திருப்புகழ் · 946பக்குவ ஆசார (திருப்புக்கொளியூர்)

தத்தன தானான தத்தன தானான
தத்தன தானான ...... தனதான

Thiruppugazh Anbargal

பக்குவ வாசார லட்சண சாகாதி
பட்சண மாமோன ...... சிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
பற்றுநி ராதார ...... நிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
அப்படை யேஞான ...... வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
னற்புத சீர்பாத ...... மறவேனே
உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
வுற்பல வீராசி ...... மணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
யுற்பல ராசீவ ...... வயலூரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே.

பத உரை

  • பக்குவ ஆசார
    பக்குவமான ஆசார ஒழுக்க நிலையிலே நின்று,
  • லட்சண சாகாதி பட்சணமா
    சிறப்பான பச்சிலை, மூலிகைகள் போன்ற உணவையே உண்டு,
  • மோன சிவயோகர்
    மெளனத் தவநிலையில் நிற்கும் சிவயோகிகள்
  • பத்தியில் ஆறாறு தத்துவ மேல்வீடு பற்று
    தங்களது பக்தி மூலமாக முப்பத்தாறு* தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய் உள்ள மோக்ஷவீட்டைப் பற்றுவதானதும்,
  • நிராதார நிலையாக
    எந்தவிதமான பற்றும் இல்லாத நிலையை நான் அடைவதற்காகவும்,
  • அக்கணமே மாய துர்க்குணம் வேறாக
    அந்நிலையை நான் அடைந்ததுமே, மாயமாக வந்து என்னைப் பற்றியுள்ள துர்க்குணங்கள் யாவும் என்னை விட்டுப் பிரியவும்,
  • அப்படையேஞானவுபதேசம்
    அந்த ஞான உபதேசமே என்னைக் காக்கும் ஆயுதமாக மாறி,
  • அக்கற வாய்பேசு சற்குரு நாதா
    பாசம் யாவும் அற்றுப்போகும்படி உபதேச மந்திரத்தை வாய்விட்டுக் கூறிய சற்குருநாதனே,
  • உன் அற்புத சீர்பாத மறவேனே
    உனது அற்புதமான அழகிய திருவடிகளை நான் என்றும் மறவேன்.
  • உக்கிர ஈராறு மெய்ப்புயனே
    வலிமைமிக்க பன்னிரு தோள்களை, உண்மைக்கு எடுத்துக்காட்டான புயங்களை உடையவனே,
  • நீல உற்பல வீராசி மணநாற
    நீலோத்பல மலர்க் கூட்டங்களின் நறுமணம் மிகவும் வீசுவதும்,
  • ஒத்தநி லாவீசு
    பொருந்திய நிலாவின் ஒளி வீசுவதும்,
  • நித்தில நீராவி உற்பல ராசீவ வயலூரா
    முத்தைப் போல் தெளிவான நீருள்ள குளங்களில் குவளைகளும், தாமரைகளும் பூத்திருக்கும் வயலூரின் நாதனே,
  • பொக்கமி லாவீர விக்ரம
    பொய்யே இல்லாத மெய்யான வீரத்தைக் கொண்டவனே,
  • மாமேனி பொற்ப்ரபை யாகார
    அழகிய மேனி பொன்னொளியை வீசும் தேகத்தை உடையவனே,
  • அவிநாசிப் பொய்க்கலி போமாறு
    அவிநாசி என்ற தலத்தில் இந்தக் கலியுகத்தின் பொய்மை நீங்குமாறு
  • மெய்க்கருள் சீரான
    இறைவன் திருவருளின் புகழ் சிறக்கும்படிச் செய்த**
  • புக்கொளி யூர்மேவு பெருமாளே.
    திருப்புக்கொளியூர்*** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * 96 தத்துவங்கள் பின்வருமாறு: 36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி. ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
  • ** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது. இதைத்தான் 'கலியுகத்தின் அருள்' என்று குறிக்கிறார்.
  • *** திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.
  • * The 96 thathvAs (tenets) are as follows: 36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5. 5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos. 35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).
  • ** Once, a little boy went to take a dip in the nearby lake at ThiruppukkoLiyur and was eaten alive by a crocodile. After a year, SundharamUrthy NAyanAr, one of the Four Great Saivites, came to the barren lake and heard about the death of the boy. He sang AvinAsi Pathikam whereupon the lake was filled with water. The crocodile came to the bank of the lake and spat the boy alive, with one year's growth in the body too!
  • *** ThiruppokkoLiyUr is very close to AvinAsi in Coimbatore District.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout