திருப்புகழ் · 926நித்தப் பிணிகொடு (கருவூர்)niththappiNikodu
தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன ...... தனதான
தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh
நித்தப் பிணிகொடு மேவிய காயமி
தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
நிற்பொற் ககனமொ டாமிவை பூதக ...... லவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரி
டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு ...... மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி ...... லுழல்வேனை
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற ...... இனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானன
தித்தித் திமிதிமி தீதக தோதக
டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... வெனபேரிச்
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை ...... யெறிவோனே
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா
வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி
சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள
வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய ...... பெருமாளே.
பத உரைword meanings
- நித்த(ம்) பிணி கொடு மேவிய காயம் இது
நாள்தோறும் நோய்களுடன் கூடியது இவ்வுடலாகும். - அப்புப் பிருதிவி வாயுவு(ம்) தேயுவு(ம்) நில் பொன் ககனம்
ஒடு ஆம் இவை பூத கலவை மேவி நிற்கப்படும்
இது நீர், மண், காற்றுடன், நெருப்பும், உள்ளதான பொலிவுள்ள ஆகாயம் எனப்படும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாகித் தோன்றி நிற்பதாகும். - உலகு ஆளவும் மாகர் இடத்தைக் கொளவுமே நாடிடும்
ஓடிடு(ம்)
உலகத்தை எல்லாம் ஆளவேண்டும், விண்ணவர் இருக்கும் இடத்தையும் கொள்ளவேண்டும் என்று ஆசை கொண்டு அதற்காக எங்கும் ஓடி அலையும். - நெட்டுப் பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை
எத்தித் திரியும்
செருக்குடன் அணி கலன்களையும் ஆடைகளையும் அணிந்து நான் என்கின்ற முட்டாள்தனமான அகங்காரத்துடன் ஏமாற்றித் திரியும். - இது ஏது பொ(ய்)யாது என உற்றுத் தெளிவு உணராது மெய்
ஞானமொடு இச்சைப் பட அறியாது பொய் மாயையில்
உழல்வேனை
இது என்ன ஒருபோதும் பொய்யாகாமல் நிலைத்திருக்கும் என்று திடமாக நினைத்து, தெளிவான உண்மையை உணராமல் மெய்ஞ்ஞானத்தை விரும்ப அறியாமல் பொய்யான உலக மாயைகளில் அலைச்சல் உறுகின்ற என்னை, - எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனது
அருளால் உயர் ஞான அமுது இட்டுத் திருவடியாம் உயர்
வாழ்வு உற இனிது ஆள்வாய்
தந்திரமாகவாவது ஆட்கொண்டு, உன் அடியார்களுடன் என்னைக் கொண்டு சேர்ப்பித்து, உன் திருவருளால் சிறந்த ஞான அமுதத்தைத் தந்து திருவடியாகிய சிறந்த வாழ்வை நான் அடையும்படி இனிதே ஆண்டருள்வாயாக. - தத்தத் தனதன தானன தானன
தித்தித் திமிதிமி தீதக தோதக
டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... என பேரி
சத்தத்து ஒலி திகை தாவிட
(இத் தாளத்தில்) ஒலிக்கும் பேரிகையின் பேரொலி திசைகளைக் கடந்து தாவிச் செல்ல, - வானவர் திக்குக் கெட வரு(ம்) சூரர்கள் தூள்பட சர்ப்பச் சத
முடி நாணிட வேல் அதை எறிவோனே
தேவர்கள் வாழும் திசைகள் கலங்கிக் கெட, வந்த அசுரர்கள் தூளாகிப் பொடிபட, (ஆதிசேஷனாகிய) பாம்பின் நூறு பணா முடிகள் அச்சம் கொள்ள, உனது வேலைச் செலுத்தியவனே, - வெற்றிப் பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம்
அருள் தாதகி வேணியர் வெற்புப் புரம் அது நீறு எழ காணியர்
அருள் பாலா
வெற்றியைத் தரும் திருநீற்றை அணிந்த திருமேனியர், ஆயர்பாடியாகிய கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணனாகிய திருமாலுக்கு தமது இடது பாகத்தைத் தந்தருளியவர் (சங்கர நாராயணர்), ஆத்தி மாலைச் சடையை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே, - வெற்புத் தட முலையாள் வ(ள்)ளி நாயகி சித்தத்து அமர்
குமரா
மலை போன்ற பெரிய மார்பகங்களை உடைய வள்ளி நாயகியின் உள்ளத்தில் வீற்றிருக்கும் குமரனே, - எமை ஆள் கொள வெற்றிப் புகழ் கருவூர் தனில் மேவிய
பெருமாளே.
எம்மைப் போன்ற அடியார்களை ஆட்கொள்வதற்காக, வெற்றிப் புகழ் விளங்கும் கருவூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.
குறிப்புகள் · notes
- * கருவூர் திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ள கரூர் ஆகும். சோழநாட்டின் தலைநகரான வஞ்சியும் இதுவே.
- * KaruvUr - now known as KarUr - is 45 miles west of Thiruchi. It was once the capital city of ChOzha Kingdom.
