திருப்புகழ் 867 மாலைதனில் வந்து (கும்பகோணம்)

தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த ...... தனதான
மாலைதனில்  வந்து  வீதிதனில்  நின்று 
வாசமலர்  சிந்து  ......  குழல்கோதி 
வாரிருத  னங்கள்  பூணொடுகு  லுங்க 
மால்பெருகி  நின்ற  ......  மடவாரைச் 
சாலைவழி  வந்து  போமவர்க  ணின்று 
தாழ்குழல்கள்  கண்டு  ......  தடுமாறித் 
தாகமயல்  கொண்டு  மாலிருள  ழுந்தி 
சாலமிக  நொந்து  ......  தவியாமற் 
காலையிலெ  ழுந்து  னாமமெமொ  ழிந்து 
காதலுமை  மைந்த  ......  எனவோதிக் 
காலமுமு  ணர்ந்து  ஞானவெளி  கண்கள் 
காண  அரு  ளென்று  ......  பெறுவேனோ 
கோலமுட  னன்று  சூர்படையின்  முன்பு 
கோபமுட  னின்ற  ......  குமரேசா 
கோதையிரு  பங்கின்  மேவவளர்  கும்ப 
கோணநகர்  வந்த  ......  பெருமாளே. 
  • மாலை தனில் வந்து வீதி தனில் நின்று வாச மலர் சிந்து குழல் கோதி
    மாலைப் பொழுதில் வந்து வீதியில் நின்று நறு மணம் வீசும் கூந்தலை விரித்துச் சிக்கெடுத்து,
  • வார் இரு தனங்கள் பூணொடு குலுங்க மால் பெருகி நின்ற மடவாரை
    கச்சு அணிந்த இரண்டு மார்பகங்களும் (அணிந்துள்ள) ஆபரணங்களுடன் குலுங்க, காமம் பெருகி நின்ற விலைமாதர்களை,
  • சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறித் தாக மயல் கொண்டு மால் இருள் அழுந்தி சால மிக நொந்து தவியாமல்
    தெருவின் வழியே வந்து போகின்ற ஆடவர்கள் கண்டு, (அம்மாதர்களின்) தாழ்ந்து தொங்கும் கூந்தலைப் பார்த்து தடுமாறி காம மயக்கம் கொண்டு, ஆசை இருளில் அழுந்தி மிகமிக மனம் தவிப்பு உறாமல்,
  • காலையில் எழுந்து உன் நாமமெ மொழிந்து காதல் உமை மைந்த என ஓதி
    காலையில் எழுந்து உனது திரு நாமங்களைக் கூறி, அன்பார்ந்த உமையின் குமரனே என்று ஓதித் துதித்து,
  • காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள் காண அருள் என்று பெறுவேனோ
    (முக்காலங்களையும்) உணரும்படியான ஞானாகாச வெளியை நான் ஞானக் கண் கொண்டு காண, உன்னுடைய அருளை என்று பெறுவேனோ?
  • கோலமுடன் அன்று சூர் படையின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசா
    போர்க் கோலத்துடன் அன்று சூரர்களுடைய சேனைகளின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசனே,
  • கோதை இரு பங்கின் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே.
    (வள்ளி, தேவயானை ஆகிய) மாதர்கள் இருவரும் இரண்டு பக்கங்களிலும் விளங்க, (கல்வி, செல்வம்) வளரும் கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com