திருப்புகழ் 903 இலகு முலைவிலை (வயலூர்)

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
இலகு  முலைவிலை  யசடிகள்  கசடிகள் 
கலைகள்  பலவறி  தெருளிகள்  மருளிகள் 
எயிறு  கடிபடு  முதடிகள்  பதடிகள்  ......  எவரோடும் 
இனிய  நயமொழி  பழகிக  ளழகிகள் 
மடையர்  பொருள்பெற  மருவிகள்  சருவிகள் 
யமனு  மிகையென  வழிதரு  முழிதரும்  ......  விழிவாளால் 
உலக  மிடர்செயு  நடலிகள்  மடலிகள் 
சிலுகு  சிலரொடு  புகலிக  ளிகலிகள் 
உறவு  சொலவல  துரகிகள்  விரகிகள்  ......  பிறைபோலே 
உகிர்கை  குறியிடு  கமுகிகள்  சமுகிகள் 
பகடி  யிடவல  கபடிகள்  முகடிகள் 
உணர்வு  கெடும்வகை  பருவிக  ளுருவிக  ......  ளுறவாமோ 
அலகை  புடைபட  வருவன  பொருவன 
கலக  கணநிரை  நகுவன  தகுவன 
அசுரர்  தசைவழி  நிமிர்வன  திமிர்வன  ......  பொடியாடி 
அலரி  குடதிசை  யடைவன  குடைவன 
தரும  வநிதையு  மகிழ்வன  புகழ்வன 
அகில  புவனமு  மரகர  கரவென  ......  அமர்வேள்வி 
திலக  நுதலுமை  பணிவரு  செயமகள் 
கலையி  னடமிட  வெரிவிரி  முடியினர் 
திரள்ப  லுயிருடல்  குவடுக  ளெனநட  ......  மயிலேறிச் 
சிறிது  பொழுதினி  லயில்விடு  குருபர 
அறிவு  நெறியுள  அறுமுக  இறையவ 
த்ரிசிர  கிரியயல்  வயலியி  லினிதுறை  ......  பெருமாளே. 
  • இலகு முலை விலை அசடிகள் கசடிகள்
    விளங்கும் மார்பகத்தை விலைக்கு விற்கின்ற முட்டாள்கள், குற்றம் உள்ளவர்கள்.
  • கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள்
    காமக் கலைகள் பலவற்றையும் அறிந்துள்ள தெளிவை உடையவர்கள், மயக்குபவர்கள்.
  • எயிறு கடி படும் உதடிகள் பதடிகள் எவரோடும் இனிய நய மொழி பழகிகள் அழகிகள்
    பற் குறிகளைக் கொண்ட உதட்டை உடையவர்கள். அற்பர்கள். யாரோடும் இனிமையான நயமான பேச்சுக்களைப் பேசப் பழகியவர்கள்.
  • மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள்
    முட்டாள்களுடைய பொருளைப் பெறுதற்கு அவர்களுடன் சேருபவர்கள். கொஞ்சிக் குலாவுபவர்கள்.
  • யமனும் மிகை என அழி தரும் முழி தரும் விழி வாளால் உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள்
    யமனை மிஞ்சும்படியான அழித்தல் தொழிலைச் செய்வதும், அங்கும் இங்கும் சுழலுகின்றதுமான கண் என்னும் வாள் கொண்டு உலகத்துக்கே துன்பம் செய்கின்ற செருக்கு உள்ளவர்கள். (ஆண்களை) மடல்* ஏறும்படிச் செய்பவர்கள்.
  • சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள்
    சண்டைப் பேச்சு சிலரோடு பேசுபவர்கள். பகைமை பூண்டவர்கள்.
  • உறவு சொல வல துரகிகள் விரகிகள் பிறை போலே உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள்
    உறவு முறையைக் கூறி அழைக்கவல்ல துரோகிகள். சாமர்த்தியசாலிகள். பிறையைப் போல் கைந் நகத்தால் (வந்தவர் உடலில்) அடையாளக் குறியை இடுபவர்கள். ரகசிய அழுத்தம் உடையவர்கள். சமூகத்துக்கு விருப்புடன் பேட்டி அளிப்பவர்கள்.
  • பகடி இட வல கபடிகள் முகடிகள் உணர்வு கெடும் வகை பருவிகள் உருவிகள் உறவாமோ
    வெளி வேஷம் போடவல்ல வஞ்ச நெஞ்சினர். மூதேவிகள். நல்ல அறிவு கெட்டுப் போகும்படி அரிப்பவர்கள். கையில் பொருள் உருவும்படி சரசமாகப் பேசுபவர்கள் ஆகிய விலைமாதர்களின் தொடர்பு நல்லதா?
  • அலகை புடைபட வருவன பொருவன கலக கண(ம்) நிரை நகுவன தகுவன
    பேய்கள் (போர்க்களத்தின்) பக்கங்களில் சேரும்படி வரவும், சில சண்டை செய்யவும், கலகம் செய்யும் பேய்களின் கூட்டம் சிரிக்கவும், சில மேம்பட்டு விளங்கவும்,
  • அசுரர் தசை வழி நிமிர்வன திமிர்வன பொடியாடி அலரி குட திசை அடைவன குடைவன
    அசுரர்களின் மாமிசக் குவியல் கிடைத்த போது அதைத் தின்று நிமிரவும், விறைப்பு விடவும், போர்ப் புழுதியில் குளித்து சூரியன் மேற்குத் திசையில் சேர்ந்து மூழ்கிப் போகவும்,
  • தரும வநிதையு(ம்) மகிழ்வன புகழ்வன அகில புவனமும் அரகர கர என
    தரும தேவதையும் மகிழ்ச்சி உற்று உனது புகழை எடுத்துக் கூறவும், எல்லா உலகங்களும் ஹரஹர ஹர என்று துதித்துப் போற்றவும்,
  • அமர் வேள்வி திலக நுதல் உமை பணி வரு செய மகள் கலையின் நடமிட
    போர்க்களச் சாலையில் பொட்டணிந்த நெற்றியைக் கொண்ட உமா தேவிக்கு பணி செய்யும் துர்க்கை சாஸ்திரப்படி நடனம் செய்ய,
  • எரி விரி முடியினர் திரள் பல் உயிர் உடல் குவடுகள் என நட மயிலேறி சிறிது பொழுதினில் அயில் விடு குருபர
    நெருப்புப் போலச் சிவந்ததும், விரித்துள்ளதுமான தலைமயிர் முடியை உடைய அசுரர்களின் கூட்டம் பலவற்றின் உயிர் வாசம் செய்த உடல்கள் மலை போல் குவிய, நடனம் செய்யும் மயில் மீது ஏறி, கொஞ்ச நேரத்தில் வேலைச் செலுத்திய குருபரனே,
  • அறிவு நெறி உள அறுமுக இறையவ த்ரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை பெருமாளே.
    ஞான மார்க்கத்தைக் கொண்டுள்ள ஆறு திருமுகங்களை உடைய இறைவனே, திரிசிராப்பள்ளிக்கு அருகில் உள்ள வயலூரில்** இன்பமுடன் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com