தந்தனா தத்தத் ...... தனதான
பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர்
பங்கமார் தொக்கிற் ...... படியாமற்
செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன்
செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ
பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர்
பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா
குஞ்சரீ வெற்புத் ...... தனநேயா
கும்பகோ ணத்திற் ...... பெருமாளே.
- பஞ்சுசேர் நிர்த்தப் பதமாதர்
பஞ்சு போல் மென்மையான பாதங்களை, நடனம் ஆடும் பாதங்களை உடைய மாதர்களின் - பங்கமார் தொக்கிற் படியாமல்
குற்றம் நிறைந்த உடம்புத் தோலில் நான் வீழ்ந்து விடாமல், - செஞ்சொல்சேர் சித்ரத் தமிழால்
தேர்ந்தெடுத்த சொற்கள் அமைந்துள்ள அழகிய தமிழால் பாடல்களைப் பாடி - உன்செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ
செம்பொன்னுக்கு நிகரான உனது அன்பைப் பெற மாட்டேனோ? - பஞ்சபாணத்தற் பொருதேவர்
ஐந்து மலர்ப் பாணங்களைக் கொண்ட மன்மதனைச் சுட்டெரித்த தேவராகிய சிவபிரானின் - பங்கில்வாழ் சத்திக் குமரேசா
இடப்பாகத்தில் வாழ்கின்ற பராசக்தியின் குமரனாம் ஈசனே, - குஞ்சரீ வெற்புத் தனநேயா
ஐராவதம் என்னும் யானை வளர்த்த தேவயானையின் மலை போன்ற மார்பை நேசித்தவனே, - கும்பகோ ணத்திற் பெருமாளே.
கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.