திருப்புகழ் · 935சங்குவார் முடி (ராஜபுரம்)sangkuvArmudi
தந்த தானன தத்தன, தந்த தானன தத்தன
தந்த தானன தத்தன ...... தனதான
தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh
சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
தண்டு மாகரி பெற்றவன் ...... வெகுகோடிச்
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி
சண்ட மாருத மற்றுள ...... கவிராஜப்
பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர
பந்த போதமு ரைத்திடு ...... புலவோன்யான்
பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில
பஞ்ச பாதக ரைப்புகழ் ...... செயலாமோ
வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ
ருண்டு மூலமெ னக்கரு ...... டனிலேறி
விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி
தம்ப ராவஅ டுப்பவன் ...... மருகோனே
கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு
கொங்கின் வீரக ணப்ரிய ...... குமராபொற்
கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி
கொங்கு ராஜபு ரத்துறை ...... பெருமாளே.
பத உரைword meanings
- சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை
சங்கு வாத்தியம் என்ன, நீண்ட கிரீடம், பொன்னாலாகிய கழல் என்ன, மேலெழுந்து விளங்கும் சாமரங்கள் என்ன, விருதுக் கொடி என்ன, - தண்டு மா கரி பெற்றவன்
பல்லக்கு என்ன, குதிரை, யானை என்ன - இவைகளை எல்லாம் உடையவன், - வெகு கோடிச் சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதி சதுர்க்
கவி
பல கோடிக் கணக்கான அழகிய வார்த்தைகளைக் கற்றவன், மந்திர வாதத்தில் வல்லவன், நான்கு வகைக் கவிகளிலும்* 1 வல்லவன், - சண்ட மாருதம் மற்றுள கவி ராஜப் பங்கி பால சரச்வதி
கொடுங் காற்றைப் போல பேச வல்லவன், மற்றும் பல பேர்கள் உள்ள கவிராஜன் என்ற பட்டத்தை உடையவன், பால சரஸ்வதி என்னும் விருதைப் பெற்றவன், - சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன்
யான்
சங்க நூல்களில் சொல்லப்பட்ட பிரபந்த அறிவு நூல்களை எடுத்து ஓத வல்ல புலவன் நான். - பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் எனச் சில பஞ்ச
பாதகரைப் புகழ் செயலாமோ
பழைய இருபத்தொரு வள்ளல்களுக்கு ஒப்பானவன் எதிரே உள்ள நீயும் என்றெல்லாம் கூறி ஐம்பெரும் பாதகங்களைச்* 2 செய்பவர்களான சிலரை அங்ஙனம் புகழ்கின்ற செயல் ஆகுமோ? - வெம் கை யானை வனத்து இடை துங்க மா முதலைக்கு
வெருண்டு
விரும்பத் தக்க துதிக்கையை உடைய கஜேந்திரன் என்ற யானை காட்டிடையே ஒரு பொய்கையில் வலிய முதலைக்கு மருட்சி உற்று, - மூலமெனக் கருடனில் ஏறி விண் பராவ அடுக்கிய மண்
பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே
ஆதி மூலமே என்று கூச்சலிட்ட போது, கருடன் மேல் ஏறி, விண்ணுலகம் போற்றவும், அடுக்காயுள்ள பதினாலு உலகங்கள் போற்றவும், அந்த யானைக்கு வேண்டிய நன்மைகளைப் பெருகும்படி அடுத்து உதவும் திருமாலின் மருகனே, - கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின்
வீர கண ப்ரிய குமரா
கொங்கண முனிவர் முதலியோரால் (பொன்) தரப்பட்ட* 3 கொங்கு நாட்டில் சுகமாக இருக்கின்ற, மணம் வீசும் மாலைகள் அணிந்த, வீரனே, பதினெண் கணங்களும் விரும்புவனே, குமரனே, - பொன் கொங்கு உலாவு குறக் கொடி கொங்கையே தழுவி
கொங்கு நறு மணம் வீசும் குறப்பெண்ணாகிய வள்ளியின் அழகிய மார்பகங்களை அணைந்தவனே, - செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே.
செழிப்பான கொங்கு மண்டலத்தில் உள்ள ராசிபுரத்தில்* 4 வீற்றிருக்கும் பெருமாளே.
குறிப்புகள் · notes
- (*1) தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்: ஆசு - எதுகை மோனையுடன் கூடியது, மதுரம் - இனிமை வாய்ந்தது, சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது, வித்தாரம் - வர்ணனை மிக்கது.
- (*2) ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை.
- (*3) கொங்கு நாட்டில் இருந்த கொங்கணச் சித்தர் தாமிரம் முதலிய உலோகங்களைப் பொன் செய்து விரும்பினோர்க்குக் கொடுத்தார். எனவே இங்ஙனம் கூறப்பட்டுள்ளது.
- (*4) 'ராஜபுரம்' இப்போது 'ராசிபுரம்' என வழங்கப்படுகிறது. இது சேலம் ரயில் நிலையத்திலிருந்து 20 மைலில் உள்ளது.
- (*1) The four varieties of Tamil poetry are: Asu (alliteration) Mathuram (sweetness) Chiththiram (artful presentation) and ViththAram (description).
- (*2) Five heinous sins (crimes) are: murder, stealing, lying, drunkenness and abuse of the teacher.
- (*3) One KongaNa Chiththar, a sage of KongunAdu, used the method of alchemy and converted lower metals like copper into gold and gave it away to people who sought gold. That is why reference is made to that sage here.
- (*4) Rajapuram is now known as Rasipuram, located 20 miles from SAlem Railway Station.
