திருப்புகழ் · 934பரிவுறு நாரற்று (சேலம்)

தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ...... தனதான

தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh

பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
சிலைபொரு காலுற் ...... றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல்தனி யோசைத் ...... தரலாலே
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
தனிமிக வாடித் ...... தளராதே
மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு காவுற் ...... றணைவாயே
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
தொடுகும ராமுத் ...... தமிழோனே
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
திருவளர் சேலத் ...... தமர்வோனே
பொருகிரி சூரக் கிளையது மாளத்
தனிமயி லேறித் ...... திரிவோனே
புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளையவி நோதப் ...... பெருமாளே.

பத உரை

  • பரிவுறு நார் அற்று அழல்மதி வீச
    இரக்கம் கலந்த அன்பு சிறிதும் இல்லாமல் நெருப்பை நிலவு வீசுவதாலும்,
  • சிலைபொரு காலுற்று அதனாலே
    பொதிய மலையினின்று பொருந்தவரும் தென்றல் காற்று (சூடாக) மேலே படுவதனாலும்,
  • பனிபடு சோலைக் குயிலது கூவ
    குளிர்ச்சியுள்ள சோலையில் குயில் ஒன்று சோகமாய்க் கூவுவதாலும்,
  • குழல்தனி யோசைத் தரலாலே
    புல்லாங்குழல் ஒப்பற்ற (சோக) ஓசையைத் தருவதாலும்,
  • மருவியல் மாதுக்கு இருகயல் சோர
    உன்னைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இந்தப் பெண் தன் இரண்டு கயல் மீன் போன்ற கண்கள் சோர்வடைய,
  • தனிமிக வாடித் தளராதே
    தனியே கிடந்து மிகவும் வாட்டமுற்று தளர்ச்சியுறாமல்,
  • மனமுற வாழத் திருமணி மார்பத்து
    அவளின் நொந்த மனம் ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ, உன் அழகிய ரத்ன மணிமாலை அணிந்த மார்பிடத்தே,
  • அருள்முருகா உற்று அணைவாயே
    அருளே உருவான முருகனே, நீ வந்து அவளை இறுக்க அணைவாயாக.
  • கிரிதனில் வேல்விட்டு இருதொளை யாகத் தொடுகுமரா
    கிரெளஞ்ச மலைமீது வேலைச் செலுத்தி, அது பெருந் தொளைபட்டு அழியும்படிச் செய்த குமரனே,
  • முத்தமிழோனே
    இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகள் உள்ள தமிழுக்குப் பெருமானே,
  • கிளரொளி நாதர்க்கு ஒருமகனாகி
    பெரும் ஜோதி ஸ்வரூபனான சிவபிரானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி,
  • திருவளர் சேலத்து அமர்வோனே
    லக்ஷ்மிகரம் பொருந்திய சேலம் என்ற பதியில் வீற்றிருப்பவனே,
  • பொருகிரி சூரக் கிளையது மாள
    போருக்கு எழுந்த ஏழு கிரிகளும், சூரனும், அவன் சுற்றத்தாரும் இறக்க,
  • தனிமயி லேறித் திரிவோனே
    ஒப்பற்ற மயில் வாகனத்தில் ஏறி உலகை வலம் வந்தவனே,
  • புகர்முக வேழக் கணபதி யாருக்கு
    புள்ளியை உடைய யானையின் முகத்தவரான கணபதிப் பெருமானுக்கு
  • இளைய விநோதப் பெருமாளே.
    இளையவனாகிய அற்புதப் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது. கடல், சந்திரன், தென்றல், குயில், புல்லாங்குழல், மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு முதலியவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
  • This song has been written in the NAyaka-NAyaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan. The sea, the moon, Love God, the flowery arrows, the scandal-mongering women, the cuckoo bird, the flute and the breeze are some of the sources which aggravate the agony of separation from the Lord.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout