திருப்புகழ் 904 என்னால் பிறக்கவும் (வயலூர்)

தன்னா தனத்தன தன்னா தனத்தன
தன்னா தனத்தன ...... தந்ததான
என்னால்  பிறக்கவும்  என்னா  லிறக்கவும் 
என்னால்  துதிக்கவும்  ......  கண்களாலே 
என்னா  லழைக்கவும்  என்னால்  நடக்கவும் 
என்னா  லிருக்கவும்  ......  பெண்டிர்வீடு 
என்னால்  சுகிக்கவும்  என்னால்  முசிக்கவும் 
என்னால்  சலிக்கவும்  ......  தொந்தநோயை 
என்னா  லெரிக்கவும்  என்னால்  நினைக்கவும் 
என்னால்  தரிக்கவும்  ......  இங்குநானார் 
கன்னா  ருரித்தஎன்  மன்னா  எனக்குநல் 
கர்ணா  மிர்தப்பதம்  ......  தந்தகோவே 
கல்லார்  மனத்துட  னில்லா  மனத்தவ 
கண்ணா  டியிற்றடம்  ......  கண்டவேலா 
மன்னான  தக்கனை  முன்னாள்மு  டித்தலை 
வன்வாளி  யிற்கொளும்  ......  தங்கரூபன் 
மன்னா  குறத்தியின்  மன்னா  வயற்பதி 
மன்னா  முவர்க்கொரு  ......  தம்பிரானே. 
  • என்னால் பிறக்கவும்
    என் செயலால் நான் இவ்வுலகில் பிறப்பதற்கும்,
  • என்னால் இறக்கவும்
    என் திறத்தால் நான் இறப்பதற்கும்,
  • என்னால் துதிக்கவும்
    என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும்,
  • கண்களாலே என்னால் அழைக்கவும்
    என் கண்கொண்டு மற்றவரை நான் அழைப்பதற்கும்,
  • என்னால் நடக்கவும்
    என் செயலால் என் கால்கொண்டு நான் நடப்பதற்கும்,
  • என்னால் இருக்கவும்
    என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் இருப்பதற்கும்,
  • பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும்
    மாதர், வீடு இவற்றை நான் இன்புற்று சுகிப்பதற்கும்,
  • என்னால் முசிக்கவும்
    வேண்டுதல் வேண்டாமை காரணமாக நான் நலிவுற்று மெலிவதற்கும்,
  • என்னால் சலிக்கவும்
    இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும்,
  • தொந்தநோயை என்னால் எரிக்கவும்
    வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும்,
  • என்னால் நினைக்கவும்
    பல நினைவுகளையும் நான் இங்கு நினைப்பதற்கும்,
  • என்னால் தரிக்கவும்
    இன்ப துன்பங்களை நான் தாங்கிக் கொள்வதற்கும்,
  • இங்கு நான் ஆர்
    இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம் உண்டு?)
  • கன்னார் உரித்த என் மன்னா
    என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போலக் கசியச் செய்த அரசே,
  • எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே
    செவிக்கு நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே,
  • கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ
    உன்னைக் கற்றறியார் மனத்தில் தங்காத மனத்தோனே,
  • கண்ணாடியில் தடம் கண்டவேலா
    கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே*,
  • மன்னான தக்கனை முன்னாள்
    அரசனாக விளங்கிய தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள்
  • முடித்தலை வன்வாளியிற் கொளும்
    அவனது கிரீடம் அணிந்த தலையை கொடிய அம்பால் கொய்த
  • தங்கரூபன் மன்னா
    பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு குருராஜனே,
  • குறத்தியின் மன்னா
    குறத்தி வள்ளியின் தலைவனே,
  • வயற்பதி மன்னா
    வயலூரின்** அரசனே,
  • முவர்க்கொரு தம்பிரானே.
    பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com