தனத்தத்தன தானன தானன
தனத்தத்தன தானன தானன
தனத்தத்தன தானன தானன தந்ததான
மதப்பட்டவி சாலக போலமு
முகப்பிற்சன வாடையு மோடையு
மருக்கற்புர லேபல லாடமு ...... மஞ்சையாரி
வயிற்றுக்கிடு சீகர பாணியு
மிதற்செக்கர்வி லோசன வேகமு
மணிச்சத்தக டோரபு ரோசமு ...... மொன்றுகோல
விதப்பட்டவெ ளானையி லேறியு
நிறைக்கற்பக நீழலி லாறியும்
விஷத்துர்க்கன சூளிகை மாளிகை ...... யிந்த்ரலோகம்
விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு
பிரப்புத்வகு மாரசொ ரூபக
வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி ...... ருந்தவாழ்வே
இதப்பட்டிட வேகம லாலய
வொருத்திக்கிசை வானபொ னாயிர
மியற்றப்பதி தோறுமு லாவிய ...... தொண்டர்தாள
இசைக்கொக்கவி ராசத பாவனை
யுளப்பெற்றொடு பாடிட வேடையி
லிளைப்புக்கிட வார்மறை யோனென ...... வந்துகானிற்
றிதப்பட்டெதி ரேபொதி சோறினை
யவிழ்த்திட்டவி நாசியி லேவரு
திசைக்குற்றச காயனு மாகிம ...... றைந்துபோமுன்
செறிப்பித்த கராவதின் வாய்மக
வழைப்பித்தபு ராணக்ரு பாகர
திருப்புக்கொளி யூருடை யார்புகழ் ...... தம்பிரானே.
- மதப்பட்ட விசால கபோலமு(ம்) முகப்பில் ச(ன்)ன ஆடையும்
ஓடையும் மருக் கற்புர லேப லலாடமும் மஞ்சை ஆரி
மதநீர் பெருகுவதற்கு இடமானதும் அகலமானதுமான தாடையும், முன் புறத்தில் நுண்ணிய முகபடாமும் நெற்றிப் படமும், வாசனை பொருந்திய பச்சைக்கற்பூரம் கூடிய கலவையைக் கொண்ட நெற்றியும் உடைய யானையின் முதுகில் அம்பாரி பொருந்த, - வயிற்றுக்கு இடு சீகர பாணியு(ம்) மிதல் செக்கர் விலோசன
வேகமு(ம்) மணிச் சத்த கடோர புரோசமும் ஒன்று
வயிற்றில் இடுகின்ற வெகு அழகான தும்பிக்கையும், நன்கு சிவந்த கண்களும், அதிவேகமாகச் செல்லும் நடையும், மணிகளின் சப்தம் மிகப் பலமாகக் கேட்கும்படிக் கட்டப்பட்ட (கழுத்துக்) கயிறும் இவை எல்லாம் பொருந்தி, - கோல விதப்பட்ட வெள் ஆனையில் ஏறியு(ம்) நிறை கற்பக
நீழலில் ஆறியும்
அழகு விளங்குமாறு வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மேல் ஏறி பவனி வந்தும், நிறைந்து செழிப்பு உற்ற கற்பகத் தருவின் நிழலில் அமைதியாகக் களைப்பாறியும், - விஷத் துர்க்க(ம்) அ(ன்)ன சூளிகை மாளிகை இந்த்ரலோகம்
விளக்கச் சுரர் சூழ்தர வாழ் தரு பிரபுத்வ குமார சொரூபக
மலைக் கோட்டை போன்றனவும், நிலா முற்றங்களை உடையனவுமாகிய அரண்மனைகளை உடைய பொன்னுலகத்தில் புகழ் கொண்ட தேவர்கள் சூழ்ந்து பணிய வாழ்கின்ற பிரபுத் தன்மை கொண்டு ஆட்சி செய்யும் இளைஞனாகிய உருவம் உடையவனே, - வெளிப்பட்டு எனை ஆள் வயலூரில் இருந்த வாழ்வே
என் முன்னே வந்து தோன்றி என்னை ஆண்டருளிய, வயலூரில் வீற்றிருந்தருளும் செல்வனே, - இதப் பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன்
ஆயிரம் இயற்றப் பதி தோறும் உலாவிய தொண்டர்
இன்பம் அடையுமாறு திருவாரூரில் இருந்த ஒப்பற்ற காதலி பரவை நாச்சியாருக்கு ஏற்றதான ஆயிரம் பொன்னைச் சம்பாதிக்க தலங்கள்* தோறும் சென்று தரிசித்த அடியராகிய சுந்தரர் - தாள இசைக்கு ஒக்க இராசத பாவனை உ(ள்)ளப் பெற்றொடு
பாடிட வேடையில் இளைப்பு உக்கிட வார் மறையோன் என
வந்து கானில் திதப்பட்டு எதிரே
தாளத்தின் இசைக்குப் பொருந்தும்படி உறுதியான முயற்சித் தெளிவுடன் உள்ளப் பெருக்கத்துடன் தேவாரப்பதிகம் பாடி வருகையில், கோடைக் கால வெப்பத்தால் அவருக்கு ஏற்பட்ட இளைப்பு நீங்க, நேர்மையான ஒரு மறையவர் கோலத்துடன், சுந்தரர் வந்து கொண்டிருந்த காட்டில் வந்து நிலையாகவே சுந்தரரின் எதிரே தோன்றி, - பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு
திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம்
(தாம் கொண்டு வந்த) சோற்றுக் கட்டை அவிழ்த்துத் தந்தவரும், அவிநாசி என்னும் தலத்துக்கு வரும்போது, சுந்தரர் திசை தடுமாறிய சமயத்தில் அவருக்குத் திசையைக் காட்டி உதவி செய்து மறைந்து போனவரும், - முன் செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவு அழைப்பித்த
புராண க்ருபாகர
முன்பு ஏரியில் இருந்த முதலையின் வாயிலிருந்து (உள்ளிருந்த) பிள்ளையைச் (சுந்தரர் பாட்டுக்கு இரங்கி) வரச் செய்த** பழையவராகிய கருணாமூர்த்தியும், - திருப்புக் கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே.
திருப்புக்கொளியூர்*** என்னும் தலத்தை உடையவருமாகிய சிவபெருமான் புகழும் தம்பிரானே.