திருப்புகழ் 89 மான்போல் கண் (திருச்செந்தூர்)

தாந்தாத்தந் தான தந்தன
தாந்தாத்தந் தான தந்தன
தாந்தாத்தந் தான தந்தன ...... தனதான
மான்போற்கண்  பார்வை  பெற்றிடு 
மூஞ்சாற்பண்  பாடு  மக்களை 
வாய்ந்தாற்பொன்  கோடு  செப்பெனு  ......  முலைமாதர் 
வாங்காத்திண்  டாடு  சித்திர 
நீங்காச்சங்  கேத  முக்கிய 
வாஞ்சாற்செஞ்  சாறு  மெய்த்திடு  ......  மொழியாலே 
ஏன்காற்பங்  காக  நற்புறு 
பூங்காற்கொங்  காரு  மெத்தையில் 
ஏய்ந்தாற்பொன்  சாரு  பொற்பண  ......  முதல்நீதா 
ஈந்தாற்கன்  றோர  மிப்பென 
ஆன்பாற்றென்  போல  செப்பிடும் 
ஈண்டாச்சம்  போக  மட்டிக  ......  ளுறவாமோ 
கான்பாற்சந்  தாடு  பொற்கிரி 
தூம்பாற்பைந்  தோளி  கட்கடை 
காண்பாற்றுஞ்  சாமல்  நத்திடும்  ......  அசுரேசன் 
காம்பேய்ப்பந்  தாட  விக்ரம 
வான்றோய்க்கெம்  பீர  விற்கணை 
காண்டேர்க்கொண்  டேவு  மச்சுதன்  ......  மருகோனே 
தீம்பாற்கும்  பாகு  சர்க்கரை 
காம்பாற்செந்  தேற  லொத்துரை 
தீர்ந்தார்க்கங்  காளி  பெற்றருள்  ......  புதல்வோனே 
தீண்பார்க்குன்  போத  முற்றுற 
மாண்டார்க்கொண்  டோது  முக்கிய 
தேன்போற்செந்  தூரில்  மொய்த்தருள்  ......  பெருமாளே. 
  • மான் போல் கண் பார்வை பெற்றிடு மூஞ்சால் பண்பாடு மக்களை வாய்ந்தால் பொன் கோடு செப்பு எனும் முலை மாதர்
    மானைப் போல கண் பார்வை பெற்றுள்ள முகத்தால், தரம் வாய்ந்த ஆடவர்கள் கிடைக்கப் பெற்றால், பொன் மலை (பொன்) சிமிழ் என்னும்படியான மார்பகங்களை உடைய (விலை) மாதர்கள்
  • வாங்காத் திண்டாடு சித்திர(ம்) நீங்காச் சங்கேத முக்கிய வாஞ்சா(சையா)ல் செம் சாரு மெய்த்திடு(ம்) மொழியாலே
    (அம் மக்களை வசீகரித்துப்) பிடித்து திண்டாட வைப்பதும், விசித்திரம் நீங்காததும், உள்நோக்கம் கொண்டுள்ளதும், முக்கியமானதும், ஆசை எழுப்புவதுமான, இனிமையான ரசம் நிரம்பிய, உண்மை போன்றதான பேச்சுக்களால்,
  • ஏ(எ)ன் கால் பங்கு ஆக நற்பு உறு பூங் கால் கொங்கு ஆரு(ம்) மெத்தையில் ஏய்ந்தால் பொன் சாரு பொன் பணம் முதல் நீ தா ஈந்தாற்கு அன்றோ ரமிப்பு என
    என்னிடத்தில் பங்கு ஆக, நன்மை (இன்பம்) தரும் பூவின் இதழ்களின் வாசனை நிறைந்த படுக்கையில் பொருந்தியவுடன் பொன்னாலாகிய அழகிய காசு முதலில் நீ கொடுப்பாயாக, அங்ஙனம் பணம் கொடுத்தவர்களுக்குத் தானே கூட்டுறவு என்று,
  • ஆன் பால் தெ(தே)ன் போல செப்பிடும் ஈண்டாச் சம்போக மட்டிகள் உறவாமோ
    பசும் பாலும் தேனும் கலந்தது போல் சொல்லி, அருகே நெருங்கவிடாத போக மகளிராகிய வேசிகளின் உறவு நல்லதாகுமோ?
  • கான் பால் சந்து ஆடு பொன் கிரி தூம்பால் பைம் தோளி கண் கடை காண்பால் துஞ்சாமல் நத்திடும் அசுர ஈசன்
    காட்டில் சந்தனம் பூசப்பட்ட அழகிய மலை போன்ற மார்பகங்களையும், மூங்கில் போன்ற பசும் தோள்களையும் உடைய சீதையின் கடைக் கண் பார்வை பெறுவதற்காக உறக்கம் இல்லாமல் ஆசை கொண்டிருந்த அரக்கர் தலைவனாகிய ராவணனின்
  • க(கா)ம் பேய்ப் பந்தாட விக்ரம வான் தோய்க் கெம்பீர வில் கணை காண் தேர்க் கொண்டு ஏவும் அச்சுதன் மருகோனே
    தலைகள் பந்து எறிவது போல எறியப்பட்டு உருள, வீரமுள்ளதாய், வானிலும் தோயவல்லதாய், வீறு அமைந்ததாய் உள்ள வில்லில் இருந்து அம்பை அழகிய தேர் மீது இருந்து செலுத்திய (ராமனாம்) திருமாலின் மருகனே,
  • தீம் பாற்கும் பாகு சர்க்கரை காம்பால் செம் தேறல் ஒத்து உரை தீந்தார்க் கங்காளி பெற்று அருள் புதல்வோனே
    இனிக்கக் காய்ச்சிய பாலையும், வெல்லப் பாகு, சர்க்கரை, மூங்கிலினின்று முற்றிய நறுந்தேன் இவைகளை ஒத்துள்ளவரும், உரைக்கு எட்டாதவருமான சிவபெருமானும் பார்வதியும் பெற்று அருளிய மகனே,
  • தீ(தி)ண் பார்க்கு உன் போதம் முற்று உற மாண்டார்க் கொண்டு ஓதும் முக்கிய
    திண்ணிய இப் பூமியில் உன் திருவடியின் தியான அறிவு முழுமையாக வாய்க்கப்பட்டு மேம்பட்டவர்களைக் கொண்டு பூஜிக்கப்படும் பிரமுகனே,
  • தேன் போல் செந்தூரில் மொய்த்து அருள் பெருமாளே.
    வண்டுகள் மலரில் மொய்ப்பது போல் திருச்செந்தூரில் (அடியார் கூட்டங்களை) நெருங்க வைத்தருளும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com