திருப்புகழ் 950 மைச் சரோருகம் (பேரூர்)

தத்த தானன தத்த தானன
தானா தானா தானா தானா ...... தனதான
மைச்ச  ரோருக  நச்சு  வாள்விழி 
மானா  ரோடே  நானார்  நீயா  ......  ரெனுமாறு 
வைத்த  போதக  சித்த  யோகியர் 
வாணாள்  கோணாள்  வீணாள்  காணா  ......  ரதுபோலே 
நிச்ச  மாகவு  மிச்சை  யானவை 
நேரே  தீரா  யூரே  பேரே  ......  பிறவேயென் 
நிட்க  ராதிகண்  முற்பு  காதினி 
நீயே  தாயாய்  நாயேன்  மாயா  ......  தருள்வாயே 
மிச்ச  ரோருக  வச்ர  பாணியன் 
வேதா  வாழ்வே  நாதா  தீதா  ......  வயலூரா 
வெற்பை  யூடுரு  வப்ப  டாவரு 
வேலா  சீலா  பாலா  காலா  ......  யுதமாளி 
பச்சை  மாமயில்  மெச்ச  வேறிய 
பாகா  சூரா  வாகா  போகா  ......  தெனும்வீரா 
பட்டி  யாள்பவர்  கொட்டி  யாடினர் 
பாரூ  ராசூழ்  பேரூ  ராள்வார்  ......  பெருமாளே. 
  • மைச் சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே
    மை பூசியுள்ளதும், தாமரை, விஷம், வாள் இவற்றைப் போன்றதுமான கண்களை உடைய பெண்களுடன்
  • நான் யார் நீ யார் எனுமாறு வைத்த போதக சித்த யோகியர்
    நான் யார், நீ யார் என்னும் வகையில் (மாதர்கள் மயக்கால் சிறிதேனும் தாக்கப்படாதவராய்) தங்கள் மன நிலையை வைத்துள்ள ஞானத்துடன் கூடிய சித்தர்களும், யோகிகளும்,
  • வாழ் நாள் கோள் நாள் வீண் நாள் காணார்
    தமது வாழ் நாளாலும், கிரகங்களாலும் ஒரு நாள் கூட வீணாகப் போகும்படியான நாளாகக் காணமாட்டார்.
  • அது போலே நிச்சமாகவும் இச்சையானவை நேரே தீரா
    அது போலவே, உறுதியாக (மண், பொன், பெண் என்னும்) மூவாசைகள் ஒரு வழியாக முடிவு பெறுவதில்லை.
  • ஊரே பேரே பிறவே
    (ஆதலால்) எனது சொந்த ஊர் போல் இனியவனே, என் பேர் போல் இனியவனே, எனக்கு இனிய பிற பொருட்களும் ஆனவனே,
  • என் நிட்கராதிகள் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே
    என்னை நிச்சயமாகப் பீடிக்கும் மூன்றான எவையும் (முன்பு சொன்ன மூவாசைகள், மும்மலங்கள் - ஆணவம், கன்மம், மாயை, முக்குற்றங்கள் - பொய், களவு, கொலை, முக்குணங்கள் - சத்வம், ரஜஸ், தமஸ், முதலியவை) முற்பட்டு என்னைத் தாக்காமல், இனிமேல் நீயே தாய் போல் இருந்து அடியேன் இறந்து போகாமல் அருள் புரிவாயாக
  • மிச்சரோருக வச்ர பாணியன் வேதா வாழ்வே நாத அதீதா வயலூரா
    தாமரை போன்ற கண்கள் உடல் எல்லாம் கொண்டுள்ளவனும், வஜ்ராயுதத்தை ஏந்திய கையனுமாகிய இந்திரன், பிரமன் இவர்கள் போற்றும் செல்வமே, நாத ஒலிக்கு அப்பாற்பட்டவனே, வயலூரானே,
  • வெற்பை ஊடுருவப் படா வரு வேலா சீலா பாலா கால் ஆயுதம் ஆளி
    கிரெளஞ்ச மலையை ஊடுருவித் தொளைத்துச் சென்ற வேலாயுதத்தை உடையவனே, நற்குணம் நிறைந்தவனே, பாலனே, காலை ஆயுதமாகக் கொண்ட சேவலைக் கொடியாக ஆள்பவனே,
  • பச்சை மா மயில் மெச்ச ஏறிய பாகா
    பச்சை நிறம் கொண்டதும், அழகுள்ளதுமான மயில் மீது தேவர் முதலானோர் மெச்சும்படி ஏறிய பாகனே,
  • சூரா ஆகா போகாது எனும் வீரா
    அடா சூரனே, ஆஹா, அப்புறம் போகாதே (நில்) என்று சொன்ன வீரனே,
  • பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர்* பாரூர் ஆ சூழ் பேரூர் ஆள்வார் பெருமாளே.
    (பிரமனாகிய) முனிவனுக்கு அருள் செய்தவரும், கொடு கொட்டி என்னும் நடனத்தை ஆடினவரும், பூமியில் சிறந்த ஊராகத் திகழும் தலமும், (தேவலோகத்துப் பசு) காமதேனுவாக வந்த திருமால் வலம் செய்ததுமான பேரூரை** ஆண்டருள்பவருமாகிய சிவபெருமானுக்கு குருவாக வந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com