திருப்புகழ் · 925தசையாகிய (கருவூர்)thasaiyAgiya
தனனா தனனத் தனனா தனனத்
தனனா தனனத் ...... தனதான
Thiruppugazh Anbargal
தசையா கியகற் றையினால் முடியத்
தலைகா லளவொப் ...... பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
றவிரா வுடலத் ...... தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
படுபூ ரணநிட் ...... களமான
பதிபா வனையுற் றநுபூ தியிலப்
படியே யடைவித் ...... தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
கருணோ தயமுத் ...... தமிழோனே
அகிலா கமவித் தகனே துகளற்
றவர்வாழ் வயலித் ...... திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
கமலா லயன்மைத் ...... துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
கருவூ ரழகப் ...... பெருமாளே.
பத உரைword meanings
- தசையாகிய கற்றையினால் முடிய
சதையின் திரளால் முழுமையும் - தலைகால் அளவு ஒப்பனையாயே
தலை முதல் கால் வரை அலங்காரமாகவே அமையப்பெற்று, - தடுமாறுதல் சற்று ஒருநாள்
சஞ்சலம் என்பது கொஞ்சமேனும் ஒருநாள் கூட - உலகில் தவிரா உடலத்தினை நாயேன்
இந்த உலகைவிட்டு நீங்காத (எப்போதும் தடுமாறும்) உடம்பை உடைய அடி நாயேன் - பசுபாசமும் விட்டு
அகங்காரத்தையும், பந்தங்களையும் விட்டு - அறிவால் அறிய
ஞானத்தால் அறியப் பெறுகின்ற - படுபூ ரண நிட்களமான
பூரணமானதும், உருவம் இல்லாததும் ஆகிய - பதிபாவனை உற்று
பரம்பொருளாம் கடவுள் தியானத்தை மேற்கொண்டு, - அநுபூ தியில் அப்படியே அடைவித்து அருள்வாயே
அந்த அனுபவ ஞானத்தில் என் சிந்தனை மாறாத வண்ணம் அப்படியே சேர்ப்பித்து அருள் புரிவாயாக. - அசலேசுரர் புத்திரனே
அசைவே இல்லாத கயிலைமலைக் கடவுள் சிவனார் (அசலேசுரர்*) பெற்ற புத்திரனே, - குணதிக்கு அருணோதய
கிழக்குத் திசையில் தோன்றுகின்ற உதயசூரியனின் செம்மை ஒளி உடையவனே, - முத்தமிழோனே
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் கடவுளே, - அகில ஆகம வித்தகனே
சகல வேதாகமங்களிலும் வல்லவனே, - துகளற்றவர்வாழ் வயலித்திருநாடா
குற்றமற்றவர்கள் வாழும் வயலூர் என்ற திருத்தலத்தில் வாழ்வோனே, - கசிவார் இதயத்து அமிர்தே
உள்ளம் கசிபவர்களது மனத்தில் ஊறுகின்ற அமிர்தமே, - மதுபக் கமலா லயன்மைத்துனவேளே
வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரை ஆசனமாக உடைய பிரமனின் மைத்துனன்** முறையில் உள்ள கந்த வேளே, - கருணாகர சற்குருவே
கருணை நிறைந்தவனே, சற்குரு மூர்த்தியே, - குடகிற் கருவூர் அழகப் பெருமாளே.
மேற்குத் திசையில் உள்ள கருவூரில்*** வீற்றிருக்கும் அழகுப் பெருமாளே.
குறிப்புகள் · notes
- * திருவாரூரில் உள்ள சிவன் கோயிலின் மூலவருக்கு அசலேசுரர் என்று பெயர் - திருவாரூர்ப் புராணம்.
- ** பிரமன் திருமாலின் மகன். முருகன் திருமாலின் மருமகன். எனவே பிரமனுக்கு முருகன் மைத்துனன்.
- *** கருவூர் திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ள கரூர் ஆகும். சோழநாட்டின் தலைநகரான வஞ்சியும் இதுவே.
- * The main deity, SivA, in ThiruvArUr, is called AsalEsurar according to ThiruvArUr PurANam.
- ** BrahmA is the Son of Vishnu who is the maternal uncle of Murugan. So Murugan is the first cousin of BrahmA.
- *** KaruvUr - now known as KarUr - is 45 miles west of Thiruchi. It was once the capital city of ChOzha Kingdom.
