தான தானன தந்தன தந்தன
தான தானன தந்தன தந்தன
தான தானன தந்தன தந்தன ...... தனதானா
மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில்
மூடு சீலைதி றந்தம ழுங்கிகள்
வாசல் தோறுந டந்துசி ணுங்கிகள் ...... பழையோர்மேல்
வால நேசநி னைந்தழு வம்பிகள்
ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்
வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக ...... ளெவரேனும்
நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள்
காசி லாதவர் தங்களை யன்பற
நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ...... ளவர்தாய்மார்
நீலி நாடக மும்பயில் மண்டைகள்
பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள்
நீச ரோடுமி ணங்குக டம்பிக ...... ளுறவாமோ
பாயு மாமத தந்திமு கம்பெறு
மாதி பாரத மென்றபெ ருங்கதை
பார மேருவி லன்றுவ ரைந்தவ ...... னிளையோனே
பாவை யாள்குற மங்கைசெ ழுந்தன
பார மீதில ணைந்துமு யங்கிய
பாக மாகிய சந்தன குங்கும ...... மணிமார்பா
சீய மாயுரு வங்கொடு வந்தசு
ரேசன் மார்பையி டந்துப சுங்குடர்
சேர வாரிய ணிந்தநெ டும்புயன் ...... மருகோனே
தேனு லாவுக டம்பம ணிந்தகி
ரீட சேகர சங்கரர் தந்தருள்
தேவ நாயக செந்திலு கந்தருள் ...... பெருமாளே.
- மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில் மூடு சீலை திறந்த
மழுங்கிகள் வாசல் தோறும் நடந்து சிணுங்கிகள்
மாய வாசனைகள் பூசப்பட்ட மார்பகங்களை மறைக்கின்ற புடைவையைத் திறந்து காட்டும், நாணம் அற்றவர்கள். (பலர் வீட்டு) வாசல்கள் தோறும் நடந்து மூக்கால் அழுகை கொள்பவர்கள். - பழையோர் மேல் வால நேச(ம்) நினைந்து அழு(ம்) வம்பிகள்
ஆசை நோய் கொள் மருந்து இடு(ம்) சண்டிகள்
பழைய வாடிக்கையாளர்கள் மீது வாலிபத்தில் தாம் வைத்த நேசத்தை நினைத்து அழும் வம்புக்காரிகள். ஆசை நோயைத் தரக் கூடிய மருந்தைக் கலந்து இடுகின்ற கொடியோர்கள். - வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள் எவரேனும் நேயமே
கவி கொண்டு சொல் மிண்டிகள்
வருகின்ற பேர்வழிகளிடம் உள்ள பொருளைப் பார்த்து விருப்பம் கொள்ளுபவர்கள். யாராயிருந்தாலும் நேசத்தை பாடல் மூலமாகச் சொல்லுகின்ற திண்ணிய மனத்தினர். - காசு இலாதவர் தங்களை அன்பு அற நீதி போல நெகிழ்ந்த
பறம்பிகள் அவர் தாய்மார் நீலி நாடகமும் பயில்
மண்டைகள்
பொருள் இல்லாதவர்களை இரக்கம் இல்லாமல், நீதியுடன் பேசுவதைப் போலப் பேசி, நழுவ விட்டு விலக்கும் மோசக்காரிகள். அவர்களுடைய தாய்மார்கள் நீலி நாடகம் நடிக்கின்ற வேசைகள். - பாளை ஊறு கள் உண்டிடு தொண்டிகள் நீசரோடும்
இணங்கு(ம்) கடம்பிகள் உறவாமோ
தென்னம் பாளையில் ஊறும் கள்ளைக் குடிக்கும் விலைமாதர்கள். இழிந்தவர்களோடும் கூடுகின்ற கெட்டவர்கள் ஆகிய இத்தகையருடைய நட்பு நன்றாகுமோ? - பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும்
கதை பார மேருவில் அன்று வரைந்தவன் இளையோனே
மிகுந்து பாய்கின்ற மதம் கொண்ட யானையின் முகத்தைக் கொண்ட முதல்வரும், பாரதம் என்ற பெரிய கதையை பாரமான மேரு மலையில் அந்நாள் (தன் ஒடிந்த தந்தத்தால்) எழுதியவருமான கணபதிக்கு தம்பியே, - பாவையாள் குற மங்கை செழும் தன பார(ம்) மீதில்
அணைந்து முயங்கிய பாகமாகிய சந்தன குங்கும மணி
மார்பா
பதுமை போன்றவளும், குறப் பெண்ணுமாகிய வள்ளியின் செழுவிய தன பாரத்தின் மேல் அணைந்து தழுவினதால், தனது பங்காகக் கிடைத்த சந்தன குங்குமங்கள் உள்ள அழகிய மார்பனே, - சீயமாய் உருவம் கொ(ண்)டு வந்து அசுரேசன் மார்பை
இடந்து பசும் குடர் சேர வாரி அணிந்த நெடும் புயன்
மருகோனே
சிங்கத்தின் உருவத்தைப் பூண்டு வந்து, அசுரர் தலைவனாகிய இரணியனுடைய மார்பைப் பிளந்து பசிய குடலை ஒரு சேர வாரி மாலையாக அணிந்து கொண்ட நெடிய மேகம் போன்ற திருமாலின் மருகனே, - தேன் உலாவு கடம்பம் அணிந்த கிரீட சேகர சங்கரர் தந்து
அருள் தேவ நாயக செந்தில் உகந்து அருள் பெருமாளே.
தேன் ஒழுகும் கடம்ப மாலை அணிந்த கீரிடத்தை முடி மீது கொண்டவனே, சங்கரர் தந்தருளிய தேவ நாயகனே, திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றருளும் பெருமாளே.