திருப்புகழ் · 941சங்கைக் கத்தோடு (பட்டாலியூர்)sangkaikkaththOdu
தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன
தந்தத்தத் தான தனதன ...... தனதான
தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh
சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
சங்கற்பித் தோதும் வெகுவித ...... கலைஞானச்
சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
சம்பத்துக் கேள்வி யலமல ...... மிமவானின்
மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
வந்திக்கப் பேசி யருளிய ...... சிவநூலின்
மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்
வம்பிற்சுற் றாது பரகதி ...... யருள்வாயே
வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக விடவல
வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் ...... மருகோனே
வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை ...... வயலூரா
கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
கொண்டைக்கொப் பாகு முகிலென ...... வனமாதைக்
கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ
கொங்கிற்பட் டாலி நகருறை ...... பெருமாளே.
பத உரைword meanings
- சங்கைக் கத்தோடு சிலுகிடு சங்கிச் சட் கோல சமயிகள்
சந்தேகக் கூச்சலோடு வாதம் செய்யக் கூடியுள்ள ஆறு வகையான சமயத்தினர்களும் - சங்கற்பித்து ஓதும் வெகு வித கலை ஞானச் சண்டைக்குள்
கேள்வி அலம் அலம்
தாம் உறுதி செய்து கொண்டு பேசுகின்ற பல விதமான சாஸ்திர ஞானச் சண்டைகளுக்கு வேண்டிய அறிவு போதும் போதும். - அண்டற்குப் பூசை இடுமவர் சம்பத்துக் கேள்வி அலம் அலம்
கடவுளுக்குப் பூஜை செய்பவர்களுடைய செல்வமாகிய அறிவும் போதும் போதும். - இமவானின் மங்கைக்குப் பாகன் இருடிகள் எங்கட்குச் சாமி
என அடி வந்திக்கப் பேசி அருளிய
இமய மலை அரசனின் பெண்ணாகிய பார்வதிக்குப் பாகர் என்றும், முனிவர்கள் எல்லாம் எங்களுக்குச் சுவாமி என்றும் திருவடியைத் துதிக்க ஓதி விளக்கியுள்ள - சிவ நூலின் மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன அந்த்ரத்துக் கேள்வி
அலம் அலம்
சிவ நூல்களில் கூறப்பட்ட மந்திரங்களின் கணக்குப் பிரமாண காட்சியை விளக்கும் மந்திர சக்கரங்களைப் பற்றிய ஆராய்ச்சி அறிவும் போதும் போதும். - வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே
இவ்வாறு வீணான சுற்று வழிகளில் நான் திரிந்து அலையாமல் மேலான வீட்டுப் பேற்றை அருள்வாயாக. - வெங்கைச் சுக்ரீபர் படையை இலங்கைக்குப் போக விட
வ(ல்)ல வென்றிச் சக்ரேசன் மிக மகிழ் மருகோனே
மிக்க ஆற்றலைக் கொண்ட சுக்ரீவனுடைய வானர சேனையை (கடல் கடந்து) இலங்கைக்கு போகும்படிச் செய்ய வல்லவனும், வெற்றியையே தருகின்ற சக்கரத்தை ஏந்தியவனுமாகிய திருமால் மிகவும் மனம் மகிழும் மருகனே, - வெண் பட்டுப் பூண் நல் வனம் கமுகு எண்பட்டுப் பாளை
விரி பொழில் விஞ்சிட்டுச் சூழ வெயில் மறை வயலூரா
வெண் பட்டு அணிந்துள்ளது போல் நல்ல அழகிய பாக்கு மரங்கள் மதிக்கத் தக்க வகையில் பாளைகளை விரிக்கின்ற சோலைகள் மிக்குச் சூழ்வதால் வெயில் மறைபடுகின்ற வயலூரில் வீற்றிருப்பவனே, - கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும்
நறு மலர் கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என
உனது மார்புக்கு வடக்கே உள்ள மேரு மலையே ஒப்பானது, உனது செவ்விய கைக்கு நறு மணம் வீசும் தாமரையே ஒப்பாகும், உனது கூந்தலுக்கு கரு மேகம் ஒப்பாகும் என்று - வன மாதைக் கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச் சொல்
பாடும் இளையவ
காட்டில் இருந்த வள்ளியை கும்பிட்டுத் துதித்து வணங்கிய, கொஞ்சிப் பேசி இனிய சொற்களைக் கொண்டு பாடிப் பரவிய, இளையவனே, - கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே.
கொங்கு நாட்டில் உள்ள பட்டாலி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே.
குறிப்புகள் · notes
- * இது 'பட்டாலி சிவ மலை' என்று வழங்கப்படுகிறது. ஈரோடு - திருப்பூர் சாலையில் உள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.
- * This place is now known as PattAli Sivamalai, situated on the road between EerOde (Erode) and ThiruppUr, near KangkEyam.
