திருப்புகழ் · 942அவசியமுன் வேண்டி (திருமுருகன்பூண்டி)

தனதனனந் தாந்தத் ...... தனதான

Thiruppugazh Anbargal

அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும்
அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில்
தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச்
சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே
சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய்
சடுசமயங் காண்டற் ...... கரியானே
சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே
திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.

பத உரை

  • அவசியமுன் வேண்டிப் பலகாலும்
    உன்னைத் தொழுவது அவசியமென அறிந்து பலமுறையும் பிரார்த்தித்து,
  • அறிவினுணர்ந்து ஆண்டுக்கொரு நாளில்
    எனது அறிவினில் உன்னை உணர்ந்து வருஷத்திற்கு ஒரு நாளாவது
  • தவசெபமுந் தீண்டிக் கனிவாகி
    தவ ஒழுக்கத்தையும் ஜெபநெறியையும் மேற்கொண்டு உள்ளம் கனிந்து,
  • சரணமதும் பூண்டற்கு அருள்வாயே
    உனது திருவடிகளை மனத்தே தரிப்பதற்கு நீ அருள்வாயாக.
  • சவதமொடுந் தாண்டித் தகர் ஊர்வாய்
    சபதம் செய்து இந்த ஆட்டை* அடக்குவேன் என்றுரைத்து, குதித்து ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்துவாய்.
  • சடுசமயங் காண்டற்கு அரியானே
    ஆறு** சமயத்தவராலும் காணுதற்கு அரியவனே,
  • சிவகுமர அன்பு ஈண்டிற் பெயரானே
    சிவகுமாரனே, உன்னை அன்பு கொண்டு நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும் பிரியாதவனே,
  • திருமுருகன் பூண்டிப் பெருமாளே.
    திருமுருகன்பூண்டி*** என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * நாரதர் செய்த யாகத்தில் தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகு மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு - கந்த புராணம்.
  • ** ஆறு வகைச் சமயம்: காணாபத்யம், செளரம், கெளமாரம், சைவம், வைணவம், சாக்தம்.
  • *** திருமுருகன்பூண்டி திருப்பூருக்கு வடக்கே 8 மைலில் உள்ளது.
  • * According to KandapurANam, once NArathar performed a sacrifice, and from the pyre came a Wild Goat which could not be controlled by anyone. Murugan asked His associate VeerabAhu to fetch the goat, vowing to restrain it. He then won over the goat and mounted on it.
  • ** Six sectors are GANApathyam, Sauram, Saivam, VaishNavam, SAktham and KaumAram.
  • *** ThirumuruganpUNdi is 8 miles to the North of ThiruppUr.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout