திருப்புகழ் · 933காந்தட் கரவளை (திருப்பாண்டிக்கொடுமுடி)kAndhatkaravaLai
தாந்தத் தனதன தாந்தத் தனதன
தாந்தத் தனதன ...... தனதான
தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh
காந்தட் கரவளை சேந்துற் றிடமத
காண்டத் தரிவைய ...... ருடனூசி
காந்தத் துறவென வீழ்ந்தப் படிகுறி
காண்டற் கநுபவ ...... விதமேவிச்
சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில்
சாய்ந்திட் டயில்விழி ...... குழைமீதே
தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி
தாங்கித் தழுவுத ...... லொழியேனோ
மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர்
வாஞ்சைப் படியருள் ...... வயலூரா
வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை
மான்சிற் றடிதொழு ...... மதிகாமி
பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய
பாண்டிக் கொடுமுடி ...... யுடையாரும்
பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு
பாண்சொற் பரவிய ...... பெருமாளே.
பத உரைword meanings
- காந்தள் கர வளை சேந்து உற்றிட மத காண்டத்து
அரிவையருடன் ஊசி காந்தத்து உறவு என வீழ்ந்து
காந்தள் மலரைப் போன்ற, வளையல் அணிந்துள்ள, கைகள் சிவக்க, மன்மதனுடைய வில்லுக்குத் தோதாகும் மாதர்களுடன் ஊசிக்கும் காந்தத்துக்கும் உள்ள உறவைப் போல, அக் காம மயக்கத்தில் விழுந்து, - அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவிச் சாந்தைத்
தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு
அவ்வாறே பெண்குறியைக் காண்பதற்கு அனுபவ வழிகளை நாடிப் பொருந்தி, நறுஞ்சாந்து தடவப்பட்ட கரிய மேகம் போன்ற கூந்தலின் மேல் சாய்ந்து படுத்து, - அயில் விழி குழை மீதே தாண்டிப் பொர உடை தீண்டித் தன
கிரி தாங்கித் தழுவுதல் ஒழியேனோ
வேல் போன்ற கண்கள் (காதில் உள்ள) குண்டலங்களின் மேல் தாவிச் சென்று தாக்கும்படியாக, ஆடையைத் தொட்டு மார்பகங்களாகிய மலையைப் பிடித்துத் தழுவும் செயலை ஒழிக்க மாட்டேனோ? - மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப் படி
அருள் வயலூரா
மனிதர்களுக்கும் தேவ அரசனாகிய இந்திரனுக்கும் அவரவர்களுடைய விருப்பப்படி அருள் பாலிக்கும் வயலூரனே, - வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி
தொழும் அதிகாமி
ஆகாயத்தைக் கிட்டிய பெரிய மூங்கில் காடு உள்ள (வள்ளிமலைத்) தினைப்புனத்தின் மீது இருந்த மான் போன்ற வள்ளியின் சிறிய பாதங்களைத் தொழுத காதல் மிக்கவனே, - பாந்தள் சடை முடி ஏந்திக் குலவிய பாண்டிக் கொடுமுடி
உடையாரும் பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண்
சொல் பரவிய பெருமாளே.
பாம்பை தனது சடா முடியில் தாங்கி விளங்குபவரும் பாண்டிக் கொடுமுடி* என்னும் தலத்தை உடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு, உரிய முறையில் மேலான குருவான சங்கற்பத்தோடு பண் போன்ற சொற்களைக் கொண்டு (பிரணவ மந்திரத்தை) உபதேசித்தளித்த பெருமாளே.
குறிப்புகள் · notes
- * கொடுமுடி ஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.
- * Kodumudi is 23 miles Southeast of EerOde (Erode) towards KarUr.
