தனனாத் தனதன தனனாத் தனதன
தனனாத் தனதன ...... தனதான
கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்
கனிபோற் றுகிரிதழ் ...... எழிலாகும்
கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை
கடிபோற் பணியரை ...... யெனவாகும்
உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ
ளுடையாற் கெறுவித ...... நடையாலும்
ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும்
ஒழியாத் துயரது ...... தவிரேனோ
குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி
கொளிவாய்ப் பலஅல ...... கைகள்பேய்கள்
கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்
குடியேற் றியகுக ...... வுயர்தாழை
மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி
வயலூர்ப் பதிதனி ...... லுறைவோனே
மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை
மகள்மேற் ப்ரியமுள ...... பெருமாளே.
- கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல்
கடல் போல ஆழமாகவும், அம்பு போல கூர்மையாகவும் உள்ள கண்கள், வில்லைப் போலவும் பிறைச் சந்திரன் போலவும் வளைந்த நெற்றி, - கனி போல் துகிர் இதழ் எழிலாகும் கரி போல் கிரி முலை
கொவ்வைப் பழம் போலவும், பவளம் போலவும் உள்ள வாயிதழ், அழகு பொருந்திய யானையைப் போலவும், மலையைப் போலவும் உள்ள மார்பகங்கள், - கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும்
கொடி போலவும் உடுக்கை போலவும் உள்ள இடுப்பு, காவலிடம் போலவும் பாம்பின் படம் போலவும் உள்ள பெண்குறி என்று உவமானம் சொல்லத்தக்க - உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம் இவள் உடையால்
கெறுவித நடையாலும் ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்
படும் ஒழியாத் துயர் அது தவிரேனோ
தேகத்தைக் காட்டும் இன்ப நிலைக்கு எடுத்துக் காட்டான கொள்கலம் இவள் (என மயங்கி), அவளது ஆடையாலும் செருக்குள்ள நடை அழகினாலும் (இவளை விட்டு) ஒரு நாள் கூட பிரிந்திருப்பது முடியாத காரியம் என்று சுழற்சியுறும் நீங்காத துன்பத்தைத் தொலைக்க மாட்டேனோ? - குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி கொளிவாய்ப்
பல அலகைகள் பேய்கள் கொலை போர்க் களம் மிசை தினம்
ஏற்று
அசுரர்களின் உடலினின்றும் குடலை இழுத்து காக்கை, நரி, கொள்ளி வாய்ப் பிசாசுகள், பேய்கள் யாவும், நிறைந்த கொல்லுதலை உடைய போர்க் களத்தில் நாள்தோறும் (குடலை) அடைந்து உண்ண, - அமரர்கள் குடி ஏற்றிய குக உயர் தாழை மடல் கீற்றினில் எழு
விரைபூப்பொழில் செறி வயலூர்ப் பதி தனில் உறைவோனே
தேவர்களை விண்ணுலகில் குடி ஏற்றிய குகனே, உயர்ந்த தாழையின் மடல் கீற்றினில் உண்டாகின்ற வாசனை மிக்க (தாழம்) பூக்கள் உள்ள சோலைகள் நிறைந்த வயலூரில்* வாழ்பவனே, - மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை மகள் மேல்
ப்ரியம் உ(ள்)ள பெருமாளே.
வள்ளிமலையில் வாழும் கொடிய வேடர்களுடைய மகள் வள்ளியின் மேல் விருப்பம் மிகக் கொண்டுள்ள பெருமாளே.