தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்
கிதத்தபுட் குரற்கள்விட் ...... டநுராகம்
எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்
தெடுத்திதழ்க் கடித்துரத் ...... திடைதாவி
அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்
தலக்கணுற் றுயிர்க்களைத் ...... திடவேதான்
அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்
டயர்க்குமிப் பிறப்பினித் ...... தவிராதோ
கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்
கொடித்திருக் கரத்தபொற் ...... பதிபாடுங்
குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்
குருத்துவத் தெனைப்பணித் ...... தருள்வோனே
தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
தமிழ்த்ரயத் தகத்தியற் ...... கறிவோதுஞ்
சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்
தனிச்சயத் தினிற்பிளைப் ...... பெருமாளே.
- இலைச் சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி
மட்டைகட்கு இதத்த புள் குரல்கள் விட்டு அநுராகம் எழுப்பி
சுருட்டிய வெற்றிலையைப் (பாக்குடன்) கொடுத்து படுக்கையில் இருக்க வைத்து, பயனற்ற முட்டாள்களுக்கு இன்பம் தரக்கூடிய பறவைகளின் குரல்களை தொண்டையிலிருந்து வெளிவிட்டு காமப் பற்றை எழுப்பியும், - மைக் கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து
எடுத்து இதழ்க் கடித்து உரத்து இடை தாவி
மை பூசப்படும் கயல் மீன் போன்ற கண்ணிலும் கழுத்திலும் முத்தம் தந்து அணைத்தும், எடுத்தும், வாயிதழைக் கடித்தும், மார்பிடத்தே தாவியும், - அலைச்சல் உற்று இலச்சை அற்று அரைப் பை தொட்டு
உழைத்து உழைத்து அலக்கண் உற்று உயிர்க் களைத்திடவே
தான்
அலைச்சல் உற்று நாணம் இல்லாமல், பெண்குறியைத் தொட்டு, மிக உழைத்து, துன்பம் அடைந்து, உயிர் களைத்துப் போகும் அளவுக்கு, - அறத் தவித்து இளைத்து உறத் தனத்தினில் புணர்ச்சி பட்டு
அயர்க்கும் இப் பிறப்பு இனித் தவிராதோ
மிகவும் தவிப்பு அடைந்து, உடல் இளைத்து, மார்பகங்களை மிகத்தழுவி, அலுத்துப் போகும் இந்த பிறப்பு இனியாவது நீங்காதோ? - கொலைச் செருக்கு அரக்கரைக் கலக்கும் மிக்க குக்குடக்
கொடித் திருக் கரத்த
கொலை செய்வதில் பெருமை கொள்ளும் அரக்கர்களை கலங்கச் செய்தவனே, சேவல் கொடியைக் கையில் ஏந்தியவனே, - பொன் பதி பாடும் குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவக்
கவித்துவக் குருத்துவத்து எனைப் பணித்து அருள்வோனே
அழகிய தலங்கள் தோறும் உன்னைப் பாடும் நோக்கத்தைக் கொண்ட நல்ல திருப்புகழில் மிக மேம்பட்ட கவி பாடும் குருஸ்தானத்தில் என்னை நிலைக்க வைத்துக் கட்டளை இட்டு அருள் புரிந்தவனே, - தலைச் சுமைச் சடைச் சிவற்கு இலக்கணத்து இலக்கியத் தமிழ்
த்ரயத்து அகத்தியற்கு அறிவு ஓதும் சமர்த்தரில் சமர்த்த
தலையில் சுமை போல் பாரமான சடையைக் கொண்ட சிவபெருமானுக்கும், இலக்கணம், இலக்கியம், நாடகம் என்னும் முத்தமிழில் வல்லவரான அகத்திய முனிவர்க்கும் ஞானபோதகனே, சாமர்த்தியத்தில் முதல் இடத்தில் இருப்பவனே, - பச்சிமத் திசைக்கு உள உத்தமத் தனிச்சயத்தினில்
பி(ள்)ளைப் பெருமாளே.
மேற்குத் திசைக்குள் உள்ள உத்தமமான தனிச்சயம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் (சிவனாரின்) பிள்ளைப் பெருமாளே.