திருப்புகழ் · 932இருவினைப் பிறவி (திருப்பாண்டிக்கொடுமுடி)iruvinaippiRavi
தனதனத் தனனத் ...... தனதான
Raja Madasamy
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
அரியயற் கறிதற் ...... கரியானே
அடியவர்க் கெளியற் ...... புதநேயா
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
பத உரைword meanings
- இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி
நல்வினை, தீவினை இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி, - இடர்கள்பட்டு அலையப் புகுதாதே
துயரங்கள் ஏற்பட்டு அலைந்து திரியப் புகாமல், - திருவருட் கருணைப் ப்ரபையாலே
உனது திருவருளாம் கருணையென்னும் ஒளியாலே - திரமெனக் கதியைப் பெறுவேனோ
உறுதியான வகையில் நான் நற்கதியைப் பெறமாட்டேனோ? - அரியயற்கு அறிதற்கு அரியானே
திருமாலும் பிரம்மாவும் அறிவதற்கு அரியவனே, - அடியவர்க்கு எளிய அற்புதநேயா
உன் அடியவர்க்கு எளிதாகக் கிட்டும் அற்புதமான நண்பனே, - குருவெனச் சிவனுக்கு அருள்போதா
குருமூர்த்தியாக சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே, - கொடுமுடிக் குமரப் பெருமாளே.
கொடுமுடித் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.
குறிப்புகள் · notes
- * கொடுமுடி ஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.
- * Kodumudi is 23 miles Southeast of EerOde (Erode) towards KarUr.
