங்குகளைக் கூறும் ஆறு சமயத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் பங்கிட்டுக் கொண்டு, கலகல என்ற பெருத்த ஓசையுடன், வெறிபிடித்தது போல ஒருவரோடு ஒருவர் தாக்கும் - அலகு இல் பெரும் தர்க்கப் பல கலையின் பற்று அற்று
அரவியிடம் தப்பி
அளவில்லாத பெரிய வாதத்துக்கு இடம் தரும் பல கலை நூல்களிலும் ஆசையை விட்டொழித்து, (அந்த வாதங்கள் எழுப்பும்) ஒலியிலிருந்து தப்பிப் பிழைத்து, - குறியாத அறிவை அறிந்து அப்பற்று அதனினொடும் சற்று
உற்று
சுட்டிக் காட்ட முடியாத அறிவு இன்னது என்பதை அறிந்து, அந்த ஞானப் பற்றுடன் சிறிது காலம் நிலைத்திருந்து, - அருள் வசனம் கிட்டப் பெறலாமோ
திருவருள் உபதேசம் எனக்குக் கிடைப்பது கூடுமோ? - கொலைஞர் எனும் கொச்சைக் குறவர் இளம் பச்சைக் கொடி
மருவும் செச்சைப் புய மார்பா
கொலைஞர்கள் என்று கருதப்பட்ட, பாமரர்களான, குறவர்களிடம் வளர்ந்த இளமை வாய்ந்த பச்சைக் கொடி போன்ற (வள்ளி நாயகி) தழுவும் வெட்சி மாலை அணிந்த புயத்தையும், மார்பையும் கொண்டவனே, - கொடிய நெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக் குரை
கடல் செம்ப
கொடுமை வாய்ந்த நெடிய மாமரமாகி நெருங்கிவந்து போரிட்ட அசுரன் சூரன் அழிபட்டு, ஒலிக்கும் கடல் பொங்கி எழ, - சக்கரவாளச் சிலை பக எண் திக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினும் தத்த
சக்கரவாளம் எனப்படும் மலை பிளவுபட, எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகளும் பத்துத் திசைகளிலும்* சிதற, - செகம் ஏழும் திருகு சிகண்டிப் பொற் குதிரை விடும் செட்டித்
திறல
ஏழு உலகங்களிலும், முறுக்கி விடப்பட்ட மயிலாகிய அழகிய குதிரையைச் செலுத்தி விட்ட செட்டி எனப் பெயர் கொண்ட வல்லவனே, - கொடும்பைக்குள் பெருமாளே.
கொடும்பாளூர்** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.