திருப்புகழ் 90 முகிலாமெனும் (திருச்செந்தூர்)

தனனாதன தனனந் தாத்த
தனனாதன தனனந் தாத்த
தனனாதன தனனந் தாத்த ...... தனதான
முகிலாமெனு  மளகங்  காட்டி 
மதிபோலுயர்  நுதலுங்  காட்டி 
முகிழாகிய  நகையுங்  காட்டி  ......  அமுதூறு 
மொழியாகிய  மதுரங்  காட்டி 
விழியாகிய  கணையுங்  காட்டி 
முகமாகிய  கமலங்  காட்டி  ......  மலைபோலே 
வகையாமிள  முலையுங்  காட்டி 
யிடையாகிய  கொடியுங்  காட்டி 
வளமானகை  வளையுங்  காட்டி  ......  யிதமான 
மணிசேர்கடி  தடமுங்  காட்டி 
மிகவேதொழி  லதிகங்  காட்டு 
மடமாதர்கள்  மயலின்  சேற்றி  ......  லுழல்வேனோ 
நகையால்மத  னுருவந்  தீத்த 
சிவனாரருள்  சுதனென்  றார்க்கு 
நலநேயரு  ளமர்செந்  தூர்க்கு  ......  ளுறைவோனே 
நவமாமணி  வடமும்  பூத்த 
தனமாதெனு  மிபமின்  சேர்க்கை 
நழுவாவகை  பிரியங்  காட்டு  ......  முருகோனே 
அகமேவிய  நிருதன்  போர்க்கு 
வரவேசமர்  புரியுந்  தோற்ற 
மறியாமலு  மபயங்  காட்டி  ......  முறைகூறி 
அயிராவத  முதுகின்  தோற்றி 
யடையாமென  இனிதன்  பேத்து 
மமரேசனை  முழுதுங்  காத்த  ......  பெருமாளே. 
  • முகில் ஆம் எனும் அளகம் காட்டி மதி போல் உயர் நுதலும் காட்டி முகிழாகிய நகையும் காட்டி அமுது ஊறு மொழி ஆகிய மதுரம் காட்டி
    மேகம் போன்ற கூந்தலைக் காட்டி, பிறை போலச் சிறந்த நெற்றியைக் காட்டி, முல்லை அரும்பு போன்ற பற்களைக் காட்டி, அமுதம் ஊறுகின்ற பேச்சு என்னும் இனிமையைக் காட்டி,
  • விழி ஆகிய கணையும் காட்டி முகம் ஆகிய கமலம் காட்டி மலை போலே வகையாம் இள முலையும் காட்டி இடை ஆகிய கொடியும் காட்டி
    கண் என்னும் அம்பைக் காட்டி, முகம் என்னும் தாமரையைக் காட்டி, மலை போல ஒழுங்குள்ள இளமையான மார்பகத்தைக் காட்டி, இடை என்னும் கொடியைக் காட்டி,
  • வளமான கை வளையும் காட்டி இதமான மணி சேர் கடிதடமும் காட்டி மிகவே தொழில் அதிகம் காட்டும் மட மாதர்கள் மயலின் சேற்றில் உழல்வேனோ
    வளப்பம் பொருந்திய கை வளையல்களைக் காட்டி, இன்பம் தருவதான, அழகு வாய்ந்த பெண்குறியைக் காட்டி, (தங்கள்) தொழிலை மிக அதிகமாகக் காட்டும் அழகிய (விலை) மாதர்களின் மயக்கச் சேற்றில் அலைவேனோ?
  • நகையால் மதன் உருவம் தீத்த சிவனார் அருள் சுதன் என்று ஆர்க்கு(ம்) நலனே அருள் அமர் செந்தூர்க்குள் உறைவோனே
    புன்சிரிப்பால் மன்மதனுடைய உருவத்தை எரித்து அழித்த சிவபெருமான் அருளிய பிள்ளை என்று விளங்கி, யாவர்க்கும் நன்மையே அருள் செய்து வீற்றிருக்கும் திருச்செந்தூரில் உறைபவனே,
  • நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின் சேர்க்கை நழுவா வகை பிரியம் காட்டும் முருகோனே
    ஒன்பது சிறந்த மணிகளால் ஆகிய மாலை தோன்றும் மார்பகத்தை உடைய மாதாகிய, யானை மகள் மின்னலைப் போன்ற அழகுடைய தேவயானையின் சேர்க்கையை நழுவ விடாமல் அன்பு காட்டும் முருகனே,
  • அகம் மேவிய நிருதன் போர்க்கு வரவே சமர் புரியும் தோற்றம் அறியாமலும் அபயம் காட்டி முறை கூறி அயிராவதம் முதுகின் தோற்றி அடையாம் என இனிது அன்பு ஏத்தும் அமரேசனை முழுதும் காத்த பெருமாளே.
    அகங்காரம் கொண்ட அசுரனாகிய சூரன் சண்டைக்கு வரவும், போர் புரியும் எண்ணம் உன் மனத்தில் உதிக்கும் முன்னே அபயம் தந்து, உன்னிடம் முறையிட்டு, ஐராவதம் ஆகிய யானையின் முதுகின் மேல் விளங்குபவனும் (நாங்கள்) அடைக்கலம் எனக் கூறி இனிமையுடனும் அன்புடனும் போற்றியவனுமாகிய தேவர்கள் தலைவனான இந்திரனை முழுமையும் காத்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com