திருப்புகழ் 948 வனப்புற்றெழு (திருப்புக்கொளியூர்)

தனத்தத்தன தான தான தானன
தனத்தத்தன தான தான தானன
தனத்தத்தன தான தான தானன ...... தந்ததான
வனப்புற்றெழு  கேத  மேவு  கோகிலம் 
அழைக்கப்பொரு  மார  னேவ  தாமலர் 
மருத்துப்பயில்  தேரி  லேறி  மாமதி  ......  தொங்கலாக 
மறுத்துக்கடல்  பேரி  மோத  வேயிசை 
பெருக்கப்படை  கூடி  மேலெ  ழாவணி 
வகுத்துக்கொடு  சேம  மாக  மாலையில்  ......  வந்துகாதிக் 
கனக்கப்பறை  தாய  ளாவ  நீள்கன 
கருப்புச்சிலை  காம  ரோவில்  வாளிகள் 
களித்துப்பொர  வாசம்  வீசு  வார்குழல்  ......  மங்கைமார்கள் 
கலைக்குட்படு  பேத  மாகி  மாயும 
துனக்குப்ரிய  மோக்ரு  பாக  ராஇது 
கடக்கப்படு  நாம  மான  ஞானம  ......  தென்றுசேர்வேன் 
புனத்திற்றினை  காவ  லான  காரிகை 
தனப்பொற்குவ  டேயு  மோக  சாதக 
குனித்தப்பிறை  சூடும்  வேணி  நாயகர்  ......  நன்குமாரா 
பொறைக்குப்புவி  போலு  நீதி  மாதவர் 
சிறக்கத்தொகு  பாசி  சோலை  மாலைகள் 
புயத்துற்றணி  பாவ  சூர  னாருயிர்  ......  கொண்டவேலா 
சினத்துக்கடி  வீசி  மோது  மாகட 
லடைத்துப்பிசி  தாச  னாதி  மாமுடி 
தெறிக்கக்கணை  யேவு  வீர  மாமனும்  ......  உந்திமீதே 
செனித்துச்சதுர்  வேத  மோது  நாமனு 
மதித்துப்புகழ்  சேவ  காவி  ழாமலி 
திருப்புக்கொளி  யூரில்  மேவு  தேவர்கள்  ......  தம்பிரானே. 
  • வனப்பு உற்று எழு கேத(ம்) மேவு(ம்) கோகிலம் அழைக்கப் பொரு மாரன் ஏவ த(தா)ம் மலர்
    அழகு கொண்டு எழுகின்றதும், சோகத்தை விளைவிப்பதுமான குயில் கூவி அழைக்க, போரிடுவதற்கு வந்த மன்மதன் தனது பாணங்களாகிய மலர் கொண்டு,
  • மருத்துப் பயில் தேரில் ஏறி மா மதி தொங்கலாக மறுத்துக் கடல் பேரி மோதவே இசை பெருக்கப் படை கூடி மேல் எழா
    தென்றற் காற்றாகிய தேரில் ஏறிக் கொண்டு, அழகிய சந்திரன் வெண் குடையாக விளங்க, (அலைகள்) மாறி மாறி வரும் கடல் முரசப் பறையாக மோத, (புல்லாங்குழலின்) இசையை பெருகச் செய்ய சேனைகளாகிய மகளிர் கூடி, மேலெழுந்து புறப்பட்டு,
  • அணி வகுத்துக் கொ(ண்)டு சேமமாக மாலையில் வந்து காதிக்கனக்கப் பறைதாய அளாவ நீள் கன காமர் கருப்பு சிலை ஓ(ய்)வு இல் வாளிகள் களித்துப் பொர
    அணி வகுத்தது போல நன்றாக மாலை நேரத்தில் வந்து கொல்லுவது போல, மிகுதியாக பறை ஒலி விரிந்து பரவுதலாக, நீண்ட பெருமை வாய்ந்த அழகிய கரும்பு வில் ஓய்தல் இல்லாது அம்புகளை மகிழ்ச்சியுடன் வீசி (என்னுடன்) போர் செய்வதால்,
  • வாசம் வீசு வார் குழல் மங்கைமார்கள் கலைக்குள் படு பேதம் ஆகி மாயும் அது உனக்குப் ப்ரியமோ கிருபாகரா இது கடக்கப்படு நாமம் ஆன ஞானம் அது என்று சேர்வேன்
    நறுமணம் வீசும் நீண்ட கூந்தலை உடைய மாதர்களின் ஆடையுள் அகப்பட்டு நான் இறந்து போவது உனக்கு விருப்பம் தானோ? கருணாகரனே, இந்த என் தலைவிதியைத் தாண்டிக் கடக்கக் கூடியதும், பெருமை பொருந்தியதும் ஆகிய ஞான நிலையை நான் என்று கூடுவேன்?
  • புனத்தில் தினை காவலான காரிகை தனப் பொன் குவடு ஏயும் மோக சாதக குனித்தப் பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா
    தினைப் புனத்தில் காவல் புரிந்த பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களாகிய அழகிய மலையில் பொருந்திய ஆசையைக் கொண்ட ஜாதகத்தை உடையவனே, வளைவுள்ள பிறையைச் சூடியுள்ள சடையைக் கொண்ட சிவபெருமானுடைய நல்ல புதல்வனே,
  • பொறைக்குப் புவி போலும் நீதி மா தவர் சிறக்கத் தொகு பாசி சோலை மாலைகள் புயத்து உற்று அணி பாவ சூரன் ஆருயிர் கொண்ட வேலா
    பொறுமைக்கு பூமியைப் போலும் இருந்து, தர்மநெறியில் நின்ற பெரிய தவசிகள் சிறந்து வாழ, நெருங்கிய பசுமையான சோலைகளில் உள்ள மலர்களின் மாலைகளை புயத்தில் அணிந்தவனும், பாவியுமாகிய சூரனுடைய அரிய உயிரைக் கவர்ந்த வேலனே,
  • சினத்துக் கடி வீசி மோது(ம்) மா கடல் அடைத்துப் பிசித அசன ஆதி மா முடி தெறிக்கக் கணை ஏவும் வீர மாமனும்
    கோபித்து வேகமாக (அலைகளை) வீசி மோதுகின்ற பெரிய கடலை அணையிட்டு அடைத்து, மாமிசம் உண்ணும் அரக்கர் முதல்வனான ராவணனுடைய சிறந்த முடிகள் அற்று விழும்படி பாணத்தை ஏவிய வீரம் பொருந்திய மாமனாகிய திருமாலும்,
  • உந்தி மீதே செனித்துச் சதுர் வேதம் ஓது நாமனு(ம்) மதித்துப் புகழ் சேவகா
    அத்திருமாலின் கொப்பூழில் தோன்றி, நான் மறைகள் ஓதும் பெருமை பொருந்திய பிரமனும் நன் மதிப்பு வைத்துப் புகழ்கின்ற வலிமையாளனே,
  • விழா மலி திருப்புக்கொளியூரில் மேவும் தேவர்கள் தம்பிரானே.
    திருவிழாக்கள் நிறைந்து பொலியும் திருப்புக்கொளியூரில்* வீற்றிருப்பவனே, தேவர்கள் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com